வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sasikala

கழுத்து பகுதியில் ஏற்படும் எலும்பு தேய்மானதிற்கான காரணங்கள் என்ன...?

செர்விகள் ஸ்பாண்டலிசிஸ்“ என்ற கழுத்தெலும்பு தேய்மானம் சமீப காலங்களில் மிகவும் அதிகரித்திருக்கிறது. இது கழுத்தில் உள்ள சவ்வும், எலும்புகளும் தேய்கிற ஒரு நிலை. பலரின் நாட்பட்ட வலிக்கு இது காரணமாக இருக்கிறது. கழுத்தெலும்பு அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தால் இது ஏற்படுகிறது.

கழுத்தில் 2 எலும்புகளுக்கு இடையே சவ்வு போன்ற பொருள் உண்டு. சில நேரங்களில் அந்த எலும்பு அதீத வளர்ச்சியால் துருத்திக்கொள்ளும். இந்தத் துருத்தி கொள்ளும் பகுதி, கழுத்தில் இருந்து வெளிவருகிற நரம்பு மண்டலத்தை அழுத்தும். சில நேரங்களில் தண்டுவடமும் அழுத்தப்படலாம். இந்த நேரங்களில் கை  மட்டுமல்லாமல் காலும் பாதிக்கப்படலாம். 
 
தினமும் இவ்வாறு கழுத்தை தவறான நிலையில் வைப்பதால், தேய்வுநிலை ஏற்படலாம். அதிக வேலைப்பளு உள்ளவர்கள், விளையாட்டில் அதிக கவனம்  செலுத்துபவர்களை இது பாதிக்கலாம். 60 வயது ஆகும் போது அனைவருக்குமே எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தால், கழுத்தெலும்பு தேய்மானம் காணப்பட வாய்ப்பு உண்டு.
 
அதிகமாக உடல் பருமன், உடற்பயிற்சியே செய்யாமல் இருப்பது, கனமான பொருட்களை தூக்குவது, கழுத்தை அடிக்கடி முன்பின் அசைப்பது, வளைப்பது, கழுத்தில்  அடிபடுவது, சிறு வயதில் அடிபட்டு கவனிக்காமல் விட்டுவிடுவது, கழுத்து தண்டுவட அறுவை சிகிச்சை, கழுத்தில் இருக்கிற சவ்வு பிதுங்குதல், கழுத்தில் வாத நீர்  வருவது, கழுத்தில் கனத்தன்மை குறைகிற நோய் தோன்றுவது போன்ற காரணங்களும் உண்டு.
 
இந்த நோய்க்கான அறிகுறிகள் மெதுவாக தோன்றும். சில நேரம் திடீரென்று கடும் வலியை உண்டாக்கும். வலி லேசானதாகவோ, கடுமையானதாகவோ இருக்கும்.  கழுத்தை அசைக்க முடியாமல் போகும். கை தசைகளில் பலம் குறையும். கையை தூக்குவதில் சிரமம் ஏற்படும். துணியை பிழிவதில் சிரமம் ஏற்படும். 
 
கைகளில் தசைகள் இறுகிப் போகும். கைகளில் மரத்துப் போகும் தன்மை ஏற்படும். சிலருக்கு தலைவலி ஏற்படலாம். நடக்கும்போது தள்ளாட்டம் வரலாம். பதற்றமான சூழ்நிலைகளில் சிறுநீர், மலம் கட்டுப் பாடின்றிப்போகும். தண்டுவடம் பாதிக்கப் பட்டிருந்தாலும் இவ்வாறு ஏற்பட வாய்புள்ளது.