ஜமுனா போரோ, தற்போது உலக அளவில் சிறந்த குத்துச்சண்டை வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இந்தியாவில் பெண்களுக்கான 54 கிலோ எடைப் பிரிவில் முதல் இடத்தில் உள்ளார்.
அசாமில் உள்ள ஒரு சிறிய நகரம்தான் தேகியாஜுலி. அங்குள்ள பெல்சிரி கிராமத்தில்தான் ஜமுனா பிறந்து வளர்ந்தார். எதையும் ஆர்வமாக கற்க கூடியவர்.
ஒருநாள் அவர் பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது சிலர் 'வூஷூ' என்று சொல்லக்கூடிய குங்ஃபூ பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். ஜமுனாவிற்கும் அதில் ஈடுபட வேண்டும் என்று ஆர்வம் பிறந்தது.
ஆரம்ப காலத்தில், ஏதேனும் ஒரு விளையாட்டில் இந்தியாவிற்காக விளையாடுவோம் என அவர் நம்பினார். வூஷூ அந்த இளம் பெண்ணிற்கு விளையாட்டுத்துறையில் அடி எடுத்து வைப்பதற்கான படிக்கல்லாக இருந்தது.
இருப்பினும் விரைவில் அவர் குத்துச் சண்டயை தேர்ந்தெடுத்தார். அந்த விளையாட்டில் அவரால் சாதிக்க முடியும் என அவர் நம்பினார்.
சிறுவயது போராட்டம்
ஒரு சிறிய கிராமத்திலிருந்து வருவது பல சவால்களைத் தரும். அதேபோலதான் ஜமுனாவிற்கு ஆரம்பக்காலத்தில் முறையான பயிற்சியாளர் கிடைக்கவில்லை.
இந்த விளையாட்டை நேசிப்பவர்கள் எல்லாம் சேர்ந்து தொழில்முறை வழிகாட்டுதல்கள் இல்லாமல் இதை பயிற்சி செய்தனர். ஜமுனாவும் அவருடன் இணைந்தார்.
குடும்ப உறவினர்களால் ஜமுனாவிற்கு பெரிய சவால்கள் இருந்தன. ஜமுனாவின் தந்தை ஜமுனாவின் சிறுவயதிலேயே இறந்துவிட்டார். எனவே அவரின் தாய் தனியாளாக இருந்து குழந்தைகளை வளர்த்தார். குடும்பத்தைக் காப்பாற்ற அவர் தேநீர் மற்றும் காய்கறிகள் விற்றார்.
விளையாட்டுக்கு தேவையான வசதிகளை பெறுவது மட்டும் சவாலாக இல்லை. தொடர்ந்து விளையாட்டை தொடருவதற்கும் பெரும் போராட்டங்களை சந்திக்க வேண்டியிருந்தது.
அவரின் உறவினர்களும், அக்கப்பக்கத்தினரும் அந்த விளையாட்டை கைவிடுமாறு கோரினர். அது பெண்களுக்கானது இல்லை என்றும், காயம் ஏற்பட்டால் முகம் பாதிக்கப்படும் என்றும், அது திருமணத்தில் தடை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கூறினர்.
இருப்பினும் தனது குடும்பத்தின் ஆதரவு ஜமுனாவுக்கு தொடர்ந்து கிடைத்தது. அதனால் அவர் தொடர்ந்து கடினமாக பயிற்சி செய்தார்.
கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி
ஜமுனாவின் கடின உழைப்பிற்கு 2010ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற பெண்களுக்கான குத்துச் சண்டை போட்டியில் பலன் கிடைத்தது. சப்-ஜூனியர் அளவில் (16 வயதுக்குட்பட்டோர்) அவர் தங்கப்பதக்கம் வென்றார்.
அது அவரது வாழ்வின் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது. தேசிய அளவில் விளையாடுவது என்பது, ஜமுனாவிற்கு சிறந்த பயிற்சியாளர் மற்றும் திறனை மேம்படுத்தும் பயிற்சி கிடைப்பதை உறுதிப்படுத்தும் என அர்த்தம். அது ஜமுனாவிற்கு பல வாய்ப்புகளை பெற்றுத் தந்தது.
அடுத்த முக்கிய தருணம் 2015ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. தைவானில் நடைபெற்ற உலக இளைஞர்களுக்கான குத்துச் சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார் ஜமுனா. சர்வதேச அளவில் விளையாடும்போது அழுத்தத்தை எதிர்கொள்வது எப்படி என்ற அனுபவத்தை அது அவருக்கு கற்றுத் தந்தது.
2018இல், செர்பியாவின் பெல்கிரேடில் நடைபெற்ற 56ஆவது சர்வதேச குத்துச் சண்டை போட்டியில் 54 கிலோ எடைப்பிரிவில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். அடுத்த வருடம், 2019ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற AIBA பெண்கள் உலக குத்துச் சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஒரு சிறிய கிராமத்திலிருந்து வந்து சர்வதேச அளவில் பதக்கங்களை வென்றது அவருக்கு பல பாராட்டுகளை பெற்று தந்தது. குறிப்பாக அவரின் மாநிலமான அசாமில்.
2019ஆம் ஆண்டு அசாம் மாநிலத்தின் முக்கிய ஊடக குழுமமான சதின் பிராடிதின்னின் விளையாட்டுத்துறையில் சிறப்பாக செயல்பட்டவருக்கான விருதை பெற்றார். இது தன் மனதிற்கு நெருக்கமான விருது என்று ஜமுனா கூறுகிறார்.
ஒலிம்பிக்கில் ஒருநாள் பதக்கம் வெல்லும் கனவுடன் இருக்கும் ஜமுனா, விளையாட்டுத்துறை பெண்களுக்கானது இல்லை என நினைப்பவர்களின் மனநிலை மாற வேண்டும் என்கிறார்.
நாட்டின் தொலைதூர மற்றும் கிராமப்புறங்களில் விளையாட்டில் ஈடுபடுவதற்கான பெரிய வசதிகள் இல்லை ஆனால் அங்கிருந்து பல சிறந்த விளையாட்டு வீர்ர்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றனர் என தனது அனுபவத்திலிருந்து பேசுகிறார் ஜமுனா.
மேலும் நாட்டின் விளையாட்டுத் துறை சார்ந்த அமைப்புகள் அம்மாதிரியான திறமைகளை கண்டறிய வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
(ஜமுனாவிற்கு பிபிசி அனுப்பிய மின்னஞ்சலில் கிடைத்த பதில்களை கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.)