மகரவிளக்கு பூஜை: சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை நவம்பர் 16-ந்தேதி தொடங்கி கடந்த 26-ந்தேதி வரை சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் மண்டல பூஜை முடிந்து இப்போது, மகர விளக்கு பூஜைக்காக நாளை (30-ந்தேதி) கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது. சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு மற்றும் கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நாளை மாலை 5 மணிக்கு கோவிலின் நடையை திறப்பார்.
அதன் பிறகு, பதினெட்டாம் படி அருகிலுள்ள ஆழியில் தீ மூட்டப்படும். அதன் தொடர்ச்சியாக, பக்தர்கள் பதினெட்டாம் படி ஏற அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஆண்டுக்கான மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ந்தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை ஐயப்பனுக்கு திருவாபாரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நிகழும். அதனைத் தொடர்ந்து மகர ஜோதி தரிசனம் நடைபெறும்.
மகர விளக்கு பூஜையையொட்டி, ஜனவரி 19-ந்தேதி வரை பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். 18-ந்தேதி வரை நெய்யபிஷேகம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 20-ந்தேதி காலை பந்தள மன்னர் பிரதிநிதி சாமி தரிசனம் செய்ததும், கோவில் நடை மீண்டும் சாத்தப்படுகிறது.
மண்டல பூஜை காலத்தில் பம்பையில் 7 ஸ்பாட் புக்கிங் கவுண்டர்கள் இருந்த நிலையில், மகர விளக்கு பூஜைக்காக இந்த எண்ணிக்கை 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறப்பு கவுண்டர் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, பத்தினம் திட்டாவில் தேவசம்போர்டு மந்திரி வாசவன் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
Edited by Mahendran