ஒரு ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்கள்… சச்சின், கவாஸ்கர் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்!
இந்திய அணியின் இளம் வீரரான ஜெய்ஸ்வால் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பாக்ஸிங் டே போட்டியில் இந்திய அணி தோற்றால் கூட இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் அரைசதம் அடித்து இந்திய அணியை கௌரவமான தோல்வி பெறவைத்தார்.
அவரின் மிகச்சிறந்த ஆட்டங்களால் வர்ணனையாளர்கள் அவரை நியு கிங் என புகழ்த் தொடங்கியுள்ளனர். அதன் மூலம் கோலிக்குப் பிறகு இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை வழிநடத்தப்போகும் புதிய பேட்ஸ்மேனாக உருவாகிவிட்டார் ஜெய்ஸ்வால் என இப்போதே கருத்துகள் எழ ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் ஜெய்ஸ்வால் இந்த ஆண்டில் அதிக ரன்கள் சேர்த்த வீரராக உருவாகியுள்ளார். இந்த ஆண்டில் அவர் மூன்று சதங்கள் மற்றும் 9 அரைசதங்களோடு 1478 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம் ஒரே ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் (1562 ரன்கள் -2010 ஆம் ஆண்டு), கவாஸ்கர் (1555 ரன்கள் -1979 ஆம் ஆண்டு) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இடம்பெற்றுள்ளார்.