ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வெள்ளி, 7 ஜூன் 2019 (21:40 IST)

இஸ்ரேல்: ஒருபால் உறவுக்காரரை அமைச்சராக்கினார் நெத்தன்யாஹு

இஸ்ரேலில் தம்மை ஒருபாலுறவுக்காரர் என்று வெளிப்படையாக அறிவித்துக்கொண்ட ஒருவரை அமைச்சராக நியமித்திருக்கிறார் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு.
சட்ட அமைச்சராக இருந்த அயலட் ஷகீதை பதவி நீக்கம் செய்த நெத்தன்யாஹு தற்போது ஒஹானாவை அப்பதவியில் அமர்த்தியுள்ளார். நெத்தன்யாஹுவின் கூட்டணியில் இருந்த ஷகேத் கட்சியைச் சேர்ந்த அயலட் நீக்கப்பட்ட மூன்று நாள்களில் ஒஹானா சட்ட அமைச்சராகியுள்ளார்.
 
நெத்தன்யாஹு கூட்டணிக்கு கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் மீண்டும் அரசை அமைப்பதில் போதிய இடங்கள் கிடைக்கவில்லை .
 
இந்நிலையில் நெத்தன்யாஹுவின் நம்பிக்கைக்குரிய 43 வயது ஒஹானாவுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
புதுத் தேர்தலுக்கு நெத்தன்யாஹு தயாராகி வரும் வேளையில் ஒஹானாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
 
செப்டம்பர் மாதம் இஸ்ரேலியர்கள் மீண்டும் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். பிரதமர் அலுவலகம் '' ஒஹானா ஒரு முன்னாள் வழக்குரைஞர். அவருக்கு இந்த நீதித்துறை மிகவும் பரிச்சயமானது'' எனத் தெரிவித்துள்ளது.
 
பிரதமர் பதவியிலிருப்பவர் மீது எந்தவொரு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு விலக்கு அளிக்கும் ஒரு சர்ச்சைக்குரிய மசோதாவை நெத்தன்யாஹு கொண்டு வந்தபோது அதை ஆதரித்தவர் ஒஹானா. அவர் ஒரு தீவிர நெத்தன்யாஹு ஆதரவாளர்.
 
தன் மீது சுமத்தப்பட்ட லஞ்சம் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுக்கிறார் நெத்தன்யாஹு .
 
ஒஹானா ஒருபாலுறவு கொள்வோரின் உரிமைகளுக்காக போராடும் செயற்பாட்டாளர். இவர் ஒரு பால் திருமணத்தை ஆதரிப்பவர். இஸ்ரேலில் ஒருபாலுறவு திருமணம் அங்கீகரிக்கப்படுவத்தில்லை. முன்னதாக பாலின அடையாள அடைப்படையிலான பாகுபாடுகளுக்கு தடை விதிக்கும் ஒரு மசோதாவை ஆதரிக்கும் தனது கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக வாக்களித்தார் ஒஹானா.
 
இஸ்ரேலில் யூத சமூகம் ஒரு பாலுறவு உரிமைகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாடு கொண்டிருந்தபோதிலும் தற்போது அந்நாடு ஒருபாலின உறவு சமூகத்தினர் சட்டப்படி பாதுகாக்கப்படுவது குறித்து முற்போக்கான அணுகுமுறையை காட்டிவருகிறது.
 
வெளிப்படையாக தன்பாலின ஈர்ப்பாளராக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் ஒஹானா. கடந்த ஆண்டு டெல் அவிவுக்கு அருகேயுள்ள ஒரு இஸ்ரேலிய நகரத்தில் வெளிப்படையாக ஒரு பாலுறவுக்காரர் என அறியப்படும் ஒருவர் மேயராக பொறுப்பேற்றார்.