வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 20 ஆகஸ்ட் 2015 (20:41 IST)

தொடர்ந்து அரசியலில் நீடிப்போம்: வித்யாதரன்

தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும்கூட, தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாக ஜனநாயகப் போராளிகள் கடசியின் இணைப்பாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் கூறியுள்ளார்.

அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் முடிந்தபோது, ராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வுப் பயிற்சியளிக்கப்பட்டதன் பின்னர், சமூகத்தில் இணைக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களில் சிலர் ஒன்றிணைந்து ஜனநாயகப் போராளிகள் கட்சி என்ற கட்சியைத் தொடங்கி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டனர்.
இவர்களின் இணைப்பாளராக மூத்த ஊடகவியலாளராகிய வித்தியாதரன் செயற்பட்டு வருகின்றார்.
 
இந்தத் தேர்தலில் தங்களுக்கு தோல்வி ஏற்பட்டிருந்த போதிலும், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களும் அச்சமின்றி அரசியலில் ஈடுபட முடியும் என்பதை நிலைநாட்டியிருப்பதாக வித்யாதரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
 
இதை ஒரு சாதனையாகத் தாங்கள் கருதுவதாகவும் வித்தியாதரன் குறிப்பிடுகிறார்.
 
ஏவ்வித பின்புலமுமின்றி அரசியலுக்குள் பிரவேசித்துள்ள தங்களை ராணுவ புலனாய்வாளர்களே ஏவிவிட்டிருந்ததாகக் கூறி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தங்களைப் புறந்தள்ளியதன் காரணமாகவே தாங்கள் தனித்து தேர்தலில் போட்டியிட்டதாக வித்தியாதரன் கூறினார்.
 
தங்களை இராணுவப் புலனாய்வாளர்களே ஏவிவிட்டிருப்பதாக மிதவாத அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பலமான பிரசாரத்தை மேற்கொண்டிருந்ததாகவும் அதனை முறியடிக்கும் வகையில் தங்களால் பிரசாரத்தை முன்னெடுக்க முடியாத காரணத்தினாலேயே தாங்கள் தோல்வியடைந்ததாகவும் வித்யாதரன் கூறினார்.
 
எனினும் தமிழ் மக்களின் கோரிக்கைகள், பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காகக் காத்திரமான முறையில் அரசியல் செயற்பாடுகளை எதிர்காலத்தில் தாங்கள் முன்னெடுக்கவுள்ளதாகவும் வித்யாதரன் கூறினார்.