’மிஸ் செய்கிறேன்; ஆனால் வருத்தப்படவில்லை’ - தோனி
டெஸ்ட் போட்டிகளில் விளையாடாதது இழப்புதான் என்றும் ஆனால், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதற்காக வருத்தப்படவில்லை என்று இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார்.
கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை புரிந்தவர் மகேந்திர சிங் தோனி. அதோடு, இந்திய கிரிக்கெட்டிற்கு வெற்றிகரமான கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். இன்றைய இளம் வீரர்களுக்கு சிறந்த முன்மாதிரியாகவும் திகழ்ந்து வருபவர் தோனி.
தோனி தலைமையிலான் இந்திய அணி உள்நாட்டில் சிறப்பாக செயல்பட்டது. ஆனால், இந்தியாவிற்கு வெளியே தொடர்ந்து தோல்வியையே சந்தித்தது. இதனையடுத்து, இவர் கடந்த 2014ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின்போது அதிரடியாக தனது ஓய்வை அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
தற்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள மகேந்திர சிங் தோனி, “டெஸ்ட் போட்டிகளில் விளையாடாதது இழப்புதான். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதற்காக வருத்தப்படவில்லை.
கிரிக்கெட் உடனான தொடர்பை யாராலும் விட முடியாது. கிரிக்கெட்டை விட்டு விலகிய பிறகும், எதாவது ஒரு வகையில் கிரிக்கெட் விளையாட்டுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முயல்கிறோம்.
இவ்வளவு ஏன், 40, 50 வயதிற்கு மேலும் கூட வர்ணனையாளராகவோ, இளம் அணிக்கு பயிற்சியாளராகவோ இருப்பதை பார்க்க முடியும்.
ஓய்விற்கு பிறகு எனது குடும்பத்துடன் செலவளிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நேரத்தில் கிரிக்கெட்டிற்கு வெளியே நிறைய திட்டமிடமுடிகிறது. ஜிம்மிற்கு போகிறேன். நிறைய ஓடுகிறேன். எனது உடலை பாதுகாத்து கொள்கிறேன். 30 வயதிற்கு மேல் உங்களது உடலின் மேல் கவனம் செலுத்துவது அவசியம்” என்று கூறியுள்ளார்.