பிரதோஷ நாளில் நந்திக்கு காப்பரிசி நைவேத்தியம் செய்யப்படுவது ஏன் தெரியுமா...?
பிரதோஷ காலத்தில் அதாவது மாலை 4:30 முதல் 6:00 மணி வரை தரிசனம் செய்து வழிபட்டால் கடன், வியாதி, அகால மரணம், வறுமை, பாவம், மனத் துயரம் முதலானவை நீங்கும். முக்தி கிடைக்கும்.
தேவர்களும் அசுரர்களும் ஆலகால விஷத்துக்கு பயந்து கயிலாயத்துக்கு வந்து சிவபெருமானிடம் முறையிட்டபோது, ''பயப்படாதீர்கள்!'' என்று அபயம் அளித்த சிவபெருமான், எதிரில் இருந்த நந்திகேஸ்வரனை அழைத்து, ''அந்த ஆலகால விஷத்தை இங்கே கொண்டு வா!'' என்றார்.
ஈசனை வணங்கி விடை பெற்ற நந்திபகவான், ஆலகால விஷத்தை நெருங்கினார். அதன் வெம்மை மாறியது. அதை எடுத்துக் கொண்டு வந்து ஈஸ்வரனிடம் தந்தார். ஈசன் அதை வாங்கி உண்டார். அருகில் இருந்த அம்பிகை, சிவபெருமானின் கழுத்தை மென்மையாகத் தொட்டதால், விஷம் அங்கேயே நின்று விட்டது. இதைப் பார்த்த நந்தி பகவான் கேலியாகச் சிரித்தார். ''ஹே! இந்த விஷம் அவ்வளவு கடுமையானதா? சர்வ சாதாரணமாக நான் எடுத்து வந்த விஷமான இதற்கு, கொல்லும் அளவுக்குச் சக்தி இருக்கிறதா என்ன?'' என எகத்தாளமாகப் பேசினார். உடனே சிவபெருமான், ''நந்தி! இங்கு வா!'' என்று அழைத்து, விஷத்தை வாங்கி உண்ட தன் கையை விரித்து, ''இதை முகர்ந்து பார்!'' என்றார்.
நந்தி பகவான் முகர்ந்தார். அதே விநாடியில் சுயநினைவை இழந்தார். கீழே விழுந்தார். எழுந்தார். அழுதார். சிரித்தார். பித்துப் பிடித்தவர் போலப் பலவிதமான சேஷ்டைகளைச் செய்து சுற்றித் திரிந்தார். இதனை கண்டு வருந்திய உமாதேவி நந்தியை மன்னிக்கும்படி வேண்டினாள்.
நந்தி ஆணவத்துடன் பேசியதால் அவனை அடக்கவே அவ்வாறு செய்தோம். விஷத்தின் வாசனையை முகர்ந்ததற்கே இந்தப் பாடுபடுகிறான் என்றால், அதை உண்டால் என்ன பாடுபட்டிருப்பான்? அதை அவனுக்குக் காட்டவே இவ்வாறு செய்தோம். அரிசியைப் பொடி செய்து வெல்லத்துடன் சேர்த்துக் கொடு. அவன் தெளிவு பெற்றுப் பழைய நிலையை அடைவான்!'' என்றார் சிவபெருமான். அவரது சொற்படியே செய்தாள் அம்பிகை. அதை உண்ட நந்தி பழையபடி சுயநிலையை அடைந்தார். அன்று முதல் பிரதோஷ நாளன்று, நந்திக்குக் காப்பரிசி நைவேத்தியம் செய்யப்படுகிறது.