புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. பண்டிகைகள்
Written By

ஓணம் திருவிழா: வீட்டு வாசலில் போடப்படும் அத்தப்பூக் கோலம்

ஆவணி மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் திருவோண திருவிழா சித்திரை, சுவாதி, விசாகம், அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்ராடம்,  திருவோணம் என பத்து நட்சத்திர நாட்களிலும் கொண்டாடப்படுகிறது.
ஓணம் திருவிழாவினை 10 நாட்களும் வண்ணமயமாக மாற்றுவது அத்தப்பூக் கோலம் என்றால் அது மிகையாகாது. ஓணம் பண்டிகையில் அத்தப்பூக் கோலம் முக்கிய இடம் வகிக்கும். மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அத்தப்பூக் கோலம் போடப்படும். ஆவணி மாதம் பூக்கள்  பூத்துக் குலுங்கும். அதனால் ஓணத்தையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்.
 
ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண் பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவை பறித்துக் கொண்டு வருவார்கள். பூக்கோலத்தில் அதை தான் முதலில் வைக்க  வேண்டும் என்பது ஐதீகம். அதன் பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவார்கள். முதல் நாள் ஒரே வகையான பூக்கள், இரண்டாம்  நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் இந்த அத்தப்பூக் கோலம் அழகுபடுத்தப் படும்.
 
பருவ மழைக்காலம் முடிந்து எங்கும் பசுமையும், செழுமையும் நிறைந்து காணப்படும் சிங்கம் மாதத்தை கேரள மக்கள் ‘அறுவடைத் திருநாள்’ என்றும் போற்றி வழிபட்டு சிறப்பிக்கின்றனர். முன் காலத்தில் ஓணம் பண்டிகை தினம் அறுவடைத் திருநாளாகவே கொண்டாடப்பட்டு வந்துள்ளதாக வரலாற்று குறிப்புகள்  தெரிவிக்கின்றன.
 
ஓணம் திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து வழிபாட்டில் ஈடுபடுவர். ‘கசவு’ என்று சொல்லப்படும் தூய்மையான வெண்மை நிற ஆடைகளை மட்டுமே அன்றைய தினத்தில் உடுத்துவார்கள். மேலும் பெண்கள் அனைவரும் வீட்டின் முன்பு 10 நாட்களும்  தொடர்ந்து பல வகை பூக்களினால் அழகு கோலங்கள் இட்டு ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.