வராஹி தேவிக்கு உரிய ஆஷாட நவராத்திரி !!
ஆஷாட நவராத்திரி காலம் என்பது ஆனி மாதத்தில், சாந்திரமான கால கணிதமுறையில், ஆஷாட மாதம் தொடங்குகின்ற அமாவாசை முதல் நவமி வரையிலான காலம் ஆகும்.
ஆனி - ஆடி மாதங்களில் புதுப் புனலாக ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுக்கின்ற காலம். பூமித் தாயே சூல் கொண்டு, பயிர்கள் அனைத்தையும் கருக் கொள்கின்ற காலம்.
ஆஷாட நவராத்திரி வராஹி தேவிக்கு உரியதாக சாக்த சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. வராஹி தேவியின் ரூப த்யான ஸ்லோகம், அம்பிகையின் கரங்களில் விவசாயத்திற்கு ஏற்ற ஏர்க் கருவியும், உலக்கையும் கொண்டு அருள்வதாகக் கூறுகின்றது.
வராஹி தேவி, தேவீ புராணங்களின் படி ஸப்த மாதர்களில் ஒருவராகவும், வராஹ புராணத்திலும், ஸ்ரீ நகர உபாஸனையிலும் அஷ்டமாத்ருகா தேவதைகளில் ஒருவராகவும் வணங்கப்படுகின்ற தெய்வம்.
வார்த்தாலி என்று அழைக்கப்படக்கூடிய வராஹி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத் தலைவிகளில் ஒருவராக விளங்கக் கூடியவள். அளப்பரிய சக்தி கொண்டவள். வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை உடனடியாக அருளுபவள்.
வாழ்வில் ஏற்படக்கூடிய எதிர்ப்புகளை நீக்குபவள். விவசாயம் சம்பந்தமான தொழில்களில் லாபம் பெருக அருள்புரிபவள். வீடு, நிலம் சம்பந்தமான விஷயங்களில் வெற்றிகளை அருளுபவள். இல்லம் எனும் வீட்டில் என்றும் தானியங்கள் நிறைந்திருக்கச் செய்பவள். மிக விரைவில் பலன் அளிக்கக் கூடியவள்.