செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 12 நவம்பர் 2020 (23:50 IST)

இந்தியாவில் காதல்: மதங்களை கடந்த ஜோடிகள் சங்கமிக்கும் இன்ஸ்டாகிராம் பக்கம்

கிறிஸ்தவரான மார்ட்டினா ராய், முஸ்லிமான ஜாயின் அன்வரை கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். தன் குடும்பத்தின் சம்மதத்துக்காக அவர் ஏழு ஆண்டுகள் காத்திருந்தார்.பட மூலாதாரம்,INDIA LOVE PROJECT
 
கிறிஸ்தவரான மார்ட்டினா ராய், முஸ்லிமான ஜாயின் அன்வரை கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். தன் குடும்பத்தின் சம்மதத்துக்காக அவர் ஏழு ஆண்டுகள் காத்திருந்தார்.
 
இந்தியாவில் காதல் திருமணம், சாதி, மதங்களைக் கடந்து திருமணம் செய்து கொள்வது நீண்டகாலமாகவே கண்டனத்துக்குரிய விஷயமாக இருந்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் புதிய ஒரு முயற்சியின் மூலம், ``(மத) நம்பிக்கை, சாதி, இனம், பாலின கட்டுப்பாடுகளை'' உடைத்து, வாழ்வில் இணைந்த ஜோடிகளைக் கொண்டாடுகின்றனர். பிபிசி செய்தியாளர் கீதா பாண்டே இதுபற்றி கூறுகிறார்.
 
மத நம்பிக்கைகளைக் கடந்து, சாதிகளைக் கடந்து திருமணம் செய்து கொள்வது என்பது இந்தியாவின் கட்டுக்கோப்பான குடும்பங்களில் நீண்டகாலமாகவே கண்டனத்துக்குரிய விஷயமாக இருந்து வருகிறது. ஆனால் சமீப காலமாக, அதுபோல ஜோடி சேர்ந்தவர்கள் பற்றிப் பேசுவது மேலும் பிரச்சினையை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்துப் பெண், முஸ்லிம் ஆணை திருமணம் செய்து கொள்வது குறித்து அதிகமான வெறுப்பு கருத்துகள் கூறப்படுகின்றன.
 
வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டு வாழ்வதைக் குறிப்பிட்டு பிரபல நகை தயாரிப்பு நிறுவனமான தனிஷ்க் நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்ட விளம்பரத்திற்கு, வலதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இந்தப் பிரச்சினை எவ்வளவு தீவிரமாகக் கருதப்படுகிறது என்பது வெளியில் தெரிய வந்தது. இந்து மருமகளுக்கு, முஸ்லிம் மாமியார் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தும் காட்சி அந்த விளம்பரத்தில் இடம் பெற்றிருந்தது. டாட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான தனிஷ்க் நிறுவனம், இந்தியாவில் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. ஏகத்துவம் என்ற பெயரில் புதிய நகைகளின் தொகுப்புகளை அந்த நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த வார்த்தைக்கு ``ஒருமைப்பாடு'' என்பது அர்த்தம். ``வேற்றுமையில் ஒற்றுமை'' என்ற சிந்தனையைக் கொண்டாடும் வகையில் இந்த விளம்பரம் அமைந்திருந்தது. ஆனால், அதற்கு நேர் எதிரான விளைவை அது ஏற்படுத்திவிட்டது. இந்திய சமூகத்தில் உள்ள விரிசல்களை அதிகரிப்பதாக அமைந்துவிட்டது.
 
'காதல்‘ - பிபிசி தமிழ் நேயர்களின் 'காதல்' புகைப்படங்கள்!
சாதி, சடங்குகளை தகர்த்தெறிந்த திருநங்கை - திருநம்பி
இந்த விளம்பரம் ``லவ் ஜிகாத்தை'' ஊக்குவிப்பதாக உள்ளது என்று அடிப்படைவாத இந்து குழுக்கள் கூறின. இந்துப் பெண்களை இஸ்லாமிய மதத்துக்கு மாற்ற வேண்டும் என்பதற்காகவே, முஸ்லிம் இளைஞர்கள் இந்துப் பெண்களை காதலிப்பது போல நடித்து, மனதை மயக்கி திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பது லவ் ஜிகாத் என்ற வார்த்தைக்கு அர்த்தமாகச் சொல்லப்படுகிறது.
 
 
ரூபாவும், ரஜ்ஜி அப்டியும் திருமணம் செய்து கொண்டு 30 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்கிறார்கள்.
 
தனிஷ்க் நகைகளை வாங்க வேண்டாம் என்று வலியுறுத்தி சமூக ஊடகங்களில் ட்ரால் செய்யப்பட்டது. ட்விட்டர் ட்ரெண்ட்களில் அது முன்வரிசை பட்டியலில் இடம் பிடித்தது. தங்கள் அலுவலர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, விளம்பரத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதாக தனிஷ்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.
 
விளம்பரம் குறித்த சர்ச்சை ஏற்பட்டு இரண்டு வாரங்கள் கழித்து, பத்திரிகையாளர் தம்பதியான சமர் ஹலம்கர், பிரியா ரமணி ஆகியோரும் அவர்களின் பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் நண்பர் நிலோபர் வெங்கட்ராமனும் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் இந்தியா லவ் ப்ராஜெக்ட் என்ற அக்கவுண்ட்டை தொடங்கியுள்ளனர். ``பிரிவினைவாத, வெறுப்புணர்வு மிகுந்த இந்த காலக்கட்டத்தில், மத நம்பிக்கைகளைக் கடந்த, சாதிகள் பாராத காதல் மற்றும் ஒன்று சேர்ந்திருத்தலை' கொண்டாடுவதாக இது இருக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
 
``இதுபற்றி ஓராண்டுக்கும் மேலாகவே சிந்தித்து வந்தோம்'' என்று திரு. ஹலம்கர் பிபிசியிடம் தெரிவித்தார். தனிஷ்க் விளம்பரம் குறித்த சர்ச்சை எழுந்ததால், உடனடியாக இதைச் செய்ய வேண்டியதாயிற்று என்று அவர் குறிப்பிட்டார். ``காதல் மற்றும் நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட திருமணம் பற்றிய பொய்யான புனைவுகள், வருத்தம் தருபவையாக, மிகுந்த கண்டனத்துக்கு உரியவையாக உள்ளதாகக் கருதுகிறேன்'' என்று அவர் என்னிடம் கூறினார்.
 
``இந்தத் திருமணங்கள், ஒருவித சூழ்ச்சியாக இருக்கின்றன. காதலை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள் என்றும் கூட சொல்கிறார்கள். ஆனால் யாரும் அப்படி நினைப்பதாக எனக்குத் தெரியவில்லை. திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் காதலிப்பதைத் தவிர வேறு நோக்கம் அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை'' என்கிறார் அவர். இந்தியா லவ் ப்ராஜெக்ட் மூலமாக, ``மக்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு களத்தை ஏற்படுத்தித் தருகிறோம்'' என்று அவர் கூறினார்.
 
தன்னுடைய பார்சி தாயார் மற்றும் இந்து தந்தையின் அனுபவத்தை அடுத்து நிலோபர் வெங்கட்ராமன் இந்த திட்டத்தைத் தொடங்கினார்.
 
தனது பார்சி தாயார் பக்டவர் மாஸ்டர், இந்து தந்தை எஸ். வெங்கட்ராமன் ஆகியோரின் அனுபவத்தை முதலாவது கட்டுரையாகப் பதிவிட்டு, இந்தத் திட்டத்தை திருமதி வெங்கட்ராமன் தொடங்கிய அக்டோபர் 28 ஆம் தேதியில் இருந்து, தினமும் ஒரு கட்டுரை பதிவேற்றம் செய்யப்படுகிறது.
 
இதர்கு நல்ல வரவேற்பு உள்ளது என்று திரு. ஹலம்கர் தெரிவித்தார். ``சமாளிக்க முடியாமல் நாங்கள் திணறுகிறோம். `என்னைப் பற்றி அல்லது என் பெற்றோரைப் பற்றி அல்லது தாத்தா பாட்டியைப் பற்றி நான் கூற விரும்புகிறேன்' என்று தினமும் நிறைய பேர் தொடர்பு கொள்கிறார்கள். நம்பிக்கைகளைக் கடந்த, சாதிகளைக் கடந்த திருமணங்கள் புதியவை அல்ல, நீண்டகாலமாகவே அவை நடந்து வருகின்றன என்பதைக் காட்டுவதாக இது உள்ளது'' என்று அவர் தெரிவித்தார்.
 
கலைக்காக அவமானங்களை எதிர்கொண்ட திருநங்கையின் கதை
திருநங்கையை திருமணம் செய்த இளைஞனின் கதை: #HisChoice
ஆனால், ``முன் எப்போதையும்விட, அதுகுறித்து இப்போது பேச வேண்டியது முக்கியமானதாக உள்ளது'' என்று அவர் குறிப்பிடுகிறார்.
 
``வெறுப்பை விதைக்கும் காலக்கட்டத்தில், காதல் அனுபவங்கள் பற்றி, எவ்வளவு பரவலாக அது இருந்து வருகிறது என்பது பற்றி, திடீரென தோன்றியதல்ல என்பது பற்றி சொல்ல வேண்டியது முக்கியமாகிறது'' என்கிறார் அவர்.
 
இந்தியாவில் 90 சதவீதத்துக்கும் அதிகமான திருமணங்கள், பெற்றோரால் ஏற்பாடு செய்யப்படுவதாக இருக்கின்றன. திருமணத்தில் மதம், சாதி கடந்து இணையரை பெற்றோர்கள் தேர்வு செய்வது அபூர்வமாகவே இருக்கிறது. சுமார் 5 சதவீதம் திருமணங்கள் மட்டுமே சாதிகளைக் கடந்தவையாக இருக்கின்றன என்று இந்திய மனிதவள கணக்கெடுப்பு அறிக்கை தெரிவிக்கிறது. மதங்களைக் கடந்த திருமணங்கள் இன்னும் அரிதாகவே நடக்கின்றன. சுமார் 2.2 சதவீதம் அளவுக்கு தான் மதங்களைக் கடந்த திருமணங்கள் நடப்பதாக ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
 
இந்த கட்டுப்பாடுகளைக் கடந்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்பவர்கள், பல சமயங்களில் வன்முறைகளை சந்திக்க வேண்டியுள்ளது, சில நேரம் கொல்லப்படுவதும் உண்டு.
 
 
தன்விர் எய்ஜாஸ், வினிதா ஷர்மா ஆகியோரிடம், அவர்களின் குழந்தை என்ன மதத்தைப் பின்பற்றும் என கேட்கிறார்கள்.
 
கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவில் இந்து தேசியவாத அரசு ஆட்சி செய்து வரும் நிலையில், அடிப்படைவாத கருத்துகளுக்கு ஆதரவு பெருகி வருகிறது, மத ரீதியில் ஒருமுகப்படுத்துவது அதிகரித்து வருகிறது.
 
மத நம்பிக்கைகளைக் கடந்த திருமணங்கள், குறிப்பாக இந்து பெண், முஸ்லிம் ஆணை மணக்கும் திருமணங்கள், பெரும் பாவகரமான செயலாகக் கருதப்படுகிறது.
 
``கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் இதுபற்றிக் குறிப்பிட்ட அரசு, `லவ் ஜிகாத்' என்பது சட்டத்தில் வரையறை செய்யப்படவில்லை என்றும், எந்தவொரு அரசு ஏஜென்சியும் இந்த நிகழ்வு பற்றி தகவல்கள் பதிவு செய்யவில்லை என்றும் கூறியது. ஆனால் அந்த எண்ணம் இருப்பதாகக் குறிப்பிட்டது. கடந்த சில நாட்களில், பாஜக ஆளும் குறைந்தபட்சம் 4 மாநிலங்கள், இந்த `சமூக தீமைக்கு' எதிராக சட்டங்கள் இயற்றப் போவதாக அறிவித்துள்ளன'' என்று திரு. ஹலம்கர் தெரிவித்தார்.
 
தனிப்பட்டவர்களின் அனுபவங்களின் தொகுப்புகளை வெளியிடுவதன் மூலம் இந்த ``வெறுப்புணர்வு பிரசாரத்தை'' எதிர்கொள்கிறது இந்தியா லவ் ப்ராஜெக்ட். இதில் பதிவாகும் கருத்துகள் ``தெளிவில்லாமல்'' இருப்பதாக, இதைப் படிப்பவர்கள் கூறுகின்றனர்.
 
150 வார்த்தைகளில் எழுதப்படும் சிறிய அனுபவ கதைகள், அன்பு மற்றும் நகைச்சுவை கலந்தவையாக உள்ளன. மனிதர்களால் உருவாக்கப்படும் எல்லைகள் பற்றி காதல் கவலைப்படுவதில்லை என்பதில் நம்பிக்கை கொண்ட ஜோடிகளின் கதைகளாக அவை உள்ளன.
 
மரியா மஞ்சில், சந்தீப் ஜெயின் ஆகியோர் 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
 
ரஜ்ஜி அப்டி என்ற முஸ்லிம் இளைஞரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறியபோது தன் தாயார் முதலில் என்ன கூறினார் என்பது பற்றி இந்து பிராமணரான ரூபா எழுதியுள்ளார்.
 
``அவர் உன்னை மூன்று முறை `தலாக்' சொல்லி உதைத்து வெளியே அனுப்புவார்'' என்று என்னை தாயார் எச்சரிப்பார். முஸ்லிம் மதத்தில், உடனடியாக விவாக ரத்து செய்யும் நடைமுறை பற்றி எனது தாயார் கவலைப்பட்டார். இப்போது இந்தியாவில் அதற்கு தடை விதிக்கப்பட்டு விட்டது.
 
``இருந்தபோதிலும் என் பெற்றோர் ரஜ்ஜியை சந்தித்து, அவர் நல்ல மனிதர் என்பதை அறிந்த பிறகு, அவர்களுடைய தவறான எண்ணங்கள் மறைந்துவிட்டன'' என்று ரூபா எவுதியுள்ளார். அவர்கள் ``ஓரளவுக்கு திறந்த மனதினராக'' மாறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
ரூபாவும், ரஜ்ஜியும் திருமணம் செய்து கொண்டு 30 ஆண்டுகள் ஆகிறது. அவர்களுடைய 2 பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டனர். முஸ்லிம்களின் ஈகை பெருநாள், இந்துக்களின் தீபாவளி ஆகியவற்றை தங்கள் வீட்டில் அவர்கள் கொண்டாடுகிறார்கள்.
 
 
சல்மாவுடன் தனக்கு நடந்த திருமணம் பற்றி குறிப்பிடும் பத்திரிகையாளர் டி.எம். வீரராகவ், தங்கள் வீட்டில் மதம் என்பது முக்கியமானதல்ல என்று அவர் கூறுகிறார்.
 
``நான் சைவம் சாப்பிடுபவன். என் மனைவிக்கு மட்டன் பிடிக்கும். எங்கள் மகன் அஜ்னேசுக்கு இரண்டிலும் சிறந்த வகைகளைப் பிடிக்கும். என்ன சமைக்கிறோம் என்பதைப் பொருத்து அஜ்னேஷ் இந்துவாக அல்லது முஸ்லிமாக இருப்பான்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
வினிதா ஷர்மா என்ற இந்துப் பெண்ணை மணந்த தன்விர் எய்ஜாஸ் சமீபத்தில் எழுதியுள்ளார். தங்கள் மகள் குஹுவுக்கு பெயர் வைத்த கதை பற்றி அவர் எழுதியுள்ளார். அது இந்து பெயரா அல்லது முஸ்லிம் பெயரா என கேட்கிறார்கள். மகள் வளரும் போது எந்த மதத்தைப் பின்பற்றுவார் என்று கேட்கிறார்கள்.
 
``இந்து முஸ்லிம் திருமணம் என்பது மதச்சார்பின்மையின் முன்மாதிரியாக இருக்கும் என்பது, மக்களின் எதிர்பார்ப்புகளை மறைப்பதாக உள்ளது. அவர்களால் (எதிர்ப்பாளர்களால்) பேச முடியவில்லை. எங்களுடைய காதலை, காதல் என்று சொல்வார்களே தவிர, காதல் ஜிகாத் என சொல்ல மாட்டார்கள் என்பதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள்'' என்று அவர் எழுதியுள்ளார்.
 
தங்கள் வீட்டில் ``தயிர் சாதமா, மட்டன் பிரியாணியா'' என்பது போல மதம் முக்கியமானதல்ல என்று டி.எம். வீரராகவ் மற்றும் சல்மா கூறுகின்றனர்.
 
மற்ற மதம் மற்றும் சாதிகள் கடந்த திருமணங்களின் அனுபவங்களும் இந்த இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டில் இடம் பெற்றுள்ளன.
 
அசைவ கத்தோலிக்கரான மரியா மஞ்சில், கேரளாவைச் சேர்ந்தவர். வட இந்தியாவைச் சேர்ந்த சைவ மரபிலான ஜெயின் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட பிறகு கடந்த 22 ஆண்டுகளில் தாங்கள் சந்தித்த ``பல சவால்கள்'' பற்றி அவர் எழுதியுள்ளார். அவரைத் திருமணம் செய்தது நல்ல விஷயம் என்ற திருப்தி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
 
``காதலை எப்படி ஒதுக்கிவிட முடியும்'' என்று அவர் எழுதியுள்ளார். ``இதுபோன்ற நல்ல மனம் கொண்ட, மென்மையான, அறிவுத்திறன் மிக்க, என் மீது ஆழ்ந்த அன்பு கொண்டவராக அவரைப் பார்த்தேன். அவர் வேறு கடவுளை வணங்குகிறார் அல்லது வேறு மொழி பேசுகிறார் என்பதற்காக அவரை நான் விட்டுவிட முடியவில்லை'' என்று அவர் எழுதியிருக்கிறார்.
 
இந்தியா பற்றியும், உலகைப் பற்றியும் நீங்கள் நல்லபடியாக உணர்வதற்கு இந்தக் கதைகள் உதவும் என்று திரு. ஹலம்கர் கூறினார். ``இந்தியாவில் உள்ள எண்ணற்ற யதார்த்தங்களின் அழகிய கதைகளாக இவை உள்ளன. மக்கள் காதலின் பல்வேறு பாதைகளைப் பின்பற்றுகிறார்கள். அதுதான் இந்தியா என்பதை நினைவூட்டுபவையாக அவை இருக்கின்றன'' என்றும் அவர் தெரிவித்தார்.