செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2022 (12:26 IST)

மஹா விஷ்ணுவின் அம்சமாக உள்ள சாளக்கிராமம் !!

Salakiramam
சாளக்கிராமம் என்பது கருமை நிறத்தில் உள்ள ஒரு புனிதமான கல். சாளக்கிராமம் மிகவும் புனிதமானதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.


நத்தைக் கூடு, சங்கு, நட்சத்திரம் என்று பல்வேறு வடிவங்களில் கிடைக்கும் இந்த சாளக்கிராம கல், புனிதமான கண்டகி நதிக்கரையில் கிடைப்பதால் தோஷம் இல்லாதது. சாளக்கிராமம் என்பது ஒரு வகையான அழகிய தெய்வீக அம்சம் நிறைந்த கல் ஆகும்.

ஸ்ரீமஹா விஷ்ணு தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்னும் பூச்சியாக வடிவெடுத்து, சாளக்கிராமத்தை குடைந்து, அதன் கர்ப்பத்தை அடைவார்.

அங்கு ரீங்கார வடிவில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பல விதமான சுருள் ரேகையுடன் கூடிய பல சக்கரங்களை வரைந்து பல்வேறு அவதாரங்களை விளையாட்டாக வரைந்து பின் மறைந்து விடுவதாக கூறுவர். இப்படிப்பட்ட வடிவங்கள் தான் வணங்கிட உகந்தவையாகும்.

சாளக்கிராம கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. பன்நெடுங்காலங்களாகவே சாளக்கிராமக் கற்களை கோயில்கள், மடங்கள் மற்றும் வீடுகளில் வைத்து வழிப்பட்டு வருகிறார்கள்.

பல்வேறு வடிவங்களில் சாளக்கிராம கற்களை கிடைப்பதைப் போலவே ஒவ்வொரு வடிவத்தைப் பொறுத்தும் சாளக்கிராமத்தின் வகைகளும் வேறுபடும்.

லஷ்மி நாராயண சாளக்கிராமம், லட்சுமி ஜனார்த்தன சாளக்கிராமம், ரகுநாத சாளக்கிராமம், வாமன சாளக்கிராமம், ஸ்ரீதர சாளக்கிராமம், தாமோதர சாளக்கிராமம், ராஜ ராஜேஸ்வர சாளக்கிராமம், ரணராக சாளக்கிராமம், மதுசூதன சாளக்கிராமம், சுதர்சன சாளக்கிராமம் என்று 168 வகையான சாளக்கிராமங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

சாளக்கிராமம் வைத்து வழிபடுகின்ற வீட்டில் சகல தெய்வ சக்திகளும் அருள் செய்வதாக ஆசார்யர்கள் கூறுகின்றனர். வலம்புரி சங்கை போல் பலமடங்கு மிகவும் அரிய பலன்களை தரக் கூடியது இந்த சாளக்கிராமம்.

சாளக்கிராமத்தை ஒரு நாளில் இருமுறை வழிபட வேண்டும். சாளக்கிராமம் பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டியது. பூஜை அறையில் வைத்து தினமும் பாலாபிஷேகம், ஜலாபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.