திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : சனி, 23 ஏப்ரல் 2022 (10:39 IST)

"என்னை போல் உடைந்துள்ள தடாகம் பள்ளத்தாக்கை மீட்க முயல்கிறேன்" 18 வயது சூழலியலாளர் சாந்தலா!

கோவை மாவட்டம் தடாகம் பள்ளத்தாக்கில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக 18 வயதான சாந்தலா தேவி ஆய்வு செய்து தயாரித்திருக்கும் அறிக்கை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் வழக்கில் முக்கியமான ஆவணமாக உள்ளது.
 
கோவை மாவட்டம் தடாகம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தலா தேவி. இவரின் தந்தை மருத்துவர் ரமேஷ். கடந்த 2019-ம் ஆண்டு நிகழ்ந்த இரு சக்கர சாலை விபத்து ஒன்றில் சாந்தலாவின் தாய் ஷோபனா சம்பவ இடத்திலே உயிரிழக்க சாந்தலா கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்று மீண்டு வந்தார்.
 
"12-ம் வகுப்பு முடிந்த பிறகு உடனடியாக என்னால் கல்லூரியில் சேர முடியவில்லை. அதனால் ஒரு வருடம் இடைவெளி எடுத்தேன். உடலளவிலும் மனதளவிலும் நான் உடைந்திருந்த ஒரு நேரத்தில் என்னைப் போலவே தடாகம் பள்ளத்தாக்கும் உடைந்திருப்பதை காணும்போது அது எனக்குள் பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போது தான் தடாகம் பள்ளத்தாக்கை பற்றி ஆய்வு செய்ய ஆரம்பித்தேன்," என்கிறார் சாந்தலா.
 
தடாகம் பள்ளத்தாக்கு சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி. ஆனால் இங்கு பல ஆண்டுகளாக இயங்கி வந்த மணல் குவாரிகள் மற்றும் செங்கல் சூளைகளால் ஆற்றின் தொடரமைப்பு கடுமையாக பாதிப்படைந்ததாக சொல்கிறார் சாந்தலா.
 
சாந்தலா நான்காம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலிருந்து தான் பள்ளி படிப்பை தொடர்ந்தார். அப்போதுதான் தனக்கு புத்தகங்களுக்கு அப்பால் விலங்குகள், பறவைகள், சூழலியல் மீது ஆர்வம் வந்ததாக கூறுகிறார்.

 
"சிறு வயதிலிருந்தே என்னுடைய அப்பாவும் அம்மாவும் என்னை சூழலியல் மீது ஈடுபாடு கொள்ள வைத்தார்கள். மழை வரும் போதெல்லாம் எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள சங்கனூர் பள்ளத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து வரும். அப்போதெல்லாம் அதை காண செல்வோம். அதே போலதான் 2021-ம் ஆண்டு மிக கடுமையான மழை பெய்தது. ஆனால் சங்கனூர் பள்ளத்தில் தண்ணீர் வரவேயில்லை.
 
சிறு வயதிலிருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடும் சங்கனூர் ஓடையை பார்த்த எனக்கு இது ஆச்சரியமாக இருந்தது. அப்போது தான் இதைப்பற்றி ஆய்வு செய்ய ஆரம்பித்தேன்.
 
மலைகளிலிருந்து வரும் பல சிற்றோடைகள் இணைந்து தான் ஒரு பெரிய ஆறு உருவாகிறது. அவ்வாறு சிறு நீரோடைகள் இணைந்து பல அடுக்குகளாக வகைப்படுத்தப்படுகின்றன. சங்கனூர் பள்ளம் என்பது ஐந்தாம் அடுக்கு நீரோடை. சங்கனூர் நீரோடை நொய்யல் ஆற்றில் இணையும்போது ஆறாம் அடுக்கு ஓடையாக மாறுகிறது.
 
இதனால் மூன்றாம், நான்காடு அடுக்கு நீரோடைகளில் என்ன நிகழ்ந்துள்ளது என்பதை ஆராய முடிவெடுத்தேன். இதற்காக நேரில் சென்று தடாகம் முழுவதும் கள ஆய்வு செய்து உள்ளூர் மக்களிடமும் விசாரித்தேன். அப்போது சங்கனூர் பள்ளத்திற்கு முன்பு அமைந்துள்ள கனுவாய் தடுப்பணையில் பல ஆண்டுகளாக தண்ணீர் வராததும் தெரியவந்தது.
 
இதை கள நிலவர சான்றுகளோடு அறிவியல் பூர்வமாக நிறுவ வேண்டும் என்பதற்காக க்யூ-ஜி.ஐ.எஸ் என்கிற மென்பொருளை யூ-ட்யூப் மூலம் கற்றுக் கொண்டேன். க்யூ-ஜி.ஐ.எஸ் மற்றும் கூகுள் எர்த் ஆகிய மென்பொருள்கள் உதவியுடன் செயற்கைகோள் புகைப்படங்களையும் வைத்து ஆராய்ந்ததில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக செங்கல் சூளைகளுக்காக ராட்சச இயந்திரங்களைக் கொண்டு பல அடி ஆழத்திற்கு மணல் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. நான்கு இடங்களில் மிகப்பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
 
சங்கனூர் பள்ளத்தில் இந்த நிலையென்றால் அதற்கு வருகிற நீரோடைகளையும் ஆராய முடிவு செய்தேன். அனுவாவி - கருப்பராயன் மற்றும் மல்லாண்டை - பொன்னூத்து என்கிற இரண்டு பிரதான நீரோடைகள் சங்கனூர் பள்ளத்தில் இணைகின்றன. நான் அனுவாவி - கருப்பராயன் நீரோடையை ஆய்விற்காக எடுத்துக் கொண்டேன்
இங்கு 47 ராட்சத செங்கல் மணல் குவாரிகள் நீரோடைகளின் கரைகளிலேயே தோண்டப்பட்டிருக்கின்றன. இவற்றை 34 செங்கல் சூளைகள் உபயோகிக்கின்றன. அவையும் நீரோடைகளின் வழித்தடத்திலேயே அமைந்துள்ளன. பல ஆண்டுகளாக அளவில்லாத முறை டிப்பர் லாரி போன்ற பெரிய வண்டிகள் இயக்கப்பட்டதால் இந்த பகுதி கடுமையாக பாதிப்படைந்துள்ளது," என்றார் அவர்.சென்னை உயர்நீதிமன்றம் தடாகம் பகுதியில் இயங்கி வந்த செங்கல் சூளைகளை மூட வேண்டும் என உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் செங்கல் சூளைகளால் தடாகம் பள்ளத்தாக்கில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
 
சாந்தலா தன்னுடைய ஆய்வு முடிவுகளை கடந்த ஜனவரி மாதம் புத்தகமாக தொகுத்திருந்தார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தடாகம் பள்ளத்தாக்கு தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ள மனு தாக்கல் செய்திருந்தார்.
 
"பிப்ரவரி 1-ம் தேதி தான் எனக்கு 18 வயது நிறைவடைந்தது. 18 வயது நிறைவடைந்தால் தான் நானாக வழக்கு தொடர முடியும் என்பதால் நூல் தயாரான பிறகும் ஒரு மாதம் காத்திருந்து என்னையும் வழக்கில் இணைத்துக் கொள்ள மனு தாக்கல் செய்தேன். அதில் என்னுடைய நூலை முக்கியமான ஆதாரமாக சமர்பித்தேன்.
 
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடாகம் பள்ளத்தாக்கில் உள்ள பாதிப்புகளை ஆராய அமைத்த குழுவில் என்னுடைய நூலை சமர்பிக்கும்படி கூறியது. அவர்களுடைய விசாரணையில் என் நூலையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளனர்.
 
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மே மாதம் நடைபெற இருக்கிறது. அடுத்த விசாரணையில் சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தின் மூலம் முறையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என வாதிட உள்ளேன்" என்றார் சாந்தலா
 
"சூழலியல் பாதுகாப்பு என்பதை உலக அளவில் எங்கோ ஓர் இடத்தில் நிகழ்வது போல பார்ப்பது தவறு. உள்ளூர் அளவில் தான் பார்க்க வேண்டும். என் வீட்டிற்கு அருகில் உள்ள சங்கனூர் பள்ளத்தில் தண்ணீர் ஏன் வரவில்லை என்கிற கேள்வி எனக்கு எழுந்தது, அந்த ஒரு கேள்வியிலிருந்து தான் என் ஆய்வு தொடங்கியது. ஒவ்வொரு கேள்வி எழ அதற்கான பதிலைத் தேடி தான் இந்த ஆய்வை மேற்கொண்டேன்.
 
செங்கல் சூளைகள் தற்போது இயங்கவில்லையென்றாலும் அதனால் இத்தனை ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் முறையாக ஆய்வு செய்யப்படவில்லை. என் ஆய்வு ஒரு சிறு பகுதி தான். தடாகம் பள்ளத்தாக்கு முழுமைக்கும் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை முழுமையாக ஆராய வேண்டும். பின்னர் அதை தடுத்து சீர் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அது வரை சட்டப் போராடம் நடத்தவும் தயாராக இருக்கிறேன்.
 
சூழலியல் சீர்கேட்டை கையாளவும் சூழலியல் பாதுகாப்பை முன்னிறுத்தவும் தடாகம் பள்ளத்தாக்கு ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும்" என்கிறார் சாந்தலா.