1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : வியாழன், 21 ஜூலை 2022 (11:50 IST)

ஆடிக்கிருத்திகை விரதங்களும் வழிபாட்டு பலன்களும் !!

Lord Murugan
ஆடிக்கிருத்திகையில் முறையாக விரதங்கள் மேற்கொள்வதால் நமது உடலும், உள்ளமும் தூய்மையாகி மனம் அமைதியும் சந்தோஷமும் அடைகிறது. அந்த வகையில் ஆடிக் கிருத்திகை விரதம் மிகவும் பிரசித்தி பெற்றது.


வாரம், திதி, நட்சத்திரம் என்று இந்த மூன்றிலும் முருகனுக்கு விரதங்கள் உண்டு. வாரம் என்பது வாரத்தின் நாட்களை குறிக்கும். இதில் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாள். திதிகளில் சஷ்டி திதி முக்கிய விரதமாகும். நட்சத்திரத்தில் ‘கார்த்திகை’ அல்லது ‘கிருத்திகை’ முருகனின் நட்சத்திரம் ஆகும். மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரம் விசேஷமானது.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து வந்த தீப்பொறிகள் சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக மாற, அந்த குழந்தைகளை சீராட்டி, பாராட்டி வளர்க்கும் பொறுப்பு 6 கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சூரபத்மனை அழித்து தேவர்களையும், மக்களையும் காப்பதற்காக அவதாரம் எடுத்த ஆறுமுகனை வளர்த்தவர்கள் கார்த்திகை பெண்கள். அவர்களை போற்றும் வகையிலேயே கிருத்திகை விரத திருநாள் கொண்டாடப்படுகிறது. உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.

எல்லா முருகன் கோயில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, திருவீதி உலா என விமரிசையாக பல விழாக்கள், உற்சவங்கள் நடைபெறும்.

காவடிப் பிரியனான கந்தனுக்கு அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மச்சக்காவடி, சேவல் காவடி, தீர்த்தக் காவடி என பல்வேறு விதமாக காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியும், சிறப்பு பூஜைகள், பிராத்தனைகள் நடத்தியும் ஆனந்த பரவசம் அடைகின்றனர்.

கோயில்களிலும், வீடுகளிலும் பொங்கலிட்டு அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து கந்த புராணம் பாராயணம் செய்து வணங்குகின்றனர். கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி போன்ற பக்தி பாமாலைகளை பக்தி சிரத்தையுடன் பாடி விரதத்தை முடிக்கின்றனர். அறுபடை வீடுகளில் திருத்தணியில் இவ்விழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மலைகளில் சிறந்த மலையாக திருத்தணிகை மலையை கந்த புராணம் போற்றிப் புகழ்கிறது.