1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 24 ஜனவரி 2023 (23:21 IST)

ரஷ்யா: கட்டாய ராணுவ சேவையில் இருந்து தப்பிக்க காட்டுக்குள் ஒளிந்த ஐ.டி இளைஞர்

கடந்த ஆண்டு செப்டம்பரில் அணி திரட்டல் குறித்த அறிவிப்பை ரஷ்ய அதிபர் புதின் வெளியிட்ட போது, ஒரு வாரம் சிந்தித்த ஆடம் கலினின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காட்டிற்குள் குடிபெயர்ந்துவிடலாம் என முடிவெடுத்தார்.
 

தகவல் தொழில்நுட்ப வல்லுநரான ஆடம் கலினின், தொடக்கத்தில் இருந்தே போருக்கு எதிராக உள்ளார். தன்னுடைய குடியிருப்பு சுவரில் போர் வேண்டாம் என்ற சுவரொட்டியை ஒட்டியதற்காக அபராதமும் இரண்டு வாரம் தடுப்புக் காவல் தண்டனையும் பெற்றார். போரில் பின்னடவை சந்தித்துக் கொண்டிருந்த ரஷ்யா, போரில் பங்கேற்க 3,00,000 ரஷ்ய ஆண்களுக்கு அழைப்பு விடுத்தபோது போர்க்களத்திற்குச் சென்று யுக்ரேனியர்களை கொல்ல ஆடம் கலினின் விரும்பவில்லை. ஆனால், அதற்காக மற்றவர்களைப் போல அவர் நாட்டை விட்டு வெளியேறவில்லை. நண்பர்கள், நிதிச் சூழல், தனக்குத் தெரிந்ததைக் கைவிடுதல் ஆகிய மூன்று நிலைமைகள் அவரைத் தொடர்ந்து ரஷ்யாவிலேயே இருக்கச் செய்தன. ''எனக்கு வசதியான நிலையில் இருந்து வெளியேறுவது கடினமாக இருக்கும். இங்கு உண்மையில் வசதியாக இல்லை, ஆனால் இங்கிருந்து வெளியேறுவது உளவியல்ரீதியாக கடினமாக இருக்கும்,’’ என ஆடம் கலினின் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
எனவே, தன்னுடைய மனைவியிடம் தெரிவித்துவிட்டு காட்டிற்குச் சென்ற அவர், கடந்த நான்கு மாதங்களாக அங்குதான் முகாம் அமைத்து வாழ்கிறார்.
 
இணைய வசதிக்காக மரத்தில் ஆன்டனாவைவும் மின்சாரத்திற்காக சூரிய ஒளித் தகடுகளையும் கலினின் பொருத்தி வைத்துள்ளார். -11 டிகிரி செல்ஷியஸ் வரை குளிரை எதிர்கொள்ளும் ஆடம் கலினின், மனைவி கொண்டு வந்து தரும் உணவுப் பொருட்களை வைத்து உயிர் வாழ்கிறார். காட்டிற்குள் வசிப்பதே போரில் பங்கேற்பதற்கான அழைப்பைத் தவிர்ப்பதற்கு தனக்குக் கிடைத்த சிறந்த யோசனை என்று அவர் கூறுகிறார்.
 
அதிகாரிகளால் நேரில் சந்தித்து போருக்கான அழைப்பாணையை அவரிடம் கொடுக்க முடியவில்லை என்றால், போருக்குச் செல்லும்படி அவரை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. காட்டிற்குள் வாழ்ந்தாலும் கலினின் தன்னுடைய பழைய வாழ்க்கையையே வாழ்கிறார். தன்னுடைய பழைய வேலையிலேயே தொடரும் அவர், தினமும் எட்டு மணி நேரம் வேலை செய்கிறார்.
 
அவரது சக பணியாளர்கள் பகுதி அணி திரட்டல் அறிவிப்பைத் தொடர்ந்து ரஷ்யாவில் இருந்து வெளியேறி கஜகஸ்தான் சென்றனர். ஆனால், பைன் மரங்களுக்கு இடையே அவர் அமைத்திருக்கும் உயர்திறன் கொண்ட ஆன்டெனா காரணமாக தகவல் தொடர்பு பிரச்னை கலினினுக்கு ஏற்படவில்லை. வெளியே சுற்றுவதை மிகவும் விரும்பும் கலினின், தன்னுடைய கடந்தகால விடுமுறைகளை தெற்கு ரஷ்யாவில் முகாம் அமைத்துக் கழித்துள்ளார். எனவே காட்டுக்குள் செல்ல வேண்டும் என்று அவர் முடிவெடுத்த போதே அதற்குத் தேவையான பொருட்கள் அவரிடம் ஏராளமாக இருந்தன. புத்தாண்டை முன்னிட்டு இந்த முகாமிற்கு வந்து இரண்டு நாட்கள் செலவழித்த அவரது மனைவி, கலினின் உயிர் பிழைத்திருப்பதில் முக்கிய பங்காற்றுகிறார். ஒவ்வொரு மூன்று வாரத்திற்கும் ஒருமுறை இருவரும் தனியாகச் சந்திக்க வாய்ப்புள்ள இடத்திற்கு அவர் உணவுப் பொருட்களைக் கொண்டு வருகிறார். பின்னர், அதை அங்கிருந்து எடுத்துச் செல்லும் கலினின் அதை ஒரு பாதுகாப்பான இடத்தில் சேகரித்து வைத்து, சில தினங்களுக்கு ஒருமுறை அங்கு சென்று எடுத்து வருகிறார். தற்காலிக விறகு அடுப்பைப் பயன்படுத்தி கலினின் காட்டில் சமையல் செய்கிறார்.
 
"என்னிடம் ஓட்ஸ், டீ, காபி, சர்க்கரை உள்ளது. போதுமான புதிய பழங்களும் காய்கறிகளும் இல்லை என்றாலும், இருப்பவை மோசமாக இல்லை," என்கிறார் கலினின். முதன்முதலில் காட்டிற்குள் வந்ததும் ஐந்து நிமிடத்தில் சென்றடையக் கூடிய வகையில் இரண்டு முகாம்களை அவர் தனித்தனியே அமைத்தார். ஒன்று, இணைய வசதியுடன் கூடிய வேலை பார்ப்பதற்கான இடம். மற்றொன்று உறங்குவதற்குப் பாதுகாப்பான இடம். குளிர்காலம் நெருங்கியதும் வானிலை காரணமாக இரண்டு இடங்களையும் ஒன்றிணைத்தார். சமீபத்தில், வெப்பநிலை -11 டிகிரி செல்ஷியஸாக ஆக குறைந்தது. இது அவர் எதிர்பார்த்ததைவிட அதிகம். தற்போது பனி உருகத் தொடங்கியுள்ளதால், தற்போது இருக்கும் இடத்திலேயே தங்க கலினின் திட்டமிட்டுள்ளார். தனக்கு தற்போது வரை அழைப்பு வரவில்லை என்றாலும், நிலைமை தொடர்ந்து மாறி வருவதால் எதிர்காலத்தில் அழைப்பு வரலாம் என்று கலினின் அஞ்சுகிறார்.
 
அதிகாரபூர்வமாக, கலினின் போன்ற தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு பகுதி அணி திரட்டல் வரைவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரஷ்யாவில் இத்தகைய விதிவிலக்குகள் புறக்கணிக்கப்பட்டதாகப் பல அறிக்கைகள் உள்ளன. கார்கிவ் பகுதியில் யுக்ரேனின் மின்னல் எதிர்த்தாக்குதலில் ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை ரஷ்ய துருப்புகள் இழந்ததையடுத்து, கடந்த செப்டம்பர் 21ஆம் தேதியன்று அணி திரட்டல் அறிவிப்பை ரஷ்ய அதிபர் புதின் வெளியிட்டார். மேற்கு நாடுகளுக்கு எதிராக ரஷ்யாவை பாதுகாக்க இந்த அணி திரட்டல் நடவடிக்கை அவசியம் என புதின் தெரிவித்தார். ஆனால் அந்நாட்டில் இதற்குப் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். லட்சக்கணக்கான மக்கள் நாட்டைவிட்டு வெளியேறியதால் ரஷ்யாவின் எல்லைகளில் குழப்பமான சூழல் நிலவியது. அணி திரட்டல் நடவடிக்கை பல ரஷ்ய குடும்பங்களின் வீட்டு வாசலுக்கு போரைக் கொண்டு வந்தது. திடீரென மகன்கள், தந்தைகள், சகோதரர்கள் குறுகிய அறிவிப்பில் மோசமான ஆயுதங்கள் மற்றும் குறைந்த பயிற்சியுடன் போர்க்களத்தில் நிறுத்தப்பட்டனர்.
 
 
எனினும்கூட, ரஷ்யாவிற்குள் எதிர்ப்பு போராட்டங்கள் அரிதாகவே காணப்படுகின்றன. ஆனால், மக்கள் தங்களுக்கு என்ன நேரும் என்று பயப்படுவதே இதற்குக் காரணம் என கலினின் கூறுகிறார். "எங்களிடம் ஒரு சர்வாதிகார அரசு உள்ளது. அது மிகவும் சக்திவாய்ந்ததாக மாறியுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் நம்பமுடியாத வேகத்தில் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தற்போது போருக்கு எதிராக ஒருவர் பேசினால், அரசு அந்த சட்டங்களைப் பயன்படுத்தும்," என்கிறார் கலினின். கலினின் காட்டு வாழ்க்கை அவரை இணையத்தில் பிரபலமாக்கியுள்ளது. தன்னுடைய தினசரி வழக்கம், முகாமை சுற்றியுள்ள பகுதிகள் தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை டெலிகிராமில் அவர் பதிவிட்டு வரும் நிலையில், 17,000 பேர் அவரைப் பின்தொடர்கின்றனர். தன்னுடைய பழைய வாழ்க்கையை தான் அதிகம் இழக்கவில்லை என்று அவர் கூறுகிறார். ஆனால், தன்னுடைய மனைவியை அதிகம் தவறவிடுவதாகவும், அடிக்கடி அவரைப் பார்க்க விரும்புவதாகவும் கூறுகிறார். எனினும், போர்க்களத்திற்கோ சிறைக்கோ செல்வதைவிட இது சிறந்தது என்கிறார் கலினின். ''நான் மிகவும் மாறிவிட்டேன், நான் தவறவிட்ட விஷயங்கள் மறைந்துவிட்டன. முன்பு எனக்கு முக்கியமானதாகத் தோன்றிய விஷயங்கள் தற்போது முக்கியமானதாக இல்லை. எங்களைவிட மோசமான நிலையில் உள்ளவர்கள் இருக்கிறார்கள்,” என்கிறார் கலினின்.