வெள்ளி, 19 டிசம்பர் 2025
  1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Webdunia
Last Modified: ஞாயிறு, 3 ஏப்ரல் 2011 (10:48 IST)

தோனி, கம்பீர் அபாரம்; இந்தியா உலகக் கோப்பையை வென்றது

தோனி, கம்பீர் அபாரம்; இந்தியா உலகக் கோப்பையை வென்றது
2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கையை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இரண்டாவது முறையாஅக உலகக் கோப்பையை வென்று சாம்பியன் அணியானது. கேப்டன் தோனி குலசேகரா வீசிய கடைசி பந்தை லாங் ஆன் திசையில் மிகப்பெரிய சிக்சர் அடித்தது வெற்றிக்கான அடியாக அமைந்தது.

கபில்தேவுக்குப் பிறகு தோனி தலைமையில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா தற்போது தோனி தலைமையில் மீண்டும் உலக சாம்பியன்களானது.

2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி இந்திய ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டது.

மேலும் முதன் முறையாக உலகக் கோப்பையை நடத்தும் பிரதான நாட்டின் அணி கோப்பையை வென்றுள்ளது. இலங்கை 1996ஆம் ஆண்டு வெல்லும்போது அது போட்டியை நடத்தும் துணை நாடாகத்தான் இருந்தது.

தோனி 79 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 91 ரன்கள் எடுத்து தன் வாழ்நாளின் மிகச்சிறப்பன இன்னிங்சை மிகப்பெரிய தருணத்தில் அடித்தார்.

சச்சின் டெண்டுல்கரை வீரர்கள் அனைவரும் தூக்கியபடி மைதானத்தை வலம் வந்தனர். இந்திய வீரர்கள் மைதானத்தைச் சுற்றி வந்தனர். வெடி முழக்கம் காண்கிறது இந்தியா.

துவக்க ஓவரில் சேவாக் 0-இல் ஆட்டமிழக்க சற்றே அமைதி ஆனது. அதன் பிறகு சச்சினையும் மலிங்கா வீழ்த்திய பிறகு இலங்கை உண்மையில் வெற்றிப்பாதையில் அடியெடுத்து வைத்து விட்டதாகத்தான் தெரிந்தது.

ஆனால் கம்பீரும், கோலியும் அபாரமாக விளையாடி 31/1 என்ற நிலையிலிருந்து 114 ரன்களுக்கு ஸ்கோரை உயர்த்தினர். அப்போது கோலி 49 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து தில்ஷான் பந்தை அவரிடமே கேட்ச் கொடுத்தார். தில்ஷான் ஓவர் ரியாக்ட் செய்தார்.

கம்பீருடன், யாரும் எதிர்பாராத நிலையில் தோனி களமிறங்கினார். கேப்டனாக பொறுப்பை தன் தலையில் சுமந்தார் தோனி. இருவரும் இணைந்து 21 ஓவர்களில் 109 ரன்களைச் சேர்த்தனர். இந்தியா 41.2 ஓவர்களில் 223 ரன்கள் இருந்தபோது கம்பீர் 122 பந்துகளில் 97 ரன்கல் எடுத்து அபாரமாக விளையாடி வந்த நிலையில் சதம் எடுப்பதற்கு அவசரம் காட்டி பெரேரா பந்தை மேலேறி வந்து அடிக்க முயன்று பவுல்டு ஆனார். அப்போது இந்தியாவுக்கு சற்றே நெருக்கடி ஏற்படும் போல் இருந்தது.

ஆனால் தோனி அதன் பிறகு பெரேராவின் ஒரு பந்தை கவர் திசைக்கு மேல் மிகப்பெரிய சிக்சரை அடிக்க யுவ்ராஜ் சிங் ஒரு புல்ஷாட்டை ஆட நிலைமை சகஜமானது.

கடைசியில் பவர் பிளேயின் முதல் ஓவரில் மலிங்கா இரண்டு ரன்களே கொடுக்க 4 ஓவர்களில் 28 ரன்கள் என்று ஆனது.

ஆனால் அடுத்த குலசேகரா ஓவரில் யுவ்ராஜ் 2 பவுண்டரிகளை அடிக்க நிலைமை வேறானது. கடைசியில் 49-வது ஓவரின் 2-வது பந்தில் தோனி குலசேகராவை லாங் ஆன் திசையில் சிக்சர் அடித்து வெற்றி பெற்றார். ஒரு மிகப்பெரிய புன்னகையுடன் அவர் இலங்கை வீரர்களுக்குக் கை கொடுத்தார்.

தோனியும் யுவ்ராஜ்சிங்கும் 7 ஓவர்களில் 54 ரன்களைச் சேர்த்தனர். யுவ்ராஜ் சிங் 21 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

தோனியும், கம்பீரும் முரளிதரனை சிறப்பாக விளையாடியது வெற்றிக்கு வித்திட்டது. முரளி முதல் 6 ஓவர்களில் 20 ரன்களே கொடுத்திருந்தார். ஆனால் அதன் பிறகு தோனி அவர் பந்தை கவர் திசையில் மாட்டடி அடித்து 2- 3 பவுண்டரிகளை அடிக்க முரளி கடைசியில் 8 ஓவர்களில் 39 ரன்களை விட்டுக் கொடுக்க நேரிட்டது.

21 ஆண்டுகளாக இந்தியாவின் கிரிக்கெட்டை சுமந்த சச்சின் டெண்டுல்கரை நாங்கள் இன்று சுமந்து மைதானம் முழுதும் செல்வதை சிறப்பாகக் கருதுகிறோம் என்று விரட் கோலி தெரிவித்தார்.

2007ஆம் ஆண்டில் ஏற்பட்ட சரிவிற்குப் பிறகு கேரி கர்ஸ்டன், தோனி, கும்ளே ஆகியோர் தலைமையில் இந்தியா எழுச்சியுற்றது. இன்று அந்த எழுச்சியின் காரணம் நிறைவேறியது.

அபார இன்னிக்ஸை ஆடிய மகேலா ஜெயவர்தனே, கடைசி உலகக் கோப்பையையும், தனது கடைசி சர்வதேச கிரிக்கெட்டையும் விளையாடிய முரளிதரன் ஆகியோர் மற்றும் இலங்கையின் சிறந்த கேப்டன் சங்கக்காராவுக்கு மிகுந்த ஏமாற்றமளித்திருக்கும்.

274 ரன்கள் இந்த பிட்சில் வெல்லக்கூடிய ரன்களே. ஆனால் தோனியின் நம்ப முடியாத அசாத்தியமான ஓட்டம் மற்றும் அடி, ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டது.

சங்கக்காரா: "சிறந்த அணி வெற்றி பெற்றது. கவுதம் கம்பீர் சிறப்பாக விளையாடினார். தோனி ஒரு கேப்டனாக சரியான தருணத்தில் எழுச்சி பெற்றார்." இருப்பினும் எங்களுக்கு ஏமாற்றமாக உள்ளது.

ஆட்ட நாயகனாக சிறப்பாக விளையாடிய தோனி தேர்வு செய்யப்பட்டார்.

தொடர் நாயகன்: யுவ்ராஜ் சிங். 4 ஆட்டநாயகன் விருது, சிறந்த ஆல்ரவுண்ட் ஆட்டம். "இது நம்ப முடியாத தருணம், சச்சினுக்காகவும், அணிக்காகவும் நாட்டிற்காகவும் இந்த வெற்றியை சிறப்பானதாகக் கருதுகிறேன். நாங்கள் சாம்பியன்கள் போல் பேட்டிங் செய்தோம். நான் எனது பந்து வீச்சில் பயிற்சியை சற்று கவனமாக மேற்கொண்டேன்.

தோனி: கடந்த 1 மாதமாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம், அணியின் ஒவ்வொரு வீரரும் 100% பங்களித்தனர். இந்த ஆட்டத்தில் நான் முன்னால் களமிறங்க திட்டமிட்டேன், அந்த அணியில் 2 ஸ்பின்னர்கள் இருந்தனர். அதனால் இந்த முடிவை எடுத்தேன். அனைவரும் இந்த ஸ்கோரை நாங்கள் எட்டுவோமா மாட்டோமா என்று ஐயம் கொண்டிருப்பார்கள். ஆனால் கம்பீரும், கோலியும் ஒன்று, இரண்டு அவ்வப்போது பவுண்டரி என்று சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.

இந்திய அணியின் ஒவ்வொரு வீரர்களுக்கும் ஒரு கோடி ரூபாய் ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கேரி கர்ஸ்டன் உள்ளிட்ட துணை அணியினருக்கு தலா. ரூ.50 லட்சமும், அணித் தேர்வுக்குழுவினருக்கு தலா ரூ.25 லட்சமும் அறிவித்தது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.