தனி அறைக்குள் அழைத்து சென்று.. பள்ளியில் வன்கொடுமை! – பாரிஸ் ஹில்டன் பரபரப்பு குற்றச்சாட்டு!
பிரபல நடிகையான பாரிஸ் ஹில்டன் தான் பள்ளியில் படிக்கும்போது தனக்கு பாலியல் கொடுமைகள் நடந்ததாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாலிவுட்டில் பிரபலமான நடிகை, பாப் சிங்கர், மாடல், தொழிலதிபர் என பல முகங்களை கொண்டவர் பாரிஸ் ஹில்டன். அமெரிக்காவின் பிரபல நிறுவனமாக ஹில்டன் ஓட்டல்கள் நிறுவனத்தின் நிறுவனர் கான்ராட் ஹில்டனின் பேத்திதான் இவர்.
சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த அவர் தனக்கு சிறுவயதில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் தனது 17வது வயதில் ப்ரோவா கேன்யன் என்ற தங்கும் பள்ளியில் தங்கி படித்து வந்ததாக கூறியுள்ளார்.
அப்போது அதிகாலை 3 அல்லது 4 மணி போல வந்து இரண்டு ஆண்கள் பாரிஸ் மற்றும் அவரது சில தோழிகளை அழைத்து தனியறைக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் அவர்களது பிறப்புறுப்பில் கைகளை நுழைப்பார்கள் என்றும், ஆனால் அவர்கள் மருத்துவர்கள் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அது நிச்சயமாக பாலியல் கொடுமைதான் என கூறியுள்ளார். அவருக்கு நடந்த நிகழ்வுகள் குறித்து முழுமையாக அவர் பேசியுள்ள சம்பவங்கள் கேட்பவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துபவையாக உள்ளன.
இந்த பேட்டியை தொடர்ந்து சிறார்களுக்கு பள்ளிகள், வீடுகளில் அளிக்கப்படும் பாலியல் தொல்லைகள் குறித்த பெரும் விவாதம் எழுந்துள்ளது.
Edited By: Prasanth.K