புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: சனி, 1 அக்டோபர் 2022 (22:28 IST)

ராஜாவின் மர்ம உயிலும் ரூ.20,000 கோடி சொத்தும் - 30 ஆண்டுகளுக்குப் பிறகு 'ட்விஸ்ட்'

20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு உரிமை கோரும் விவகாரம் தொடர்பான மூன்று தசாப்த கால அரச குடும்பப் பகை அண்மையில் இந்திய உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. என்ன நடந்தது இந்த விவகாரத்தில்?
 
தற்போதைய பஞ்சாப்பின் வடபகுதியில் உள்ள ஒரு மாவட்டமான ஃபரித்கோட், சுதந்திரத்திற்கு முன்பு தனி சமஸ்தானமாக இருந்தது. அதன் கடைசி ஆட்சியாளரான ஹரிந்தர் சிங் பிரார் 1989-ஆம் ஆண்டு மறைந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, தனக்கு சொத்தில் எந்தப் பங்கும் கிடைக்கவில்லை என்று கூறி அவரது மூத்த மகள் தந்தை எழுதியதாகக் கூறப்பட்ட உயிலுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார்.
 
இந்த உயில் கற்பனையானது மற்றும் புனையப்பட்டது எனத் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், ஹரிந்தர் சிங்கின் இரு மகள்களுக்கும் பெரும்பகுதி சொத்தை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
 
உயில் சர்ச்சை
 
1948-ஆம் ஆண்டு, ஹரிந்தர் சிங் மற்ற சமஸ்தான ஆட்சியாளர்களைப்போல இந்திய அரசுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார். அந்த ஒப்பந்தப்படி, தன்னுடைய சில சொத்துகளை அவரே வைத்துக்கொள்ள அரசாங்கம் அனுமதியளித்தது.
 
குந்தவையின் பழையாறை நகரம் இப்போது எப்படியிருக்கிறது?
 
ஒரே கிரிக்கெட் வீரர் இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் விளையாடிய தருணம்
தேயிலை தோட்டத்தில் ஒரு பாட்டுக்குயில் - களைப்புக்கு மருந்தாகும் ரெஜினாவின் குரல்
இதில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள், கோட்டைகள், கட்டடங்கள், விமானங்கள், பழங்கால கார்கள் மற்றும் வங்கியில் உள்ள பணம் உள்ளிட்டவை அடங்கும். இந்தச் சொத்துகள் பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் இருந்தன.
 
ஹரிந்தர் சிங் ரயில்வே மற்றும் மருத்துவமனைகள் கட்டுவது உட்பட பல வளர்ச்சிப் பணிகளைச் செய்ததாகக் கூறும் வரலாற்றாசிரியர் ஹர்ஜேஷ்வர் பால் சிங், அவரும் அவரது முன்னோர்களும் ஆங்கிலேயர்களுடன் நல்ல உறவைக் கொண்டிருந்ததாகவும் கூறுகிறார்.
 
ஹரிந்தர் சிங்கிற்கு ஒரு மகன், மூன்று மகள்கள் என மொத்தம் நான்கு குழந்தைகள்.
 
 
பஞ்சாப் முழுவதும் ஏராளமான சொத்துகள் இந்த உயிலில் அடங்கியிருக்கிறது
 
வழக்குத் தொடுத்த மூத்த மகள் அம்ரித் கவுர் மட்டுமே தற்போது உயிருடன் உள்ளார். அவரது மற்ற வாரிசுகளான டிக்கா ஹர்மோஹிந்தர் சிங் மற்றும் மஹீபிந்தர் கவுருக்கு எந்த வாரிசும் இல்லை.
 
1950ஆம் ஆண்டு ஹரிந்தர் சிங் தன்னுடைய முதல் உயிலை எழுதினார். அந்த உயிலில் நான்கு வீடுகள், சில வங்கிக் கணக்கில் உள்ள பணம் உட்பட தன்னுடைய சொத்துகளை மூன்று மகள்களுக்கும் சரிசமமாகப் பிரித்திருந்தார்.
 
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது உயிலை எழுதிய ஹரிந்தர் சிங், தன்னுடைய சொத்துகளை மூத்த மகள் அம்ரித் கவுர் நீங்கலாக மற்ற இரண்டு மகள்களுக்கும் பிரித்துக்கொடுக்கத் தீர்மானித்தார்.
 
தந்தையின் விருப்பத்தை மீறி அம்ரித் கவுர் திருமணம் செய்துகொண்டதே அதற்கு காரணம் என்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
 
பின்னர், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு உயிலை லண்டனில் எழுதிய ஹரிந்தர் சிங், அதில் அம்ரித் கவுருக்கும் சொத்தில் பங்கு கொடுத்திருந்தார். ஆனால், அவர் 25 வயதை எட்ட வேண்டும் அல்லது தன்னுடைய கணவரிடம் இருந்து சட்டப்பூர்வ விவாகரத்து பெற வேண்டும் என்ற நிபந்தனையை ஹரிந்தர் சிங் குறிப்பிட்டிருந்தார்.
 
இதற்கிடையே, ஹரிந்தர் சிங் இறப்பதற்கு முன்னதாக தந்தையுடன் உறவைப் புதுப்பித்துக்கொண்டார் அம்ரித் கவுர். தந்தை இறந்த பிறகு அவர் எழுதியதாகக் கூறப்படும் மூன்றாவது உயில் வாசிக்கப்பட்டபோது அம்ரித் கவுர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
 
அந்த உயில், அவருடைய சகோதரர் டிக்கா ஹர்மோஹிந்தர் சிங் சாலை விபத்தில் இறந்த சில மாதங்களுக்குப் பிறகு எழுதப்பட்டிருந்தது.
 
அந்த ஆவணத்தில், அனைத்து சொத்துகளும் அவரது இரண்டு சகோதரிகள் மற்றும் ஹரிந்தர் சிங்கின் தாயின் உறவினர் உட்பட அறங்காவலர்களைக் கொண்ட ஒரு பராமரிப்பாளர் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
 
1991ஆம் ஆண்டு இந்த உயிலை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த அம்ரித் கவுர், சொத்தில் மூன்றில் ஒரு பங்கைக் கோரினார். அவரது சகோதரிகள் தீபிந்தர் கவுர், மஹீபிந்தர் கவுர் மற்றும் பிற அறங்காவலர்கள் வழக்கின் எதிர்தரப்பினராக சேர்க்கப்பட்டனர்.
 
அதேபோல ஹரிந்தர் சிங்கின் இளைய சகோதரரான கன்வர் மஞ்சித் இந்தர் சிங்கும், உயிரோடு இருக்கும் நெருங்கிய உறவினர் என்ற முறையில் சொத்தில் பங்கு கோரி வழக்குத் தொடர்ந்தார். ஹரிந்தர் சிங் உயிரிழந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே தங்களுடைய தாயார் இறந்ததாகக் கூறி இந்த உரிமையை அவர் கோரினார்.
 
2013ஆம் ஆண்டு இந்த இரு வழக்கிலும் தீர்ப்பளித்த விசாரணை நீதிமன்றம், மூன்றாவது உயில் போலியானது எனக் கூறி அம்ரித் கவுருக்கும் அவருடைய சகோதரரி தீபிந்தர் கவுருக்கும் சொத்தில் சரிசம பங்கு உண்டு எனத் தீர்ப்பளித்தது. இதற்கிடையே, வாரிசு இல்லாத மற்றொரு சகோதரியான மகிபிந்தர் கவுர் கடந்த 2001ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
 
பிபிசியிடம் பேசிய அம்ரித் கவுரின் தடயவியல் நிபுணரான ஜஸ்ஸி ஆனந்த், மூன்றாவது உயிலை முன்னாள் மன்னர் உருவாக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த தாங்கள் முழுமையாக ஆய்வு செய்ததாகத் தெரிவித்தார்.
 
"ஹரிந்தர் படித்த மனிதர் மற்றும் அழகான கையெழுத்து உடையவர். ஆனால் அது உயிலில் பிரதிபலிக்கவில்லை. உயிலில் எழுத்துப்பிழைகள் இருந்தன. மேலும் அவருடைய கையெழுத்துகளும் போலியானவை" எனக் கூறும் ஜஸ்ஸி ஆனந்த், இந்த உயிலை உருவாக்க வேறுவேறு தட்டச்சுப் பொறிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறுகிறார்.
 
சொத்தில் பங்கு கோரி கன்வர் மஞ்சித் இந்தர் சிங் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
 
கன்வர் மஞ்சித் இந்தர் சிங்கின் மகன் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்களான தீபிந்தர் கவுர் மற்றும் பாரத் இந்தர் சிங் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர்.
 
கடந்த 2020ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்த பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றம், மூன்றாவது உயில் போலியானது எனத் தெரிவித்தது. அதோடு, சொத்தில் 25 சதவிகிதம் பங்கு கோரிய கன்வர் மஞ்சித் இந்தர் சிங்கின் மனுவையும் நிராகரித்தது.
 
 
உலகின் மிக ரகசியமான அமெரிக்க உளவுத் துறை அருங்காட்சியகத்தில் என்ன உள்ளது?
இந்தத் தீர்ப்பை தற்போது உறுதிசெய்துள்ள உச்சநீதிமன்றம், சொத்துகளை நிர்வகித்துவரும் அறக்கட்டளையை உடனடியாகக் கலைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
 
தீபிந்தர் கவுர் கடந்த 2018ஆம் ஆண்டு உயிரிழந்துவிட்டதால் இனி ஹரிந்தர் சிங்கின் சொத்துகள் அம்ரித் கவுர் மற்றும் தீபிந்தர் கவுரின் குடும்பத்தினரால் பிரித்துக்கொள்ளப்படும். புனையப்பட்ட உயில் குறித்து காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.
 
இனி என்ன நடக்கும்?
 
நீதிமன்ற உத்தரவுப்படி அரச குடும்பத்தினர் தங்களது சொத்துகளைப் பிரித்துக்கொள்ள வேண்டும்.
 
ஒன்று, இரு தரப்பினரும் அமர்ந்து பேசி யாருக்கு எது வேண்டும் எனப் பிரித்துக்கொள்ள வேண்டும் அல்லது நீதிமன்றம் மூலமாக அதைச் செய்ய வேண்டும்.
 
ஆனால், இதற்கு நேரம் எடுக்கும் என்கிறார் கன்வர் மஞ்சித் இந்தர் சிங்கின் பேரனான அமரீந்தர் சிங்.
 
தற்போது குடும்பச் சண்டையாவது தீர்ந்தது எனக் கூறும் அவர், தங்களுக்கு நிறைய சொத்துகள் இருப்பதால் சட்டப்போராட்டம் தொடரும் என்கிறார்.


Edited by Sinoj