முகமது அலி உண்மையானவர், பிரகாசமான மனிதர்: அதிபர் ஒபாமா நெகிழ்ச்சி
குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் வாழ்க்கை குறித்த உணர்ச்சிமிக்க நினைவஞ்சலி கூட்டம் கென்டக்கி மாகாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான லூயிஸ்வில்லேயில் நடைபெற்றது.
பல்வேறு மதங்கள் மற்றும் குழுக்களை சேர்ந்த பேச்சாளர்கள், முகமது அலியின் விளையாட்டு குறித்தும், சமூகத்தில் அவர் செய்த சாதனைகள் குறித்தும் கூட்டத்தில் திரண்டிருந்த 14 ஆயிரம் பேர் முன்னிலையில் உரையாற்றினார்கள்.
மனித உரிமைகள் மற்றும் அமைதிக்காக அவர் செய்த அர்ப்பணிப்புகள் குறித்தும், யாருக்கும் அவர் அடிபணிந்து இணங்க மறுப்பது குறித்தும், ஏந்நேரத்திலும் தனது கொள்கைகளின்படி உறுதியாக இருந்ததாகவும் பேச்சாளர்கள் முகமது அலியை புகழ்ந்து பேசினார்கள்.
அவர் எதிர்கொண்ட சோதனைகளை மனக்கசப்பு இன்றி சந்தித்தார் என முகமது அலியின் மனைவி கூறினார். மேலும், முகமது அலியின் இத்தகைய குணத்தை மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா முகமது அலியை, பெரியவர், பிரகாசமான மனிதர், உண்மையானவர் என்றார். மேலும், இந்த சகாப்தத்தில், அவர் வாழ்ந்த காலத்தில் எல்லோரையும் விட யாரும் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க முடியாது என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், மோசமான நோயை அவர் எதிர்கொண்டு போராடிய காலத்தில் அவர் காட்டிய நகைச்சுவை உணர்வும், கண்ணியத்தையும் பில் கிளிண்டன் நினைவு கூர்ந்தார்.