கிருஷ்ணர் நரகாசுரனுக்கு அளித்த வரமே தீபாவளி!!

Webdunia| Last Modified செவ்வாய், 25 அக்டோபர் 2016 (12:44 IST)
நரகாசுரனை எதிர்த்துச் போர் நடக்கும்போது நரகாசுரன் விட்ட அம்பால் கிருஷ்ணர் மயக்கமடைய கோபமடைந்த சத்தியபாமா, நரகாசுரனுடன் சண்டை இட்டு அவனை வெட்டி வீழ்த்தினார் என்றும் கூறுவாரும் உளர்.அச்சந்தர்ப்பத்தில் சத்தியபாமா தன் சக்தியை கிருஷ்ண பரமாத்மாவுக்கு அளிக்கப் பெற்று கிருஷ்ண பரமாத்மாவே நரகாசுரனை அழித்தார் எனவும் கூறுவாரும் உளர்.
 
நரகாசுரன் இறக்கும் தறுவாயில் ஸ்ரீ மகாவிஷ்ணு காட்சி அளித்தார். அவனுக்குத் தேவையான வரம் கொடுப்பதாகச் சொன்னார், நரகாசுரன் தனது இறப்புக்கு காரணம், எல்லோரையும் தான் வருத்தியதும், விளக்கேற்றக் கூடாது என்று கட்டளையிட்டதும் என்ற தவறை உணர்ந்து, அதற்கு பிராயச்சித்தமாக கிருஷ்ணனிடம் ஒரு வரம் கேட்டான், தன்னை சம்ஹாரம் செய்த அந்த நாளில் மக்கள் அனைவரும் தாம் பட்ட துன்பம் தீர்ந்தது என தலையில் எண்ணை தேய்த்துக் கங்கையில் நீராடினால் அவர்களுடைய துன்பங்களும், பாவங்களும் தீர்க்கப்பட வேண்டுமென்றும், அவர்கள் எல்லோரும் அன்றைய தினம் புத்தாடை அணிந்து. தீபமேற்றி, வெற்றித் திருநாளாக கொண்டாட வேண்டும் என்றும் இரந்து கேட்டான்.
 
"அப்படியே ஆகட்டும்" என கிருஷ்ணர் வரமளித்தார். இதுவே தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்.
 
எம் மனதில் இருக்கும் இருளை அகற்றி தீப ஒளியை ஞான ஒளியை ஏற்றி வைப்போம். அதற்கிணங்க இந்துமக்கள் அத்தினத்தை தீபாவளி தினமாக எண்ணை வைத்து அதிகாலையில் தோய்ந்து, தீபங்கள் ஏற்றி, புத்தாடை அணிந்து, இனிப்புப் பண்டங்கள் பரிமாறி மகிழ்ச்சியாகக் கொண்டாடுகின்றனர்.
 
இவ்வாறும் கூறுவாருமுளர்..... தாயான பூமாதேவி மகனான நரகாசுரனுக்கு அறிவுரை செய்தார். ஆனால் அவன் யார் சொல்லையும் கேட்கவில்லை. மனிதன் (நரன்) ஆக இருந்த அவனிடம் அரக்கன்( அசுரன்) குணம் இருந்ததால் அவனை நரகாசுரன் என்று அழைக்கத் தொடங்கினர். சிவபெருமானும் வேறுவழியின்றி நரகாசுரனைக் கொல்ல உத்தரவிட்டார். பெற்ற தாயான பூமாதேவிக்கோ அவனைக் கொல்ல விருப்பமில்லை. இந்த விஷயத்தை விஷ்ணுவிடமே ஒப்படைத்தார். 
 
பூமாதேவி சத்யபாமாவாகவும், விஷ்ணு கிருஷ்ணராகவும் பூவுலகில் பிறந்தனர். கிருஷ்ணர் மேல் பற்று கொண்டு சத்தியபாமா அவரைக் கைப்பிடித்தாள். அவருக்குத் தேரோட்டும் சாரதியாகப் பொறுப்பேற்றாள். 
 
கிருஷ்ணர் நரகாசுரனை அழிக்கப் புறப்பட்டார். அவனுடன் போரிட்டார். ஒரு கட்டத்தில் மயக்கமடைந்தது போல் நடித்தார். நரகாசுரன் அவரைக் கொல்ல முயன்றான். உடனே சத்யபாமா ஒரு அம்பை எடுத்து நரகாசுரனை நோக்கி எய்தாள். அந்த அம்புபட்டு நரகாசுரன் இறந்தான். முற்பிறவியில் அவனது தாயாக இருந்து, இப்பிறவியில் சத்யபாமாவாகப் பிறந்த பூமாதேவியின் கையாலேயே அவன் அழிந்தான். 
 
அவன் இறக்கும் சமயத்தில் சத்யபாமாவுக்கு (பூமாதேவிக்கு) முற்பிறவி ஞாபகம் வந்தது. கிருஷ்ணரிடம், "எனது மகன் கொடியவன் என்றாலும் அவன் என் கையால் அழிந்தது வருத்தமளிக்கிறது. அவன் இறந்த இந்நாளை மக்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் விழா எடுக்க வேண்டும். ஐப்பசி சதுர்த்தசி திதியில் அவன் இறந்ததால், இந்த நாளை இனிப்புகளுடனும், தீபங்களுடனும் அனைவரும் கொண்டாட வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தாள். கிருஷ்ணரும் அவளின் வேண்டுகோளை நிறைவேற்றினார்.


இதில் மேலும் படிக்கவும் :