தீர்க்க சுமங்கலி பாக்கியம் தரும் வரலட்சுமி விரதம் !!
வரலட்சுமி பூஜையைச் செய்ய, சகல செல்வங்களுடனும் தாலிபாக்கியத்துடனும் வாழலாம் என்பது உறுதி. வீட்டில் அம்பாள் விக்கிரகத்தை வைத்துக்கொண்டோ அல்லது கலசத்தில் அம்பாளை ஆவாஹனம் செய்தோ, முதல்நாளான வியாழக்கிழமையில், அம்பாளை நம் வீட்டுக்கு அழைக்க வேண்டும்.
அப்படி அம்பாள் அழைப்புக்கு முன்னதாக, பூஜையறையைச் சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். பூஜை செய்யுமிடத்தில், அம்பாளைக் கொண்டு வந்து வைக்குமிடத்தில், கலசம் வைக்குமிடத்தில், மாக்கோலமிடலாம். காவிக்கோலமிடலாம். மாலையில், சூரிய அஸ்தமனாகிற வேளையில், கலசத்தில் அம்பாளை ஆவாஹனம் செய்து அழைத்து வந்து, பூஜையறையில் கோலமிட்ட இடத்தில் வைக்க வேண்டும்.
முதல் நாள் மாலையில், கலசத்துக்கு மஞ்சள் குங்குமமிட்டு, பூக்களிட்டு, சர்க்கரைப் பொங்கல் அல்லது பாயசம் என நைவேத்தியம் செய்து ஆராதிக்க வேண்டும். மறுநாள், வெள்ளிக்கிழமை, வரலட்சுமி பூஜை.
தூய்மையும் மங்கலப் பொருள்களும் நிறைந்திருக்கும் வீட்டில் திருமகள் நிச்சயம் குடி வருவாள். எங்கே நறுமணமும் நல்லிசையும் நிறைந்துள்ளதோ அங்கே திருமகளும் அம்பிகையும் தானே எழுந்தருளுவார்கள் என்பது ஐதீகம். எனவே காலை திருமகளின் அருளைப் பெற, திருவிளக்கை ஏற்றி வைத்து அழையுங்கள்.
கருணை கொண்ட அந்த தேவி 16 செல்வங்களுடன் உங்கள் மனை தேடி வரத் தொடங்குவாள். 'வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடிக்கும் இல்லத்தில் நான் பூரணமாக, நிலையாக தங்குவேன்' என்று திருமகள் அளித்த வாக்கின்படி அவள் நிச்சயம் வருவாள். அவள் வரத்தக்க வகையில் உங்கள் இல்லத்தையும் உள்ளத்தையும் அலங்கரித்து வையுங்கள் அதுவே முக்கியம்.
அன்றைய தினம், நமக்குத் தெரிந்த அம்பாள் ஸ்லோகங்களைப் பாராயணம் செய்யலாம். 108 போற்றி சொல்லி, ஒவ்வொரு போற்றி சொல்லும் போதும் பூக்களைக் கொண்டு அர்ச்சிக்கலாம்.