'இரத்த சரித்திரம்' - தாமிரபரணி படுகொலை வரலாறும், பின்னணியும்!

கப்பிகுளம் ஜெ.பிரபாகர்| Last Updated: செவ்வாய், 19 ஆகஸ்ட் 2014 (17:45 IST)
கடந்த 13 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் தவிர்க்கப்படமுடியாத தினமாக நிலைபெற்றுவிட்டது, கூலிஉயர்வு கேட்டுப் போராட்டம் நடத்திய 17 தொழிலாளர்களை காவல்துறையினர் அநியாயமாக அடித்துக்கொன்ற தாமிரபரணி நினைவு தினம் ஜூலை 23.
சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாக அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் சேரன் மார்த்தாண்டவர்மன், போரில் தனது வெற்றிக்கு உதவியதற்காக மேற்குத்தொடர்ச்சி மலையில், தன் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததில் 74,000 ஏக்கர் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீன்தாருக்கு நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார்.
 
1930-இல் சிங்கம்பட்டி ஜமீன்தார், தன்னிடமிருந்த நிலத்தில் சுமார் 8374 ஏக்கர் நிலத்தை, 99 வருட குத்தகை ஒப்பந்தம் மூலம் மகாராஷ்டிர மாநிலத்தின் நுஸ்லேவாடியா என்பவருக்குச் சொந்தமான பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன்(பி.பி.டி.சி) என்ற தனியார் நிறுவனத்திற்கு கொடுத்தார். அந்த காடுகள்தான் மாஞ்சோலை எஸ்டேட்டாக மாறியது. திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் புதர்காடுகளை மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய தேயிலை எஸ்டேட்டுகளாக உருவாக்கிய பெருமை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் பட்டியலின தேவேந்திர குல மக்களையே சாரும்.
 
1948 ஆம் ஆண்டின் இரயத்துவாரி நில ஒழிப்புச் சட்டத்தின் அடிப்படையில் சிங்கம்பட்டி ஜமீன்தாருக்குச் சொந்தமான நிலங்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன. ஆனால் பிபிடிசி நிறுவனமோ, அப்போதைய தமிழக காங்கிரஸ் அரசுடன் குத்தகை ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொண்டு தனது குத்தகை காலத்தைத் 2029 வரை தொடர்ந்தது.
 
மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் நிரந்தரம் மற்றும் தற்காலிகமாக சுமார் 5000க்கும் அதிகமான தோட்டத்தொழிலாளர்கள் வேலைபார்த்து வந்தனர். தேயிலை, காஃபி, ஏலம், மிளகு போன்ற பணப்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. 1968 ஆம் ஆண்டில் தேயிலை பறிக்க டிராலி வண்டி அறிமுகப்படுத்தப்பட்டதற்கு எதிராகவும், 1978 ஆம் ஆண்டில் தேயிலைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்களுக்கு தினமும் காலையில் கூடுதலாக இரண்டு இட்லி கொடுக்க வேண்டும் என்றும், 1988 ஆம் ஆண்டில், அன்றாடம் பணிபுரியும் இடத்திற்குச் செல்ல காலை வேளையில் கூடுதலாகப் பத்து நிமிடங்கள் தரவேண்டும் என்றும் மாஞ்சோலையில் அவ்வப்போது போராட்டங்கள் நடைபெற்று வந்தது.


இதில் மேலும் படிக்கவும் :