வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (15:55 IST)

ஆடி வெள்ளியில் அம்மன் வழிபாட்டு பலன்கள் !!

Aadi Velli
ஆடி வெள்ளி நாளன்று மஞ்சள் தேய்த்துநீராடி மாக்கோலம் போட்டு திருவிளக்கின் ஐந்து முகங்களையும் ஏற்றி லலிதா சகஸ்ர நாமம், அம்மன் பாடல்களை பாடி பூஜை செய்தால் நல்ல பலன் கிட்டும்.


வயதுக்கு வராத சிறு பெண்களை அம்மனாக பாவித்து அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு மஞ்சள் குங்குமம் அட்சதை சீட்டு, தோடு, கண்ணாடி வளையல், ரவிக்கை ஆகிய ஒன்பது பொருட்களையும் தட்சிணையுடன் வைத்து கொடுத்து அன்னமிடல் வெகு சிறப்பான பலன் தரும். ஏன் ஒன்பது பொருட்கள் கொடுக்க வேண்டும் என்பதற்கு தேவி பாகவதம் விளக்கம் அளிக்கிறது.

அம்பிகையின் அம்சமாக சர்வபூதகமணி, மனோன்மணி, பலப்பிதமணி, நலவிகாரிணி, கலவிகாரிணி காளி ரவுத்திரி, சேட்டை, வாமை, ஆகிய நவ சக்திகளையும் சொல்வார். இந்த நவசக்தியரை குறிக்கும் வகையில் பெண் குழந்தைகளுக்கு ஒன்பது புனித பொருட்கள் வைத்து கொடுத்தல் வழக்கத்துக்கு வந்தது.

ஆடி வெள்ளி அன்று சில குறிப்பிட்ட அம்மன் ஆலயங்களில் நவசக்தி பூஜை நடைபெறும். ஒன்பது வகையான மலர்களால் ஒன்பது சக்திகளையும் ஒரே நேரத்தில் ஒன்பது சிவாச்சாரியார்கள் அர்ச்சிப்பதே நவசக்தி பூஜை எனப்படும். இது மிகுந்த பலனளிக்க கூடியதாகும்.

சக்தி பீடங்களில் ஒன்றென கருதப்படும் திருவானைக்காவல்  ஜம்புகேசுவரர் கோயிலில் ஆடி வெள்ளி மிகவும் விசேஷமாகும். இங்கு அம்மன் மாணவியாக இருக்க ஈசனே குருவாக இருந்து உபதேசம் செய்தருளினார். அதனால் பள்ளிக்குழந்தைகள் இங்கு ஆடி வெள்ளி அன்று வேண்டிக்கொண்டால் ஞாபக சக்தி மிகுந்து வரும். ஆடி வெள்ளி ராகு காலத்தில் துர்க்கைக்கு நெய் விளக்கேற்ற, வாழ்வு ஒளி பெறும்.