ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : திங்கள், 26 செப்டம்பர் 2022 (17:52 IST)

நவராத்திரியில் அம்பிகையை எந்த வடிவங்களில் அலங்காரம் செய்யலாம்....?

Navratri - Decoration
நவராத்திரி நாட்களில் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் அலங்கரித்து வழிபடுவர். அம்பிகையை முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும்; அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியின் அம்சமாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் முப்பெரும் சக்தியரை வழிபடுவார்கள்.


நவராத்திரியின் முதல் நாள் தேவியான மகேஸ்வரி பாலா, மது கைடபர் அழிவுக்குக் காரணமான தேவி. இரண்டாம் நாள் வழிபடப்படும் கவுமாரி, குமாரியாகப் போற்றப்படுகிறாள். அவளே ராஜ ராஜேஸ்வரியாகவும் ஆராதிக்கப்படுகிறாள். மூன்றாவது நாளுக்கு உரிய வாராகி, கன்யா கல்யாணி என்று அழைக்கப்படுகிறாள்.

நான்காம் நாளில் அருள்பவள், மகாலட்சுமி. இவள் ரோகிணி என்று அழைக்கப்படுகிறாள். ஐந்தாம் நாள் வைஷ்ணவியாகவும் மோகினியாகவும் அலங்கரிப்பர். ஆறாவது நாளுக்குரிய தேவி வடிவம். இந்திராணி. அன்று சர்ப ராஜ ஆசனத்தில் தேவி அமர்ந்திருக்கும் கோலத்தில் பூஜை செய்வது வழக்கம். ஏழாம் நாள், தேவி மகாசரஸ்வதி, சுமங்கலி என அழைக்கப்படுகிறாள்.

எட்டாவது நாள் தேவியானவள் நரசிம்மிதருமி. நரசிம்மி வடிவின் சினம் தணிந்த கோலம் இது. அன்று அன்னை அன்பே உருவாக அருள்பாலிக்கிறாள். ஒன்பதாம் நாள் அம்பிகை, சாமுண்டி மாதா, அம்பு, அங்குசம் தரித்த லலிதா பரமேஸ்வரியாக அன்னையை வழிபடுவது வழக்கம்.

பத்தாம் நாள் அசுரர்களை அழித்து அம்பிகை பெற்ற வெற்றியைக் குறிக்கும் விஜயதசமி. அன்று அன்னை வெற்றித் திருமகளாக அலங்கரிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். இந்த வடிவங்களில் தேவியைத் தரிசித்து வழிபடுவதால் நவநிதிகளும் பெற்று, நீடுழி வாழ்வர் என்பது ஐதீகம்.

நவராத்திரியில் 9 நாட்களும் பூஜை விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இயலாதவர்கள் அஷ்டமி நாளில் மட்டுமாவது விரதம் இருந்து பூஜை செய்யலாம். விஜயதசமி தினத்தில் அம்பிகை அசுரர்களை அழித்து வெற்றிவாகை சூடினாள்.

ஆணவம் சக்தியாலும், வறுமை செல்வத்தினாலும், அறியாமை ஞானத்தினாலும் வெற்றி கொள்ளப்பட்ட தினம் என்பதால் வீரம், செல்வம், கல்விக்கு உரிய தேவியரான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என முப்பெரும் தேவியர்க்கும் உரியதாக இதை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் புதிதாகத் தொடங்கும் எல்லாக் காரியங்களும் எளிதாக வசமாகும் என்பது ஐதீகம். அன்று அபிராமி அந்தாதியினைப் படிப்பது மிகச் சிறந்த பலன் தரும்.