1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 21 ஆகஸ்ட் 2021 (11:02 IST)

ஓணம் பண்டிகையின்போது அத்தப்பூ கோலம் ஏன் போடப்படுகிறது?

கேரளாவில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் ஒரு அங்கமாக உள்ள அத்தப்பூ கோலம். சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து பெண்களால் ஆராதிக்கப்படுகிறது. 
 
அத்தப்பூ கோலம் ஏன் போடப்படுகிறது என்பதற்கு நீண்ட புராணக் கதை இருக்கிறது. தங்கள் வீடு தேடி வரும் மகாபலி அரசனை வரவேற்கவே விதவிதமான பூக்களில் அத்தப்பூ கோலமிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் கேரளப் பெண்கள். 
 
அத்தப்பூ என்ற பூவைப் பறித்து பூக்கோலத்தில் முதலில் வைக்க வேண்டும் என்பதே அத்தப்பூ கோலம் போடுவதின் ஐதீகம். கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் என்பதால் பூக்களின் திருவிழாவாக ஓணத் திருநாள் பார்க்கப்படுகிறது. மொத்தம் பத்து நாட்கள் களைகட்டும் ஓணம் பண்டிகையின் முதல் நாள்  அத்தப்பூ கோலத்துடன்தான் தொடங்கும். தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தைப் பெண்கள் அழகுபடுத்துவார்கள்.
 
முதல் நாள் ஒரு வகை, இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் கோலத்தை  அழகுபடுத்துவார்கள். பத்தாம் நாள், பூக்கோலத்தின் அளவு கொஞ்சம் பெரியதாக இருக்கும்.
 
அத்தப்பூ இடுவதற்காகத் தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற  பூக்களை அதிகம் பயன்படுத்துவார்கள். இந்த மலர்கள் கோலத்தை வண்ணமயமாய்க் காட்டும்.