தெய்வீக மணம் கமழும் அம்மனுக்கு பிடித்த ஆடி மாதம்!
தெய்வீக மணம் கமழும் மாதமாக ஆடி மாதம் திகழ்கிறது. இந்த மாதத்தை ‘அம்மன் மாதம்’ என்றே அழைக்கிறார்கள். அந்தளவுக்கு அம்மன், அம்பாள், சக்தி ஸ்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த பூஜைகள், ஹோமங்கள், உற்சவங்கள், பால் அபிஷேகம், பூச்சொரிதல் போன்றவை விமரிசையாக நடக்கும். அதிலும் ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக் கிழமைகள் மிகவும் சிறப்பு மிக்கவை.
கோயில்களில் மட்டுமின்றி வீடுகள்தோறும் விரதம் இருந்து வேப்பிலை தோரணம் கட்டி அம்மனை வழிபட்டு நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி கூழ் ஊற்றுவார்கள். இந்த ஆடி மாதம் முழுவதும் அனைவரது வீட்டிலும் பக்தி மணம் கமழும். குறிப்பாக பெண்கள் இந்த மாதம் முழுவதும் விரதம் இருந்து தங்கள் வீட்டின் அருகில், தங்கள் ஊரின் அருகில் உள்ள அம்மன் ஸ்தலங்களுக்கு சென்று வருவார்கள். அந்த வகையில் அருகில் உள்ள தலங்களை சென்று தரிசிப்பது மிகவும் விசேஷமாகும்.
பூமாதேவி பூமியில் அவதரித்த மாதம் ஆடி மாதம். பார்வதியின் தவத்தை மெச்சி பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். சிவனுடைய சக்தியை விட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதம் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கம் ஆகி விடுகிறார் என்பது ஐதீகம்.
ஆடி மாத விழா:
ஆடி மாதத்தில் கிராமங்களிலும். நகரங்களிலும் மிக கோலாகலமாக அம்மனை வழிபடுகிறார்கள். ஆடி மாதம் வந்தாலே வரிசையாக விழாக்கள் வருவதை காணலாம். ஆடி பூரம், ஆடி பெருக்கு, விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி, வரலட்சுமி விரதம். நவராத்திரி, ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
ஆடி வெள்ளியில் அம்மனுக்கு கூழ் காய்ச்சி வழிபாடு செய்து மக்களுக்கு கொடுக்கிறார்கள். நல்ல மழை வேண்டி, உடல் நலம் வேண்டி நம் முன்னோர்கள் அம்மனுக்கு வழிபாடு செய்தார்கள். அம்மனுக்கு பிடித்தமானவை வேம்பு, எலுமிச்சை, கூழ். இவை உடல் நலத்திற்கும், வியாதியை தடுப்பதற்கும் உதவுகின்றன.