சஷ்டி விரதத்தின் சிறப்புக்களும் அதன் பலன்களும் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!
சஷ்டி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்ட காலக்கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒருமுறை வரும் ஒரு நாளை குறிக்கிறது. இந்த நாட்கள் பொதுவாக திதி என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.
அமாவாசை நாளுக்கும், பௌர்ணமி நாளுக்கும் அடுத்து வரும் ஆறாவது நாள் சஷ்டி ஆகும். அமாவாசையை அடுத்துவரும் சஷ்டியை சுக்லபட்ச சஷ்டி (அ) வளர்பிறை சஷ்டி என்றும், பௌர்ணமியை அடுத்துவரும் சஷ்டி கிருஷ்ணபட்ச சஷ்டி (அ) தேய்பிறை சஷ்டி என்றும் அழைக்கப்படுகிறது.
திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு. ஐஸ்வர்யத்தை தரக்கூடியது 6 என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது. ஜோதிடத்தில் 6ஆம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார்.
திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக்கூடியவரும் சுக்கிரன்தான். எனவே சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம். 16 பேறுகளில் ஒன்றாகவே குழந்தைப்பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு.
இந்த திருநாளில் குழந்தை செல்வத்திற்காக ஏங்கி காத்திருக்கும் பெண்கள் விரதமிருந்து முருகப் பெருமானை மனமுருகி பிரார்த்தனை செய்திட மன மற்றும் உடல் குறைபாடுகள் நீங்கி குழந்தை வரம் கிடைக்கும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை. நீண்ட நாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விரதத்தை தொடர்ந்து மேற்கொள்ள அந்நோய்கள் படிப்படியாக நீங்கி விடும். இத்துடன் நீடித்த செல்வமும், வெற்றியடையும் யோகமும் கிட்டும்.