மாசி மாத அமாவாசையில் மயான கொள்ளை பூஜை
மாசி மாத அமாவாசை தினத்தில், "மயான கொள்ளை' விழா, பொதுமக்களால் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். சிவராத்திரி முடிந்த பின் வரும் அமாவாசை நாளில் மயான கொள்ளை நிகழ்ச்சி பெரும்பான்மையான இந்து மயானங்களில் நடக்கிறது.
இறந்த பிணங்களின் சாம்பல், மண் ஆகியவற்றால் 3 அல்லது 4 மீட்டர் நீளமுள்ள அம்மன் (பார்வதி) உருவம் படுத்திருப்பது போல் அழகுற செய்யப்படுகிறது. அன்று மாலை பூவால் செய்யப்பட்ட கரகம் சோடித்து, இரவு முழுவதும் அம்மன் ஊர்வலம் நடைபெறுகிறது. பின்னர் விடியற்காலையில் மயானத்திற்குச் சென்று அம்மனுக்குக் கண் திறந்து பம்பைக்காரர்கள் பாடல் பாடுவர்.
காளி வேடமிட்டு கொண்டு நேர்த்திக் கடன் வேண்டியவர்கள் ஆடி வருவார்கள். புடவை கட்டி, முகத்தில் சிகப்பு வண்ணம் பூசி, நீண்ட முடியுடன் ஒப்பனை செய்திருப்பர். அவர்களுள் ஒருவர் ஆட்டு ஈரல், எலும்பு துண்டுகள் போன்றவற்றை வாயில் கவ்வி கையில் தீச்சட்டி ஏந்தி வருவார். சேவல் பலி, பூசை, ஊர்வலம், முடிந்த பிறகு பூசாரி ஒப்பனை செய்துகொண்டு படுத்திருக்கும் அம்மன் தலைமீது ஆவேசமுற்று விழுவார்.
அப்போது அங்கு கூடியிருக்கும் மக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த முருங்கைக்காய், மஞ்சள், கொழுக்கட்டை அதாவது வெண்டுதல் பொருள்களை ஆகியவற்றை வான்நோக்கி வீசுவார்கள். அதை தங்கள் கைகளில் பிடிக்க மக்கள் முயற்சி செய்வார்கள். பூசாரி அம்மன் தலை மீது விழுந்தவுடன் அம்மன் உருவம் சிதைக்கப்படுகிறது. பின்னர் அம்மனை உருவாக்கியிருக்கும் சாம்பல், மண் போன்றவற்றைச் சண்டை போட்டுக் கொண்டு மக்கள் கொள்ளையடிக்கிறார்கள்.
அப்போது எடுக்கப்படும் மண் அல்லது சாம்பல் தீய சக்திகளையும், நோய்களையும் விரட்டும் ஆற்றல் வாய்ந்ததாகவும் மக்களால் நம்பப்படுகிறது.