செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By
Last Modified: புதன், 7 மார்ச் 2018 (15:31 IST)

விநாயகரின் ஐந்து கரங்கள் உணர்த்தும் தத்துவம்!

விநாயகரின் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய பஞ்ச கிருத்தியங்களையும் அவர் தனது ஐந்து கரங்களால் இயற்றுகின்றார் எனப்படுகின்றது.
 
ஐந்து கருமங்கட்கும் அவரே அதிபதி என்பதனால் அவருக்கு "ஐங்கரன்" என்ற நாமம் விளங்குகின்றது. அவரை "பஞ்சகிருத்திகள்" என்றும் கூறுவர். அவரது முற்றறிந்த ஞானத்தை முறம் (சுளகு) போன்று பரந்து விரிந்த  இருசெவிகளும் விளக்குகின்றன. 
 
வலது பக்கமுள்ள ஒடிந்த கொம்பு “பாசஞானத்தையும்" இடது பக்கமுள்ள கொம்பு “பதிஞானத்தையும்" உணர்த்துவதாக உள்ளன. விநாயகரின் அடிக்கீழ் மூஷிகம் அழுந்தி அமைதியாகக் காணப்படுவதை, பிரணவ மூர்த்தியின் அடிக்கீழ் ஆணவ மலம்  வலிகெட்டு அமைதி காக்கும் என்பதை விளக்குகின்றது. 
 
அவரது உந்தியைச் சுற்றியுள்ள சர்ப்பம் "குண்டலினி சக்தியின்" வடிவம் என்பர். அதன் விரிவுகளும், சுருக்கங்களுமே  பிரபஞ்சத்தின் தோற்றம், சுருக்கம் எனப்படுகின்றது. அதை அவர் உந்தியில் அணிந்திருப்பதானது, உலகிற்கு நிமித்த காரணர்  அவர்தாம் என்பதையும் உணர்த்துகின்றது. 
 
மேலும் விநாயகர் முக்கண் உடையவரெனவும் விளக்கப்பட்டுள்ளது. முக்கண்ணுடைய பெருமை சிவனுக்கே உரியது. ஆயினும்  கிரியா வழி, ரூப வழி நோக்குமிடத்து சிவனும் பிள்ளையாரும் ஒன்றே எனும் தத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். மேலும், விநாயகருக்கு "சித்தி", "புத்தி" என இரு சக்திகள் உள்ளதாகவும் புராணங்களில் பேசப்படுகின்றது. 
 
விநாயகரின் வலது முன்கை அபய முத்திரையக் காட்டும், வலது பின்கையில் மழுவாயுதமும், இடது முன்கையில் மோதகம்  அல்லது மாதுளம்பழம் வைத்திருப்பது போலவும், இடது பின்கையில் பாசக் கயிறோ அல்லது செந்தாமரை மலரோ  கொண்டிருப்பது போலவும் சித்தரிக்கப்படுகின்றது. 
 
துதிக்கையில் நீர்க் கலசம் ஜகமண்டலம் ஒன்றை ஏந்தியிருப்பார். செம்பட்டு வஸ்திரத்தையே அணிந்திருப்பார். விநாயகருக்கு  உகந்த முக்கிய நிவேதனப் பொருட்கள் மோதகம், கொழுக்கட்டை பஞ்சாமிர்தம், தேங்காய், அப்பம், அவல், பொரி, கரும்பு,  சர்க்கரை முதலியனவாகும். செம்மலர்கள், அறுகம் புல் ஆகியவற்றைக் கொண்டு விநாயகரை அர்ச்சிப்பது மிகச் சிறந்தது. 
 
உலகிலுள்ள சைவ மக்கள் எதையாவது எழுதத் தொடங்கும் பொழுதும், எழுதும் தாளின் தலைப்பில் முதலாவதாக "பிள்ளையார் சுழி" எழுதிய பின்னரே விடயத்தை எழுதத் தொடங்குவர். பிள்ளையார் சுழி ‘ள’ என்ற ஒரு வட்டமும் ஒரு கோடும் இணைந்து இருக்கும். 
 
இதற்கு ஒரு தத்துவம் உண்டு, பூஜ்ஜியமன வட்டதை "0" பிந்து என்றும், தொடர்ந்துவரும் கோட்டை ” நாதம்" என்றும் கொள்கின்றனர். எனவே பிள்ளையார் சுழியை "நாதபிந்து" என்பவர். பிள்ளையாருடன் சிவசக்தியின் இணைப்பை இது  உணர்த்துவதாக உள்ளதெனக் கூறப்படுகின்றது. 
 
எக்கருமத்தையும் ஆரம்பிப்பதற்கு முன்னர் பிள்ளையாரை வழிபட்ட பின்னரே ஆரம்பிக்கும் வழக்கம் சைவ மக்களிடையை காலாதிகாலமாக நிலவிவருகின்றது. அவரை வழிபட்டுத் தொடங்கினால் செய்கருமம் இடையே எதுவித விக்கினங்களும் இன்றி நிறைவுபெறும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.