புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 3 ஆகஸ்ட் 2022 (08:51 IST)

ஆடி 18ம் நாள் வழிபாடு சிறப்புகள் மற்றும் பலன்கள்!

Aadi perukku
இன்று 2 ஆண்டுகளுக்கு பின்னர் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படும் நிலையில் ஆடி 18ல் வழிபடுவதன் சிறப்புகள் மற்றும் பலன்களை அறிந்து கொள்வோம்.

ஆடி மாதத்தில்தான் பொறுமையின் சிகரமான பூமாதேவி அவதரித்ததாக புராணங்களில் உள்ளதாக கூறுகின்றனர்.

இந்த மாதத்தில் வரும் திதி, நட்சத்திரம் மற்றும் கிழமைகள் யாவும் மகிமை வாய்ந்தன என்று ஜோதிட சாஸ்திர நூல்கள் பலவும் சிறப்பிக்கின்றன. ஆடிப்பிறப்பு, சர்வ நதி ரஜஸ்வலா, ஆடிப்பதினெட்டில் ஆடி பெருக்கு, நாக தோஷ பூஜை, புதுமணத் தம்பதிக்கு ஆடிப்பால் அளித்தல் இப்படி, நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஆடிமாத விசேஷ வைபவங்கள் பல உண்டு.

தக்ஷிணாயன புண்ணிய காலம் என்று சூரியனின் தென்திசைப்பயணத்தைக் குறிப்பிடுவர். இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப்பணிகளைத் துவங்குவர். ஆடிப்பட்டம் தேடி விதை என்று சொல்வதுண்டு. 

நாடு செழிக்கத் தேவையான நீரைப்போற்றிப் பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் நதியை தெய்வமாகப்போற்றி வழிபட்டவர்கள் நம் முன்னோர்கள். அதற்குரிய வழிபாட்டு நாளாக ஆடி பதினெட்டாம் நாளைத் தேர்ந்தெடுத்தனர். மேலும் தமிழகத்தின் உயிர்நாடி நதியாம் காவிரி ஆற்றின் அனைத்து கிளை நதிகளும் வெள்ளத்தால் நிரம்பும் இந்த ஆடி மாதத்தில் காவிரி நதியை மக்கள் வழிபடுகின்றனர்.

ஆடி 18-ம் நாளே ஆடிப்பெருக்கும். தொட்டதெல்லாம் பலமடங்கு பெருகும் புண்ணிய தினமான ஆடிப் பெருக்கு. இந்த நாளில் இறைவழிபாட்டோடு நீர் நிலைகளில் செய்யும் வழிபாடும் முக்கியமானது. 

இந்த நாளில் புது தம்பதியர் தம் வாழ்க்கை சுபமாக அமைய பாக்கு - வெற்றிலை, மஞ்சள் - குங்குமம், தாலிக்கயிறு, வளையல் ஆகியவற்றை சுமங்கலிப் பெண்களுக்குத் தானமாக வழங்கி நீரும் நிலமும் இணையும் நீர் நிலைகளில் பூஜை செய்யவேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் காலம் முழுவதும் பூவோடும், பொட்டோடும், சுமங்கலியாக வாழும் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பதினெட்டாம் பெருக்கு என்று அழைக்கப்படுகின்ற ஆடி மாதம் 18-ம் தேதியன்று காவேரியில் நீராடுவது, நதிக்கு பூஜைசெய்து வணங்குவதால், பாவங்கள் தீரும். நல்ல புத்தியும், சகல சௌபாக்யமும் உண்டாகும்.