ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 27 மே 2021 (00:49 IST)

அல்கே புரதங்கள் உதவியால் கண் பார்வை ஓரளவுக்கு திரும்ப வாய்ப்பு

அல்கே என்கிற உயிரினத்தில் இருக்கும் ஒளியை உணரும் புரதங்களை வைத்து ஓரளவுக்கு பார்வை மீட்டு எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஒளி உணர்வு புரதங்கள் அல்கே எனும் உயிரினத்தில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
 
கண் பார்வையற்றவருக்கு ஆப்டோஜெனடிக்ஸ் என்கிற ஒருவகையான சிகிச்சை அளிக்கபட்டது. அந்த சிகிச்சையில், அவர் கண்களுக்குப் பின்னால் இருக்கும் செல்களை, ஒளியை உணரும் இந்த அல்கே புரதங்களை வைத்து இயக்கச் செய்கிறார்கள்.
 
பாதசாரிகள் சாலையை கடப்பதற்காக தீட்டப்பட்ட சாயத்தை பார்க்க முடிந்ததை அவரால் முடிந்தபோது, இந்த சிகிச்சை முறை வேலை செய்கிறது என்பதை அறிய முடிந்தது.
 
"இப்போது அவரால் ஒரு மேஜை மீது வைக்கப்பட்டிருக்கும் பொருளை எடுத்து எண்ண முடியும்," என 'நேச்சர் மெடிசின்' என்கிற மருத்துவ சஞ்சிகையில் கூறப்பட்டிருக்கிறது.
 
இந்த சிகிச்சையைப் பெற்று வருபவர், பிரான்ஸில் இருக்கும் பிரிட்டானி நகரில் வசித்து வருகிறார். அவருக்கு பாரிஸ் நகரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் குறித்த மற்ற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
 
40 ஆண்டுகளுக்கு முன், அவர் Retinitis Pigmentosa என்கிற நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோயால் பாதிக்கபட்டவர்களின் கண்களின் ரெடீனாவில் இருக்கும் ஒளியை உணரும் செல்கள் இறந்து விடும்.
 
உலகம் முழுக்க கிட்டத்தட்ட 20 லட்சம் பேரை இந்த நோய் பாதித்திருக்கிறது. இருப்பினும் இந்த நோயால் முழுமையாக பார்வை இழப்பது என்பது அரிது தான் என்றாலும், இவருக்கு கடந்த இரு தசாப்தங்களாக முழுமையாக பார்வை இல்லை.
 
அவருக்கு ஆப்டோஜெனடிக்ஸ் என்கிற புதிய முறையில் சிகிச்சையளிக்கப்பட்டது.
 
மூளையில் இருக்கும் செல்களின் இயக்கத்தை கச்சிதமாக கட்டுப்படுத்த, இந்த சிகிச்சை முறையில் ஒளி பயன்படுத்தப்பட்டு, அவரது ஒரு கண் ஒளியை உணரும் திறனை விஞ்ஞானிகள் மீட்டு எடுத்திருக்கிறார்கள்.
 
அல்கே என்கிற நுண்ணுயிரி உற்பத்தி செய்யும் சேனல்ரோடோஃப்சின்ஸ் (Channelrhodopsins) புரதங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நுட்பம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த சேனல்ரோடோஃப்சின்ஸ் என்கிற புரதம் மீது ஒளி படும் போது, தன் குணநலன்களை மாற்றிக் கொள்ளும். அல்கே நுண்ணுயிரிகள் ஒளியை நோக்கி நகர இந்த புரதத்தைப் பயன்படுத்துகிறது.
 
இந்த சிகிச்சையின் முதல் படி ஜீன் தெரபி தான். ரோடோஃப்சின்ஸ்களை உருவாக்குவதற்கான மரபணுக் கட்டளைகள், அல்கே நுண்ணுயிரில் இருந்து எடுக்கப்பட்டு, அவர் ரெடினாவின் ஆழமான படலத்தில் இருக்கும் செல்களில் செலுத்தப்படுகிறது.
 
இப்போது அதன் மீது ஒளி படும் போது, அச்செல்கள், மூளைக்கு ஒரு சமிக்ஞையை அனுப்பும்.
 
இந்தியாவில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் குறித்து உங்களுக்கு என்ன தெரியும்?
 
கொரோனா தடுப்பூசி: ஆண்மை குறைவு, மாதவிடாய், மதுப்பழக்கம் - புரளிகளும் உண்மைகளும் இந்த செல்கள் ஆம்பர் நிறத்துக்கு (மஞ்சள் அல்லது வெளிர் இளஞ்சிவப்பு) மட்டுமே எதிர்வினையாற்றும். எனவே சிகிச்சையில் இருப்பவர்கள், முன் பக்கம் வீடியோ கேமராவும், பின் பக்கம் ஒரு திரையும் கொண்ட ஒரு ஜோடி கண்ணாடியை அணிந்து கொள்வார். வெளி உலகில் என்ன நடக்கிறது என்பதை படம் பிடித்து, சரியான தொலைவில் கண்களுக்குப் பின்னால் திரையிட்டுக் காட்டும்.
 
கண்ணில் போதுமான அளவுக்கு ரோடோஃப்சின்ஸ்கள் உருவாகவும், மூளை இந்த புதிய செயலைக் கற்று, மீண்டும் பார்க்கவும் பல மாதங்கள் ஆனது.
 
இந்த சிகிச்சை பெற்று வந்தவர் வெளியே நடக்கச் சென்ற போது, திடீரென பாதசாரிகள் சாலையைக் கடக்க தீட்டப்பட்டிருக்கும் கோடுகளை அவரால் பார்க்க முடிந்தபோதுதான், இந்த சிகிச்சை வேலை பார்க்கிறது என முதன்முதலில் தெரிய வந்தது.
 
"செல்கள் செலுத்தப்பட்ட காலத்துக்கும், அவர் சிலவற்றை பார்க்கத் தொடங்கியதற்கும் இடையில் நீண்ட காலம் எடுத்துக் கொண்டதால், சிகிச்சையில் இருந்தவர் கொஞ்சம் விரக்தி அடைந்தார்" என பாரிஸ் நகரத்தில் இருக்கும் இன்ஸ்டிட்யூட் ஆஃப் விஷனின் மருத்துவர் ஜோஸ் அலைன் சாஹெல் கூறினார்.
 
"அவர் தொடர்ந்து விஷயங்களைக் குறிப்பிடத் தொடங்கிய போது, அவரால் சாலையில் இருந்த வெள்ளை நிற கோடுகளை காண முடிந்தது, அவர் மிகவும் மகிழ்ந்திருப்பார் என நீங்கள் கருதலாம். நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கிறோம்" என கூறினார்.
 
சிகிச்சையில் இருப்பவருக்கு தெளிவாக கண் பார்வை தெரியாது. இருப்பினும் பார்வையே இல்லை என்பதற்கும், குறைந்த அளவுக்காவது பார்வை இருக்கிறது என்பதற்கும் இடையிலான வித்தியாசம் வாழ்கையையே மாற்றக் கூடியதாக இருக்கலாம்.
 
"ஓரளவுக்காவது பார்வையை மீட்டெடுக்க, ஆப்டோஜெனடிக் சிகிச்சையைப் பயன்படுத்தலாம் என இந்த கண்டுபிடிப்புகள் ஆதாரங்களாக இருக்கின்றன" என பேசல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பொடொண்ட் ரோஸ்கா கூறியுள்ளார்.
 
பார்வையை மீட்டெடுக்க மற்ற பல்வேறு வழிமுறைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இது ஒரு தரமான ஆராய்ச்சி, ஆனால் ஒரே ஒரு நோயாளி உடன் மட்டுமே நடத்தப்பட்டு இருக்கிறது என, பிரிட்டனின் யூ.சி.எல்லில் விழித்திறை ஆராய்ச்சி துறையின் பேராசிரியர் ஜேம்ஸ் பெய்ன்பிரிட்ஜ் கூறியுள்ளார்.
 
"கண் பார்வை மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு இந்த புதிய தொழில்நுட்பம் உதவிகரமாக இருக்கலாம்" என அவர் தெரிவித்துள்ளார்.