ஈஸ்ட்டை பயன்படுத்தி சர்க்கரையில் இருந்து மோர்பின்
ஈஸ்ட்டை பயன்படுத்தி சர்க்கரையில்(சீனி) இருந்து பெரும்பாலும் வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் மோர்பின் மற்றும் அதுபோன்ற மருந்துகளை தயாரிக்கும் முறை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஈஸ்ட், சர்க்கரையில் இருந்து மோர்பினை உருவாக்குவதற்கான அனைத்துவிதமான சிக்கலான படிமுறைகளையும் செய்வதாக ''நேச்சர் கெமிக்கல் பயோலஜி'' என்னும் சஞ்சிகையில் வெளியான ஆய்வு கூறுகின்றது.
ஓப்பியம் போதைப்பொருளில் இருந்து மோர்பின் செய்யும் நடைமுறைக்கு மாற்றாக இதனை பயன்படுத்த முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
தற்போது ஓப்பியம் தாவரங்களில் இருந்துதான் மோர்பின் தயாரிக்கப்படுகின்றது.
ஹெரோயின் போதைப்பொருளும் இந்த வழியிலேயே உருவாக்கப்படலாம் என்பதால், இந்த முறை சட்ட விரோத போதைப்பொருளை வீட்டிலேயே உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.