1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala

கேழ்வரகு உண்பதால் எலும்பு தேய்மானத்தை தடுத்திடலாம்

கேழ்வரகு உண்பதால் எலும்பு தேய்மானத்தை தடுத்திடலாம்

நமது அன்றாட உணவாக இருந்த சிறுதானியங்களில் முக்கியமானது கேழ்வரகு. இன்றோ காணக்கிடைக்காத அரிய தானியமாக மாறிவிட்டது.


 


எந்த தானியத்தை விடவும் ராகியில்தான் மிக அதிக கால்சியமும், பாஸ்பரசும் உண்டு. இது வயோதிகர்களுக்கும், மாதவிடாய் கடந்த பெண்மணிகளுக்கும் ஏற்படும் எலும்புத் தேய்மானம் தீவிரம் குறையவும், இரத்தத்தில் கால்சியம் அளவை தக்க வைக்கவும் உதவுகிறது.
 
கேப்பை, கேழ்வரகு, நச்சினி, மண்டுவா என பல பெயர்களால் விளிக்கப்படும் ராகி, நம் தேசத்தின் முழு நீள, அகல நிலப்பரப்பில் பயிரிடப்படும், ஊடு பயிர்களில் மிக முக்கியமான சிறு தானியம். 
 
கேழ்வரகில் ‘பி’ காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், மினரல்கள் போன்ற அத்தியாவசிய சத்துகள் நிறைந்த கேழ்வரகு, எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒரு மிகச்சிறந்த உணவு. இது பச்சிளங் குழந்தைக்கு உகந்தது. 6 மாத குழந்தை முதலே கூழாக்கிக் கொடுக்க மிக ஏற்றது. பால் கொடுக்கும் தாய்மார்களின் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும், இரத்த சோகை அகலவும் முளை கட்டிய கேழ்வரகில் கிடைக்கும் 88% அதிக இரும்புச் சத்து, மருந்தாய் வேலை செய்கிறது.
 
கேழ்வரகை களியாய், ரொட்டியாய் உண்பது சர்க்கரை நோயாளிகளுக்கு உத்தமம். அதிக நார்ச்சத்து மற்றும் சில அமினோ அமிலங்களால், அடிக்கடி உண்ண வேண்டும் எனும் தேவையை குறைத்து உடற்பருமன் குறைய உதவுகிறது. மேலும், உடலின் தேவையற்ற கொழுப்பு குறைந்து, நல்ல கொழுப்பின் அளவை சீர் செய்வதால் இரத்தத்தின் கொலஸ்டிரால் விகிதம் சமநிலை ஏற்பட உதவும். 
 
கோதுமை முதலான உணவுப் பொருட்களால் வாந்தி, பேதி என ஒவ்வாமை ஏற்படும். கேழ்வரகை ஒரு சிறந்த மாற்று உணவாகப் பயன்படுத்தலாம். இவ்வாறு, 6 மாத குழந்தை முதல் பெரியவர்கள் வரை எளிதில் ஜீரணமாகக் கூடியதும், ஊட்டச்சத்தை அள்ளித் தருவதுமான மிகச் சிறந்த உணவுகளில் ராகியும் ஒன்று.
 
6 மாதம் முதல் மூன்று வயது வரையுள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கும் முறை: கேழ்வரகை சுத்தம் செய்து, ஓர் இரவு தண்ணீரில் ஊற வைக்கவும். பின், தானியத்தை மாவு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். ஒரு காட்டன் துணியில், பிழிந்து தெளிந்த பாலாய் பிரித்து எடுத்துக்கொள்ளவும். இந்தப் பாலை காய்சி கூழ் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். கேழ்வரகு ஒவ்வாமை உடைய பெரியவர்களும், இந்த முறையில், ராகியின் பயனை அடையலாம்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்