1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 17 ஜனவரி 2023 (14:53 IST)

நாஜிக்களின் செல்வத்தை தேடி பழைய வரைபடத்தோடு கிராமத்திற்குள் புகுந்த புதையல் வேட்டைக்காரர்கள்

BBC
இரண்டாம் உலகப் போரின்போது நாஜி படையினரால் மறைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் கோடிக்கணக்கான செல்வங்களைத் தேடும் முயற்சியில் டச்சு கிராமமான ஓம்மெரெனில் புதையல் வேட்டையாடுபவர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், அங்கிருக்கும் குடியிருப்புவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட வைரங்கள், மாணிக்கங்கள், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் நிரப்பப்பட்ட பெட்டிகளை ஜெர்மன் வீரர்கள் எங்கு புதைத்திருக்கலாம் என்பதை வெளிப்படுத்தும் விதமான ஒரு பழைய வரைபடம், கடந்த வாரம் டச்சு தேசிய ஆவணக் காப்பகத்தால் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இந்தத் தேடுதல் வேட்டையில் பலர் ஈடுபட்டுள்ளனர்.

75 ஆண்டுகளாக ரகசியமாகப் பாதுகாக்கப்பட்ட அந்த ஆவணங்கள், கிழக்கு மாகாணமான கெல்டர்லேண்டில் உள்ள ஓம்மெரென் என்ற இடத்தில் புதையல் இருப்பதாகக் கூறுகிறது.

1944ஆம் ஆண்டு நேச நாடுகளின் மார்க்கெட் கார்டன் நடவடிக்கையின்போது இந்த கிராமம் அங்கு அருகில் இருந்தது.

தற்போது ஓம்மெரென் முழுவதும் அங்கீகரிக்கப்படாத அகழ்வாராய்ச்சிக்கான சான்றுகள் உள்ளன.

தன்னுடைய நாயுடன் நடந்து கொண்டிருந்த சாண்டர், "மன அமைதிக்காகத்தான் நான் இங்கு வந்தேன். தற்போது மொத்த உலகத்திற்கும் எங்களைப் பற்றி தெரியும்" என்றார்.

புதையல் மறைந்திருக்கும் இடத்திற்கு வழி கேட்டு இவரது வீட்டுக்கதவை பலரும் தட்டியுள்ளனர். புதையல் தேடி சில இளைஞர்கள் குழுவாகத் தோண்டுவதைக் கூட அவர் பார்த்தார்.

"இந்தப் பகுதி ஏற்கெனவே வரலாறு நிறைந்து உள்ளது. அங்குள்ள வைட் வில்லா, நாஜி அதிகாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. புதிய ரகசியங்கள் வெளிவரும்போது, அது மக்களின் ஆர்வத்தை மீண்டும் தூண்டுகிறது," என்கிறார் சாண்டர்.

ஜெர்மன் படைவீரரின் சாட்சியம் உட்பட ஆவணக் காப்பகத்தில் இருந்த வகைப்படுத்தப்பட்ட ஆவணங்கள் 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளான நிலையில், பெட்டகத்தில் இருந்த நகைகள், நாணயங்கள், விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் தங்கக் கடிகாரங்கள் சிதறின.

அங்கு ஆக்கிரமிப்பு செய்திருந்த ஜெர்மன் வீரர்கள் மூன்று, நான்கு பேர் தங்களால் முடிந்த அளவுக்கு அவற்றைப் பெட்டிகளில் நிரப்பிக் கொண்டனர்.
பின்னர் போரின் கடைசி வாரங்களில் ஜெர்மன் வீரர்கள் பின்வாங்கிய நிலையில், வீரர்கள் புதையலைப் புதைக்க முடிவு செய்தனர்.

போருக்குப் பிறகு, நாஜிகளால் அபகரிக்கப்பட்ட பொருட்களைக் கண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு டச்சு நிறுவனம், ஹெல்முட் சோண்டர் என்ற இளம் ஜெர்மன் பாராசூட் அணி வீரர் குறித்து கேள்விப்பட்டது. அவர் நேரில் கண்டதை அடிப்படையாக வைத்து, தற்போதைய வரைபடம் வரையப்பட்டது. 

வரைபடம் வெளியிடப்படுவதற்கு முன்பே புதையலைத் தோண்டுவதற்கான பல முயற்சிகளை டச்சு அரசு மேற்கொண்டது.

ஓம்மெரெனை சேர்ந்த 42 வயதான பெட்ரா வான் டீ, இந்தத் தகவலை வெளியிட்டதற்காக டச்சு தேசிய காப்பகத்தின் மீது கடும் கோபத்தில் உள்ளார். இது அவரது குடும்பத்தினருக்கு பாதிக்கப்பட்ட உணர்வைத் தந்துள்ளது.

"என்னால் தூங்க முடியவில்லை. அவர்கள் என் தோட்டத்தில் தோண்டவில்லை, என் இதயத்தைத் தோண்டினார்கள்," என்று தன் மார்பை நோக்கிக் கைகாட்டினார்.

நிருபர்கள் அவரது நிலத்தில் மைக்ரோஃபோன்கள், மெட்டல் டிடெக்டர்களை பயன்படுத்தித் தேடிக்கொண்டிருந்தனர்.

இரவு நேரங்களில் நெற்றியில் மின்விளக்குகள் கட்டி, ஆவேசமாக மண்வெட்டியைக் கொண்டு புதையல் தேடும் நபர்களால் அவரது அண்டை வீட்டார்கள் தூக்கத்தைத் தொலைத்துள்ளனர்.

பல தசாப்தங்களாக நாஜி புதையல் வரைபடம் மற்றும் பிற ஆவணங்கள் தேசிய காப்பகத்தில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. 

"நாங்கள் இதை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை," என்கிறார் ஃப்ரீடம் ஆஃப் இன்ஃபர்மேஷன் ஆலோசகர் ஆனெட் வால்கென்ஸ்.

ஒரு புதையல் வரைபடம் உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் என்று எங்களுக்குத் தெரிந்திருந்தால் ஊழியர்கள் நகராட்சியை முன்கூட்டியே எச்சரித்திருப்பார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

அகழ்வாராய்ச்சி செய்யும்போது  தொழில்முறை அல்லாத அகழ்வாராய்ச்சியாளர்கள் இரண்டாம் உலகப் போரில் வெடிக்காத குண்டுகள் அல்லது கண்ணிவெடிகளை வேலை செய்ய வைக்கும் அபாயம் இருப்பதால், மெட்டல் டிடெக்டர்கள் சமீபத்தில் ஓம்மெரெனில் தடை செய்யப்பட்டன.

யாரேனும் தங்கத்தைக் கண்டுபிடித்தால் அவர்கள் அதை உள்ளாட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

இது ஒரு சாகச நாவலுக்கு போட்டியாக இருந்தாலும், 50 மில்லியன் உயிர்களைக் காவு வாங்கிய மோதலின் உண்மைகளை நினைவூட்டுகிறது. இதில் ஆறு மில்லியன் யூதர்கள் இன அழிப்பில் கொல்லப்பட்டனர்.


ஒவ்வொரு போர்க்காலக் கதையிலும், சோகம் வருகிறது என்று கூறும் ஆனெட் வால்கென்ஸ் இந்த விஷயத்தில், ஆர்ன்ஹெம் போன்ற நகரங்களின் மக்கள் தங்களுடைய மதிப்புமிக்க பொருட்கள் உட்பட அனைத்தையும் இழந்த கதையை இது நமக்கு நினைவூட்டுவதாகவும் கூறுகிறார்.

இந்த வரைபடத்தை வரைந்த ஜெர்மன் பாராசூட் அணி வீரர் இறந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று டச்சு காப்பக வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே, அவர்களின் அனுமானப்படி, ஹெல்முட் சோண்டரிடம் இந்த புதையலைக் கண்டறிவதற்கான திறவுகோல் இருக்கலாம்.

இந்தப் பகுதியில் செல்வங்கள் ஒருபோதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தப் புதையல் தொடர்பான டச்சு ஆவணக் காப்பகம் சில சாத்தியமுள்ள விளக்கங்களைத் தருகிறது.

ஹெல்மெட் சோண்டர் பொய் சொல்லியிருக்கலாம். 

அருகில் வசிக்கும் யாரோ, அல்லது ஒருவேளை ஜெர்மன் சிப்பாய்களில் ஒருவரோ இங்கிருந்து படைகள் கிளம்பும் முன் செல்வத்தை மீட்டிருக்கலாம்.

டச்சு நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர், தன் அறிவைப் பயன்படுத்தி தனிப்பட்ட முயற்சியில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ரகசியமாக செல்வத்தைக் கைப்பற்றியிருக்கலாம்.

கண்டிபிடிக்க சவாலான புதையல் ஒருகாலத்தில் இருந்திருந்தாலும்  அவை நீண்ட காலத்திற்கு முன்பே இல்லாமல் போய்விட்டது என டச்சு அதிகாரிகள் நம்புகின்றனர்.
எனினும், சில கிராமவாசிகள் நாஜி புதையல் காணாமல் போனது விசித்திரக் கதை என்று வாதிடுகின்றனர்.

ஓம்மெரெனின் சர்வதேச கவனத்தை ஈர்த்திருப்பது குறித்து பேசிய அலெக்சாண்டர், நாங்கள் இப்போது பிரபலமாக இருக்கிறோம் என்று நினைக்கிறேன் என்றார்.
ஆனால் புதையல் வேட்டையில் சேர அவருக்கு விருப்பம் இல்லை. 

என்னிடம் என் பொக்கிஷம் உள்ளது என்று தன்னுடைய மனைவி, மகளை நோக்கி தலையசைத்த அவர், எனக்கு கோடிக்கணக்கில் பணம் தேவையில்லை என்றார்.