1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2020 ஒரு கண்ணோட்டம்
Written By சினோஜ்
Last Updated : செவ்வாய், 29 டிசம்பர் 2020 (21:25 IST)

நடிகர் ரஜினியின் அரசியல் விலகலும் தமிழகத்தேர்தலும் !

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் நடிகர் ரஜினிகாந்த்தின் காந்தப்பார்வைக்கும் காந்தக்கந்தவக்குரலுக்கும் கோடிக்கணக்கான இளைஞர்கள் கட்டுண்டு கிடக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

அவரது குரல் கடந்த 1996 ம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத்தேர்தலில் பிரதிபலித்ததென்பதை எல்லோரும் அறிவர். ஆனால் அவர் எப்போது தனிக்கட்சி தொடங்கப்போகிறார்? என்ற கேள்விகள் அவர் நடித்த படங்களிலும் அவர் படத்தில் இடம்பெற்ற பாடல்களிலும் நிச்சயம் இடம்பெறும்! அப்பாடல்வரிகளை நிச்சயம் சூப்பர் ஸ்டார் ரஜினி எழுதுமாறு பணித்திருக்கமாட்டார் என்பது என் கருத்து. ஆனால் அவரது அரசியல் வருகையைக் குறித்து பாடலாசிரியர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் உருவான எண்ணமென்பது ரஜினியின் ரசிகர்கள் மற்றும் மக்களின் எண்ணமாகக்கூடப் பிரதிபலித்திருக்கலாம். அதனால்தான்  ரஜினி சாதாரணமாகப் பேசுகிற பஞ்ச் வசனங்களும் அரசியல்ரீதியான அதிர்வலைகளையுண்டாக்கியது. இதெல்லாம் இருந்தாலும்கூட அவர் முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா போன்றோரைப்போல் அரசியலில் ஆழங்கால்படவில்லை; அவரது இளமையிலும் சினிமாவைத்தவிர இதுகுறித்த எந்த அனுபவமில்லாமலும்தான் இருந்தார் என்பதை அவருக்கு நெருங்கியவர்களே கூட ஒப்புக்கொள்ளத் தலைப்படுவார்கள். அவர் அரசியலுக்கு வர பாஜக தூண்டில்போடுவதாகவும் அக்கட்சி மற்றும் ஆளும்கட்சியைச் சார்ந்தவர்கள் அவரது புதிய கட்சியில் இடம்பிடிக்கத் துண்டுபோடுவதாகவும் வெளியான தகவல்களாலும் மேலும் தமிழக அரசியல்களம் பரப்பரப்படைந்தது.

ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடாமல் ஆன்மீகப்பற்றுகொண்டு சினிமாவே போதுமென்று சும்மாயிருந்தாலும் அவரைச்சுற்றியுள்ளவர்களாலும் ரசிகர்களின் உச்சுப்பேற்றுதலாலும் அவர் பிரபல தலைவர்கள் இல்லாத சூழலாலும் தனது அரசியல்வருகைக்கு உது நல்ல சந்தர்ப்பம் என அவர் முடிவெடுத்திருப்பார். அதனால்தான் அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆன்மீக அரசியல் என்ற ஒற்றைவார்த்தையைச் சொல்லியபின்பு இன்றும்கூட அதன் தாக்கம் மின்சாரம்போல் இன்றும் சுற்றிசுற்றி அலைகளையுருவாக்கிக்கொண்டிருக்கிறது.

ஆனால் அரசியல் கட்சியை நிச்சயம் தொடங்குவதாகக் கறாராககூறிய ரஜினிகாந்த் தனது உடல்நலக்குறைவால் அம்முடிவை மாற்றி இனிதான் கட்சி தொடங்கப்போவதில்லை என்று திட்வட்டமாகக்கூறியுள்ளது இதுநாள்வரை மண்சோறு சாப்பிட்டு வேண்டுதல் நடத்தி அவரது உருவப்படத்திற்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்களுக்கும் இடி விழுந்ததைப்போலிருந்திருக்கும். அவரிடம் அவர்கள் சினிமாவைத்தாண்டி எதிர்பார்த்தது அவரது அரசியல்வருகையைத்தான். ஆனால் அதற்கான கொடுப்பினையை உடல்நலக்குறையைமூலமாக கடவுளே கட்சி தொடங்கவேண்டாம் என்பதற்கான எச்சரிக்கையாகப் பார்ப்பதாக ரஜினியே கூறியுள்ளது அவரை எதிர்பவர்களைத்தவிர அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த திரையுலகிற்கும் பெரும் ஏமாற்றம்தான்.

ரஜினி தன் கிளீன் இமேஜிற்கும் இதுநாள் வரை சேதம்விளைக்காமல் பார்த்துக்கொண்டதுபோல் இனிவரும் காலத்திலும் அவர் சினிமாவில் நடித்துமட்டுமே பார்த்துக்கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமையும். ரஜினியின் புதிய கட்சியும் அவரது அரசியலும் இல்லாமல் போனாலும் அவரது ரசிகர்கள் நிச்சயம் எதாவதொரு கட்சிக்கு ஓட்டுப்போடத்தான் போகின்றனர். ஆனால் ஆறாத வடுவாக் தங்களின் தலைவரின் நிறைவேற அரசியல் ஆசையை நினைத்துப் புழுங்கிக்கொண்டுதானிருக்கப் போகிறார்களென்பதற்கு இன்று அவரது போயஸ் கார்டன் இல்லத்தின் முன் நடைபெற்ற ரசிகர்களின் தர்ணா போராட்டமே சாட்சி.

ரஜினின் கட்சி நிராசையானது காலத்தின் நிகழ்வுதானே ஒழிய அவருக்கு இதனால் எந்தப் பாதிப்புமில்லை; ஆனால் ஊழலுக்கு எதிராகக் குரல்கொடுத்து, சம்பாதிக்க வேண்டுமென நினைப்பவர்கள் யாரும் என் கட்சிக்கு வரவேண்டாம் எனக் கூறியதெல்லாம் இனி எந்தவொரு தலைவரும்  இப்படி இத்தனை தைரியமாகக் கூறமுடியாது.

தன்னால் தன்ன நம்பிவருபவர்கள் யாரும் பலிகடாவாக்ககூடாது என்று இன்று எடுத்துள்ள முடிவு அவருக்கு மட்டுமல்ல அவரைச் சார்ந்த எல்லோருக்குமே நல்லதுதான். நடிகை குஷ்பு சொன்னதுபோல் ரஜினியின் முடிவாம் தமிழக மக்கள் மனமுடைந்துள்ளனர் என்பது உண்மைதான். ஆனல் அதேசமயம் நடிகர் கமல்ஹாசன் சொன்னதுபோல் அரசியலை விட ரஜினியின் உடல்நலம் ஆரோக்கியம் முக்கியம் என்பது கருத்தில் கொள்ளத்தக்கது.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் அவரது ராஜ்ஜியம் நடைபெறும் சினிமாவில் அவரே இந்த எழுபது வயதிலும் நடிகர்களில் முதல்வர், உச்சநட்சத்திரம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. சினிமா என்ற ஊடகத்தில் வழியே சிவாஜி படத்தைப்போல் அவரது அரசியல் கருத்துகளும் பஞ்ச் வசனங்களும், பாடல்வரிகளும் அவரது ரசிகர்களின் தாகத்தைத் தீர்கும் அருமருந்தாகிடும் என்று சொல்லத்தேவையில்லை.  ஆனால் ரஜினியின் இந்த அரசியல் விலகம் கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகிலிருந்து அரசியலில் குதிப்பவர்களை நன்கு யோசிக்கவைத்திருக்கும்…

ரஜினியின் உடல்நலம்பெற வாழ்த்துவோம்…

சினோஜ்