ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : வியாழன், 8 செப்டம்பர் 2022 (10:41 IST)

பத்து நாட்களாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை !!

Onam
ஓணம் திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலே எழுந்து குளித்து வழிபாட்டில் ஈடுபடுவர். ‘கசவு’ என்று சொல்லக்கூடிய சுத்தமான வெண்ணிற ஆடை உடுத்துவர். வீட்டின் முன்பு, பெண்கள் 10 நாட்களும் தொடர்ந்து பூக்களினாலான கோலங்கள் இட்டு ஆடிப்பாடி மகிழ்வர்.


ஓணம் பண்டிகையின் முக்கிய அம்சமே, மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாகக் ஒவ்வோர் வீட்டு வாசலிலும் போடப்படும் ‘அத்தப்பூ’ என்ற பூக்கோலம் ஆகும்.

ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி பெயர் கொடுத்து ஓணம் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். ஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தம், இரண்டாம் நாள் சித்திரா, மூன்றாம் நாள் சுவாதி என்று அழைக்கப்படும். அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வர். நான்காம் நாளான விசாகத்தில், அறுசுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது.

ஐந்தாம் நாள் அனுஷம் எனப்படும். அன்று, கேரளாவின் பாரம்பர்யமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது. இதைக்காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வருகின்றனர். ஆறாம் நாள் திருக்கேட்டை, ஏழாம் நாள் மூலம், எட்டாம் நாள் பூராடம், ஒன்பதாம் நாள் உத்திராடம் என்று அழைக்கப்படும். திருவோண நாளான 10-ம் நாள் நடைபெறும் ஓணம் கொண்டாட்டத்துடன் இந்த விழா முடிவடைகிறது. இதோடு பாரம்பர்ய நடனப் போட்டிகள் என பண்டிகையின் 10 நாட்களும் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறும்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். அறுசுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான ‘ஓண சாத்யா’ என்ற உணவு தயாரிக்கப்படுகிறது. மேலும் இந்த உணவு எளிதில் ஜீரணம் ஆவதற்காக ‘இஞ்சிக்கறி’, ‘இஞ்சிப்புளி’ ஆகியவற்றை உணவுடன் எடுத்துக்கொள்வர்.

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் வேறு மாநிலங்களில் உள்ளவர்களும் கேரள மக்களோடு சேர்ந்து ஓணம் பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.