கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?
தற்போது கோடைவெயில் அதிகரித்துள்ள நிலையில் பலர் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்படும் சம்பவங்கள் நடக்கின்றன. ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து தப்பிக்க சில வழிமுறைகள்.
தமிழ்நாட்டில் கோடை வெயில் அதிகரித்துள்ளது. தற்போது அக்கினி நட்சத்திரம் தொடங்கியுள்ளதால் பல பகுதிகளிலும் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. வெப்ப அனல் காற்றால் மக்கள் பலரும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயமும் உள்ளது.
வெயில் காரணமாக உடலில் உள்ள நீர்ச்சத்துக்கள் இழக்கப்படுவதுடன், உடல் 40 டிகிரி வெப்பநிலையை தாண்டும்போது ஏற்படும் வாந்தி, மயக்கம், அயற்சியுடன் கூடிய வலிப்பு ஹீட் ஸ்ட்ரோக் எனப்படுகிறது. சில சமயங்களில் இந்த ஹீட் ஸ்ட்ரோக் உயிரிழப்பையும் ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. ஆகவே வெயில்காலங்களில் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படாத வண்ணம் உடலை பாதுகாப்பது அவசியம்.
உச்சி வெயில் நேரங்களில் வெளியே பயணிப்பதை தவிர்ப்பது நல்லது. அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும். இளநீர், மோர் போன்ற பானங்களை பருகி அடிக்கடி உடலில் நீர்ச்சத்து தொடர்ந்து இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். வெயிலில் எங்காவது வெளியே செல்ல வேண்டிய தேவை இருந்தால் தலைக்கு தொப்பி, குடை போன்றவற்றை எடுத்து செல்ல வேண்டும்.
பெரியவர்கள், குழந்தைகளை ஹீட் ஸ்ட்ரோக் எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது. அதனால் குழந்தைகள் வெயிலில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் ஒரு நாளைக்கு இரு முறை குளிக்க வேண்டும். வேர்க்குரு போன்ற பாதிப்புகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வயதானவர்கள் வெயிலில் செல்லும்போது தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் நிழலில் அமர்ந்து ஓய்வு எடுக்க வேண்டும். பெரும்பாலும் காலை 11 மணிக்கு மேல் 4 மணிக்குள் வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.
Edit by Prasanth.K