1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2022 (15:37 IST)

சர்வதேச யோகா தினம்: ஆசனங்கள் மட்டுமே யோகா கிடையாது

ஜூன் 21 - சர்வதேச யோகா தினமாக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.  இம்முறை இந்த தினத்தின் கருப்பொருள் 'கொரோனா தடுப்பு.
 
முதல்முறையாக 2015ஆம் ஆண்டு ஜுன் 21ஆம் தேதிதான் யோகா தினம் என்ற ஒன்று கடைபிடிக்கப்பட தொடங்கப்பட்டது. இது ஏழாம் ஆண்டு.
 
2014 செப்டம்பர் 27ஆம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஐநா பொது சபையில் பேசியபோது, ஒவ்வொரு ஆண்டும் யோகா தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று முன்மொழிந்தார்.
 
அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 21ஆம் தேதி யோகா தினம் கொண்டாடப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் நிறைவேற்றியது.
 
யோகாவின் எட்டு அங்கங்களில் ஒன்று பிராணாயாமா. இது மூச்சு விடுதலில் கவனம் செலுத்துகிறது. அனைத்து எட்டு அங்கங்களும் சேர்த்து அஷ்டாங்க யோகா என்று அழைக்கப்படுகிறது.
 
யோகா என்றால் ஒன்றிணைதல் அல்லது ஒருமுகப்படுத்துதல். மனதை கட்டுப்படுத்தி மன அழுத்தங்களை குறைத்து, அமைதி தருவது.
 
பல சகாப்தங்களுக்கு முன், மகாரிஷி பதஞ்சலி, விடுதலைக்கான எட்டுக்கதவுகளை விவரித்திருக்கிறார். அதையே நாம் இன்று 'அஷ்டாங்க யோகா' என்று கூறுகிறோம்.
 
தற்போதைய சகாப்தத்தில், ஆசனம், பிராணயாமம், தியானம் போன்ற அஷ்டாங்க யோகாவின் சில பகுதிகளை மட்டுமே நாம் அறிந்து கொள்ள முடிந்தது.
 
இந்தக் கட்டுரையில் பதஞ்சலி யோகாவின் எட்டு அங்கங்களை குறித்த தகவல்களை பார்க்கலாம்.
 
1. யமம்
 
இதில் 5 விஷயங்களை ஒருவர் பின்பற்ற வேண்டும்
 
அகிம்சை - எண்ணத்தால், செயலால், சொல்லால் யாரையும் புண்படுத்தாமல் இருத்தல்
 
வாய்மை - சத்தியம், உண்மையை கடைபிடித்தல்
 
கள்ளாமை - களவு செய்யாது இருத்தல்
 
பிரம்மச்சார்யம் - காமம் கடத்தல்
 
அவாவறுத்தல் - தனக்கு மட்டும் என்று சொந்தம் கொண்டாடாமல் இருப்பது; பேராசயை அடக்குதல்
 
2. நியமம்
 
இதிலும் ஒருவர் 5 விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்
 
ஷௌச்சம் - தூய்மையான எண்ணம் மற்றும் செயல்கள்
 
சந்தோஷம் - திருப்தி; போதுமென்ற மனம்
 
தவம் - நற்பண்புகளை அடைந்து தீய பண்புகளை நீக்குதல்
 
சுவாத்யாயம் - வேதங்களை படித்தல்; ஆன்மிக வாழ்வுக்கு ஏற்ற நூல்களை படித்து பயன்பெறுதல்
 
ஈஸ்வர பிரனிதானம் - இறைவழிபாடு
 
3. ஆசனம்
 
தற்போது யோகா என்றால் பலரது நினைவுக்கு வருவது ஆசனம்.
 
ஆசனம் என்பது வெறும் கை, கால்களை அசைக்கும் உடற்பயிற்சி மட்டுமே கிடையோது.
 
இதுதொடர்பாக பதஞ்சலி மகரிஷி சொல்வது என்னவென்றால், திடமாகவும், சுகமாகவும் அமர்ந்திருக்க வேண்டும், இல்லையென்றால் அது ஆசனம் இல்லை என்று குறிப்பிடுகிறார்.
 
4. பிராணாயாமம்
 
மூச்சுக்காற்றை ஒழுங்குப்படுத்துவது.
 
மூச்சை விடுதல் மற்றும் பிடித்தல் ஆகிய இரண்டையும் முறையாக செய்வதால், ஒருவரின் மனதையும், உடலையும் இணைக்க உதவும் என்று கூறப்படுகிறது.
 
5. பிரத்தியாகாரம்
 
பிரத்தியாகாரம் என்பது அனைத்து புலன்களையும் கட்டுப்படுத்துவது ஆகும். மொத்தம் 11 புலன்கள் உள்ளன. அதாவது ஐந்து உணர்வுகள், ஐந்து செயல் புலன்கள் மற்றும் ஒரு மனம்.
 
பிரதி மற்றும் அகாரா, அதுவே பிரத்தியாகாரம் எனப்படுகிறது. அதாவது புலன்கள் அனுபவிக்கும் விஷயங்கள். உதாரணமாக உண்ணுவது.
 
நாம் எந்த செயல் செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு ஆற்றல் தேவைப்படும் என்று அறிவுஜீவிகள் கூறுகிறார்கள்.
 
புலன்களின் தொடர்ச்சியான அவசரம் நம்மை சக்தியற்றதாக்குகிறது.
 
புலன்களின் அவசரத்தை கைவிட்டு, மகிழ்ச்சியாக இருப்பதே பிரத்தியாகாரம்
 
6. தாரணம்
 
ஒரு இடத்தில் மனதை பொருத்துதல்.
 
இந்நாட்களில் இது தியானத்தோடு குழப்பிக் கொள்ளப்படுகிறது
 
மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிதான் தாரணம்.
 
இது பிராணதரனா போன்ற பல வடிவங்களை கொண்டது. தாரணம் என்பது தியானத்துக்கு முன் நிலை. மனம், எண்ணோட்டத்தை தாரணம் கட்டுப்படுத்துகிறது. ஒருவருக்கு அமைதியை தருகிறது.
 
7. தியானம்
 
தாரணம் இருந்தால்தான் தியானம் சாத்தியமாகும் என்று யோக சூத்திரம் சொல்கிறது.
 
நம்மால் தியானம் செய்ய முடியாது. அதுவாகவே நிகழ வேண்டும்.
 
உதாரணமாக நாம் தூங்க முயற்சிக்கலாம். ஆனால் நம்மால் முடியாது. அது தானாகவே நிகழ வேண்டும்.
 
தியானம் என்று நாம் என்ன செய்தாலும், அது தாரணத்திற்கு இட்டுச் செல்லும், அதாவது ஒரு இடத்தில் மனதை பொருத்துதல்.
 
பொருந்திய மனதை அங்கேயே நிலைநிறுத்தச் செய்யும் முயற்சியே தியானம்.
 
8. சமாதி
 
சமா என்றால் சமம். இதிலிருந்து வந்த வார்த்தைதான் சமாதி.
 
யோகா யஜ்னாவல்க்ய சம்ஹிதாவில், ஆன்மா மற்றும் உச்ச ஆத்மாவின் சமத்துவ நிலை சமாதி என்று அழைக்கப்படுகிறது.
 
யோகி தனது உண்மையான வடிவத்தில் உள்வாங்கப்படும்போது, தேடுபவரின் அந்த நிலை சமாதி என்று அழைக்கப்படுகிறது என்று மகரிஷி பதஞ்சலி கூறுகிறார்.
 
சமாதி என்பது சரியான யோக நிலையின் வெளிப்பாடு.
 
புத்தர் அதை நிர்வாணம் என்றும் மகாவீரர் கைவல்யா என்றும் அழைத்தார்.