ஏன் ஷுப்மன் கில்லைக் கேப்டனாக்கினோம்… குஜராத் அணி பயிற்சியாளர் நெஹ்ரா பதில்!
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா, இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியால் மீண்டும் டிரேடிங் முறையில் வாங்கப்பட்டுள்ளதால் குஜராத் அணிக்கு புதிய கேப்டனாக இளம் வீரர் ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் கேப்டன் பதவியேற்கும் இளம் கேப்டனாக ஷுப்மன் கில் உருவாகியுள்ளார். குஜராத் அணியில் அனுபவம் வாய்ந்த கேன் வில்லியம்ஸன் இருக்கையில் ஷுப்மன் கில்லை கேப்டனாக்கியது சில விமர்சனங்களையும் சந்தித்தது.
இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாள ஆஷிஷ் நெஹ்ரா இதுபற்றி பேசியுள்ளார். அதில் “ஹர்திக் பாண்ட்யா போன்ற ஒரு வீரருக்கு மாற்றுவீரர் கொண்டுவருவது கடினம்தான். ஏனென்றால் அவரின் அனுபவம் அப்படி. அவருக்கு பதிலாக ஷுப்மன் கில்லை கேப்டனாக்கியுள்ளோம். அவர் கடந்த சில ஆண்டுகளாக தன்னை மேம்படுத்தி வந்துள்ளார்.
அவருக்கு 24 வயதே ஆனாலும் அவரிடம் தலைமைப் பண்புகள் உள்ளன. நாங்கள் அவரை நம்பி கேப்டனாக்கியுள்ளோம். எப்போதுமே நாங்கள் ரிசல்ட்களை தேடுவதில்லை. ரிசல்ட் முக்கியம் என்றாலும் வேறு சில விஷயங்களும் முக்கியம். அந்தவகையில் கேப்டன் பதவிக்கு கில் பொருத்தமான நபர்தான்” எனக் கூறியுள்ளார்.