வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinojkiyan
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (21:28 IST)

சசி தரூர் பகிர்ந்த நேரு - இந்திரா காந்தி புகைப்படத்தின் உண்மை என்ன?

ஜவஹர்லால் நேருவையும், இந்திரா காந்தியையும் பெருங்கூட்டம் சூழந்து நின்று பார்க்கும் புகைப்படம் ஒன்றை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் டிவிட்டரில் பகிர்ந்தார். அந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டுள்ளது.
ஜவஹர்லால் நேருவும், இந்திரா காந்தியும் 1954ம் ஆண்டு அமெரிக்கா சென்றபோது எடுத்த புகைப்படம் என்ற தகவலோடு தரூர் இந்த புகைப்படத்தை திங்கள்கிழமை இரவு டிவிட்டரில் பகிர்ந்தார்.
 
"எந்த பரப்புரை மூலமோ, வெளிநாடு வாழ் இந்தியர் சமூகத்திடையே ஏற்பாடுகள் செய்தோ, மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்கள் வாயிலாகவோ இல்லாமல் 1954ம் ஆண்டு நேருவையும், இந்திராகாந்தியையும் பார்க்க. தன்னிச்சையாக, ஆர்வத்தோடு அமெரிக்க மக்கள் பெருமளவில் வந்துள்ளதை பாருங்கள்" என்று சசி தரூர் அந்த டிவிட்டர் பதிவில் கூறியிருந்தார்.
 
காங்கிரஸுக்கு ஆதரவான பக்கங்கள், வாட்ஸப் மற்றும் ஃபேஸ்புக் குழுக்களிலும் இந்த ட்வீட் அதிகமாக பகிரப்பட்டுள்ளது.
 
ஆனால், அவரது டிவிட்டர் பதிவில் தவறு உள்ளது. இந்த தவறை சசி தரூரே பின்னர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் ஒப்புக்கொண்டுள்ளார்.
 
இந்தப் புகைப்படம் அமெரிக்காவில் எடுக்கப்பட்டதல்ல. ஜவஹருலால் நேருவும், இந்திரா காந்தியும் அப்போதைய சேவியத் யூனியனில் பயணம் மேற்கொண்டபோது எடுத்த புகைப்படமாகும் இது.
 
சசி தரூர் பதிவிட்ட இந்த புகைப்படம் ரஷ்யாவின் மாஸ்கோவில் எடுக்கப்பட்டதாக பலரும் தெருவித்தனர். இந்த கருத்தும் தவறானதே.
 
1955ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு தனது மகளோடு சோவியத் யூனியனில் பயணம் மேற்கொண்டார்.
 
அங்கு முதலில் சோவியத் ஒன்றியத்தின் முதன்மை செயலாளர் அவர்களை வரவேற்றார். பின்னர் சோவியத் ஒன்றிய அதிபர் நிக்கிடா குருசேவ் ஃபுருஜி விமான நிலையத்தில் அவர்களை வரவேற்றார்.
 
15 நாட்கள் மேற்கொண்ட இந்தப் பயணத்தின்போது, தொடக்கப்பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் பலவற்றை அவர்கள் பார்வையிட்டனர்.
 
அப்போது, ரஷ்யாவின் மோசோ நகரில் ஓடிய மெட்ரோ ரயிலையும் நேரு பார்வையிட்டார்,
 
புகைப்படம் மாஸ்கோவில் எடுக்கப்பட்டதும் அல்ல
 
ரஷ்யாவின் அதிகாரபூர்வ பதிவேடுகளின்படி, மாக்னிடோகோர்க், ஸ்வெர்ட்லோவ்ஸ்க், லெனின்கிராட், தாஷ்கண்ட், அஷ்கபாத் மற்றும் மாஸ்கோ உள்பட சோவியத் ஒன்றியத்தின் 12 முக்கிய நகரங்களை நேரு அப்போது பார்வையிட்டார்.
 
ரஷ்யாவில் நேரு பார்வையிட்ட இடங்கள்
 
மிகவும் வைரலாக பகிரப்பட்டுள்ள நேருவும், இந்திரா காந்தியும் இருக்கின்ற இந்த புகைப்படமானது ரஷ்யாவின் மாக்னிடோகோர்க் நகரில் எடுக்கப்பட்டதாகும்.
 
"ரஷ்யா பியாண்ட" (Russia beyond) என்கிற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, 1955ம் ஆண்டு ஆற்றங்கரையோர தொழில் நகரமான மாக்னிடோகோர்க் நகருக்கு நேருவும், இந்திரா காந்தியும் சென்றபோது, தொழிலாளர்களும், நகரவாசிகளும் அவர்களை பார்க்க கூட்டமாக வந்துள்ளனர்.
 
செவ்வாய்கிழமை காலை ட்விட்டரில் பதிவிட்ட சசி தரூர், தனக்கு ஃபார்வார்ட் செய்யப்பட்ட அந்த புகைப்படம் அமெரிக்காவில் எடுக்கப்பட்டதல்ல; சோவியத் ஒன்றியப் பயணத்தின்போது எடுக்கப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக தனக்கு கூறப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும், முன்னாள் பிரதமர்கள் வெளிநாடுகளில் பிரபலமடைந்திருந்தனர் என்ற இந்தப் பதிவின் கருத்து மாறுபடவில்லை. பிரதமர் நரேந்திர மோதிக்கு மதிப்பு கிடைக்கும்போது, அது இந்தியப் பிரதமருக்கு வழங்கப்படும் மதிப்பு. இந்தியாவுக்கான மரியாதை" என்று குறிப்பிட்டுள்ளார்.