திருச்செந்தூர் கோவிலில் தைப்பூசம்: பூஜை நேரங்கள் மாற்றம்..!
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் தைப்பூசத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்கள் இதோ:
திருச்செந்தூர் கோவில் உற்சவரான சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்டு 370 வருடங்கள் ஆகிறது. அதை கொண்டாடும் வகையில் சண்முகர் ஆண்டு விழா வருகிற 10-ந்தேதி நடக்கிறது.
அதை முன்னிட்டு அன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்,10 மணிக்கு சண்முகர் அபிஷேகம்,மாலை 3 மணிக்கு பிரதோஷ அபிஷேகம், 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதி உலா வந்து கோவில் சேர்தல், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
வருகிற 11-ந் தேதி (செவ்வாய் கிழமை) தைப்பூச திருவிழா நடக்கிறது. தைப்பூசத்தை முன்னிட்டு அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்,காலை 6 மணியில் இருந்து 6.30 மணிக்குள் தீர்த்தவாரி நடக்கிறது.
10 மணிக்கு சண்முகர் அபிஷேகம், பகல் 1 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் தைப்பூச மண்டபத்துக்கு புறப்படுதல், மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.",
Edited by Mahendran