நரேந்திர மோதி வாழ்க்கை குறித்த சினிமாவை வெளியிட தேர்தல் ஆணையம் தடை

modi
Last Modified புதன், 10 ஏப்ரல் 2019 (19:55 IST)
தேர்தல் சமயத்தில் நரேந்திர மோதி வாழ்க்கை குறித்த சினிமாவை வெளியிட கூடாது என்று புதன்கிழமை தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.
அரசியல் அமைப்பு அல்லது தனிநபர் பற்றி மின்னணு ஊடகங்களில் காட்சிகள் தோன்றக்கூடாது என்ற குறிக்கோளுக்கு எதிராக இந்த சினிமா அமைவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
இந்தியாவில் நடைபெறும் மக்களவைத் தேர்தலின் முதல் கட்டம் வியாழக்கிழமை தொடங்குகிறது.
 
இது தொடர்பான முடிவை எடுப்பதற்கு பொருத்தமான அமைப்பு தேர்தல் ஆணையமே என்று செவ்வாய்க்கிழமை கூறிய உச்ச நீதிமன்றம், இந்த சினிமா வெளியிடுவதற்கு தடை விதிக்க காங்கிரஸ் செயற்பாட்டளார் தொடுத்த மனுவை நிராகரித்தது.
 
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோதியின் வாழ்க்கை வரலாற்றை கூறும் படமான 'PM Narendra Modi' திரைப்படம் ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், அந்த வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளர் தெரிவித்தார்.
 
இப்படத்தின் ட்ரைலர் வெளியான போது, இது ஒரு பிரசார உக்தி என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டது. இப்படத்தில் பிரதமர் மோதியாக நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.
 
அரசியலுக்கும் இப்படத்திற்கும் தொடர்பில்லை என்றும், சொந்தப் பணத்திலேயே இப்படம் தயாரிக்கப்பட்டதாகவும் அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்திருந்தனர்.
 
இந்நிலையில், ஏப்ரல் 5ஆம் தேதி இப்படம் வெளியாகாது என்றும் எப்போது வெளியாகும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படத்தின் இயக்குநர் ஒமுங் குமார் கூறியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.
 
 இந்திய மக்களை ஊக்குவிக்கும் வகையில், பிரதமர் மோதி ஒரு சிறந்த மனிதர் என்றும் அதனை மக்களுக்கு கூறவே இந்த படத்தை எடுத்ததாகவும் இதன் தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் சந்தீப் சிங் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.
 
 
"அரசியல் அல்லது அரசியல்வாதிகள் அல்லது எந்த கட்சிக்கும் எனக்கும் தொடர்பில்லை. எதிர்க்கட்சிகள் இந்த படம் குறித்து அச்சப்பட்டால், தங்கள் தேசத்திற்கும், அந்தந்த மாநிலங்களுக்கும் அவர்கள் செய்தது பற்றி அவர்களுக்கு நம்பிக்கை இல்லையா?" என்று பிபிசியிடம் பேசியபோது சந்தீப் கேள்வி எழுப்பினார்.
 
'PM Narendra Modi' திரைப்படம் தேர்தலுக்கு முன்பு வெளியிடப்பட்டால், அது வாக்காளர்களின் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற சர்ச்சை இருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் மேலும் படிக்கவும் :