ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 30 மே 2019 (12:27 IST)

நேசமணி குணமாக தமிழர்கள் வேண்டுவது ஏன்? - ஹிட் அடித்த பொறியாளர்கள்

நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த கதாபாத்திரம் ஒன்றுக்கு அடிபட்டுவிட்டதாகவும் அவருக்காக பிராத்திக்கும்படியும் வேடிக்கையாக சமூக வலைதளங்களில் துவங்கிய பிரச்சாரம் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது.
 
ஃபேஸ்புக்கில் உள்ள Civil Engineers Learners என்ற பக்கத்தில், மே 27ஆம் தேதியன்று சுத்தியல் ஒன்றின் படத்தை வெளியிட்டு, இதை உங்கள் நாட்டில் எப்படி அழைப்பீர்கள் எனக் கேட்கப்பட்டிருந்தது.
 
அந்தப் படத்தின் கீழ், துபாயில் வசிக்கும் தமிழரான விக்னேஷ் பிரபாகர் என்பவர், "இதை நாங்கள் சுத்தியல் என்று அழைப்போம். இதை எதன் மீதாவது அடித்தால் டங், டங் என சத்தம் வரும். ஜமீன் பங்களாவில் வேலை பார்க்கும்போது பெயிண்ட்டிங் கான்ட்ராக்டர் நேசமணியின் தலையை அவரது அண்ணன் மகன் இதை வைத்து உடைத்துவிட்டார். பாவம்." எனக் குறிப்பிட்டிருந்தார். அடுத்தடுத்த கமென்ட்களில், நேசமணிக்காக பிரார்த்தனை செய்யவும் என்ற பொருளில், #Pray_for_Nesamani என்ற ஹாஷ்டாகையும் பயன்படுத்தியிருந்தார்.
 


 
சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்த ஃப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் கட்டட வேலைகளைச் செய்யும் கான்ட்ராக்டராக வரும் வடிவேலுவின் தலையில் ரமேஷ் கண்ணா சுத்தியலைப்போடும் காட்சியையே விக்னேஷ் பிரபாகர் வேடிக்கையாகக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் படத்தில் வடிவேலுவின் பெயர் நேசமணி. ரமேஷ் கண்ணாவின் பெயர் கிருஷ்ணமூர்த்தி.


 
சிறிது சிறிதாக பிரபலமான இந்த ஹாஷ்டாக் நேற்று முதலில் சென்னையிலும் பிறகு உலக அளவிலும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்துள்ளது. மாலை முதலே சென்னையில் இந்த ஹாஷ்டாக் முதலிடத்தில் இருந்து வருகிறது.

 

முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது ஊடகங்களில் வெளியான செய்திகளைப் போன்ற செய்திகளை வடிவேலுவை வைத்து உருவாக்கி, மீம்களும் வீடியோ காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.