சுனாமியால் உருகிய ஃபுகுஷிமா அணு உலை: ஆபத்தான எரிபொருள் அகற்றும் பணி துவக்கம்

Last Updated: செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (10:27 IST)
2011-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியினால் விபத்துக்குள்ளாகி உருகிய ஜப்பான் நாட்டு ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து அணுக்கரு எரிபொருளை அகற்றும் பணியைத் தொடங்கியுள்ளது அந்த அணு உலையை இயக்கிய நிறுவனம்.
 
மூன்றாம் எண் அணு உலைக்கு அருகே உள்ள எரிபொருள் இருப்பு வைக்கும் இடத்தில் இருந்து, எரிபொருள் ராடுகளை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் கருவி வெளியில் எடுக்கிறது.
 
2011-ம் ஆண்டு சுனாமியை அடுத்து ஏற்பட்ட ஃபுகுஷிமா அணு உலை விபத்து, மிகப்பெரிய அணுக் கதிர்வீச்சு மாசுபாட்டைத் தோற்றுவித்தது. உலகில் நடந்த மிகப் பெரிய அணு உலை விபத்துகளில் ஒன்றாக ஃபுகுஷிமா விபத்து கருதப்படுகிறது.
 
இந்தப் பகுதியில் இருந்து அணு எரிபொருளை அகற்றும் சிக்கலான பணி முடிய இரண்டாண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த கட்ட சுத்திகரிக்கும் பணி, மூன்றாம் எண் அணு உலைக்குள்ளேயே நடக்கும். மிகப்பெரிய அந்தப் பணியில் உலையின் ஆழத்தில் உருகிவிட்ட அணுக்கரு எரிபொருள் அகற்றப்படும்.
அணு உலைக் கட்டடத்தில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகள் குவிந்திருந்ததாலும், வேறு தொழில்நுட்பச் சிக்கல்களாலும், அணுக்கரு எரிபொருளை அகற்றும் பணி தாமதப்பட்டதாக இந்த அணு உலையை இயக்கிய டோக்கியோ எலக்ட்ரிக் கம்பெனி (டெப்கோ) செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
 
நிலநடுக்கம், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியினால், ஃபுகுஷிமா டாய்ச்சி அணு மின் நிலையத்தின் மூன்று உலைகள் உருகின. ஹைட்ரஜன் வெடிப்புகளால் இந்த வளாகம் சேதமானது. 
 
தற்போதைய எரிபொருள் அகற்றும் நடவடிக்கை மூலம், இருப்பில் உள்ள 500 கதிரியக்க சிலிண்டர்கள் கண்டெய்னர் குடுவைகளில் அடைக்கப்பட்டு, லாரி மூலம் வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தண்ணீருக்கடியில் வைத்துப் பாதுகாக்கப்படும். இந்த சிலிண்டர்கள் காற்றில் வெளிப்பட்டாலோ, உடைந்தாலோ ஆபத்தான கதிரியக்க வாயு வெளியாகும்.

இதில் மேலும் படிக்கவும் :