Last Modified: வியாழன், 25 பிப்ரவரி 2016 (20:05 IST)
'வேட்டையாட சட்ட அங்கீகாரம் வேண்டும்': கிழக்கு ஆதிவாசிகள்
இலங்கையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பில், தங்களின் வேட்டையாடும் உரிமைக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று கிழக்கு மாகாணத்தில் வாழும் ஆதிப் பழங்குடி சமூகத்தின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் மூதூர், வெருகல் மற்றும் வாகரை உள்ளிட்ட பிரதேசங்களிலுள்ள சில கிராமங்களில் ஆதிவாசி பழங்குடி சமூகத்தினர் வசித்து வருகின்றனர்
தாங்கள் வாழும் பிரதேச காடுகளில் வேட்டையாடுதற்கும் வேட்டையாடிய இறைச்சி உணவை சேமித்து வைப்பதற்கும் புதிய அரசியல் சாசனம் மூலம் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
புதிய அரசியல் சாசனம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை அறிவதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் சாசனம் தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்ட மக்களின் கருத்துக்களை அறிவதற்கான அமர்வு நேற்று செவ்வாய்க் கிழமையும் இன்றும் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்திலுள்ள ஆதிவாசி பழங்குடி சமூகத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அங்கு சென்று தமது சமூகம் சார்ந்த சில யோசனைகளை முன்வைத்தனர்.
சூழலை பாதுகாத்து இயற்கையோடு இணைந்து வாழும் உரிமை வழங்கப்பட வேண்டும், வனவளத்தை பாதுகாக்க சட்ட விரோத குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும், தமது வாழ்விட வனப் பகுதி சிறப்பு பாதுகாப்பு பகுதியாக அடையாளப்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.
கிழக்கு மாகாணத்தில் மூதூர், வெருகல் மற்றும் வாகரை உள்ளிட்ட பிரதேசங்களிலுள்ள சில கிராமங்களில் ஆதிவாசி பழங்குடி சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.
தங்களுக்கு என பேச்சு வழக்கு பூர்வீக மொழி ஒன்று இருந்தாலும் தமிழ்மொழி தான் பிரதான மொழியாக தங்களால் பேசப்பட்டு வருவதாக ஆதிப் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த வைரன் பாக்கியராஜா கூறுகின்றார்.
இலங்கைத் தீவின் பூர்வீக குடிமக்கள் என்ற வகையில் 'ஆட்புல ரீதியான சிறுபான்மைப் பழங்குடியினர்' என்ற அங்கீகாரம் புதிய அரசியல் சாசனத்தில் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற யோசனை தங்களால் முன் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
தங்களின் சமூக ரீதியான கலை, கலாசார பாரம்பரியங்கள், பண்பாடுகள், மரபுகள் மற்றும் நம்பிக்கைகள் புதிய அரசியல் சாசனம் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தமது யோசனைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.