திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By

கோடைக்கு ஏற்ற ஆரோக்கிய பானங்கள் தயாரிப்பது எப்படி?

1. கிர்ணி ஜூஸ்
 
தேவையானவை: கிர்ணிப்பழம் - 1, பால் - 500 மில்லி, சர்க்கரை - 100 கிராம்.
 
செய்முறை: கிர்ணிப் பழத்தை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். காய்ச்சி, ஆற வைத்த பாலை  சேர்த்துக் கலக்கவும். பரிமாறும் முன் ஐஸ் க்யூப் சேர்த்துப் பரிமாறலாம். குறிப்பு: கிர்ணிப் பழத் துண்டுகளுடன் வெல்லம் சேர்த்தும் சாப்பிடலாம். உடல்  சூட்டைத் தணிக்கும்.
 
2. மாதுளை ஜூஸ்
 
தேவையானவை: மாதுளம் பழம் - 1, சர்க்கரை - 100 கிராம், தேன் - 2 டீஸ்பூன், பால் - ஒரு கப்.
 
செய்முறை: மாதுளம் பழத்தை தோல் உரித்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். சர்க்கரை, தேன் சேர்த்து நன்கு கலக்கவும். பரிமாறுவதற்கு முன், காய்ச்சி  ஆற வைத்த பால், ஐஸ் க்யூப் சேர்த்துக் கலந்து பரிமாறவும். பால் விரும்பாதவர்கள் அதைச் சேர்க்காமலும் பருகலாம். குறிப்பு: இந்த ஜூஸில் இரும்புச் சத்து, விட்டமின் சத்து அதிகம். தயாரித்த உடனேயே சாப்பிடுவது சிறந்தது. பித்தத்தைக் குறைக்கும்.
3. ஜிஞ்சர் மோர்
 
தேவையானவை: மோர் - 500 மில்லி, பச்சை மிளகாய் - 1, இஞ்சி - சிறு துண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லி - சிறிதளவு, பெருங்காயத்தூள் - ஒரு  சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.
 
செய்முறை: இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். மோருடன் அரைத்த விழுது, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்துமல்லியைப் போட்டுக் கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால் ஐஸ் க்யூப் சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பு: இதில் சேர்க்கப் பட்டிருக்கும் கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவை வியர்வையினால் வீணாகும் சத்துக்களை சமன்படுத்தும்.