தினசரி உணவில் அசைவம் சாப்பிடுவது நல்லதா அல்லது தீமையா?

Sasikala|
நமது உடல் ஆரோக்கியமாக இயங்க கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள், நுண்ணூட்டச்சத்துகள் என ஒவ்வொன்றுமே மிகவும் அவசியம். இவற்றில் ஏதேனும் ஒன்று குறையும்போதும் நம் உடலின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.

 
நாம் உண்ணும் உணவை நம் உடல் கொழுப்பாக மாற்றி வைத்துக்கொள்ளும். உடலுக்கு ஆற்றல் தேவைப்படும்போது கொழுப்பை உடைத்து, தனக்குத் தேவையான ஆற்றலை உடல் தயாரித்துக்கொள்கிறது. தினசரி அசைவம் சாப்பிடும்போது, நம் உடலுக்கு கொழுப்புச்சத்து அளவுக்கு அதிகமாகக் கிடைக்கிறது. இந்தக் கொழுப்பு அப்படியே நம் உடலில் தங்கும்போது  உடல்பருமன் ஏற்படுகிறது. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், இதய நோய்கள் போன்றவற்றுக்கு உடல்பருமன்தான்  தலைவாசல்.
 
அசைவத்தில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் உள்ளது. இது இதய ரத்த நாளங்களில் உள்ள நல்ல கொழுப்பைக் கட்டுப்படுத்தி, கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்யும்போது, ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால், மாரடைப்பு, திடீர் இதயத்துடிப்பு  முடக்கம், பக்கவாதம் போன்ற தீவிரமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
 
உடலில் அளவுக்கு அதிகமாகத் தங்கும் கொழுப்பைக் கல்லீரல்தான் சேமித்து, தேவைப்படும்போது ஆற்றலாக மாற்றுகிறது. இப்படிக் கொழுப்பு அளவுக்கு அதிகமாக சேர்ந்துகொண்டே போகும்போது கல்லீரல் பாதிக்கப்படுகிறது. இதனால், கல்லீரல்  சுருக்கம் ஏற்படுகிறது.
 
தினசரி அசைவம் சாப்பிடும்போது உடலில் அளவுக்கு அதிகமாகப் புரதம் சேர்கிறது. இந்தப் புரதத்தை நீக்கவேண்டிய பணியை  சிறுநீரகங்கள் செய்கின்றன. தொடர்ந்து அளவுக்கு அதிகமாக வேலை செய்ய நேர்கிறபோது, ஒருகட்டத்தில் சிறுநீரகங்கள்  பழுதாகி, முழுமையாகச் செயல்படாமல் போகவும் வாய்ப்பு உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :