வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வெள்ளி, 19 ஜூலை 2019 (18:52 IST)

ஏரியா 51: வேற்றுகிரகவாசிகள் வசிக்கிறார்களா? அமெரிக்க மக்களின் ஆர்வத்துக்கு என்ன காரணம்?

அது ஒரு நகைச்சுவை போல தொடங்கியது. ஆனால் ஏரியா 51 அருகில் மக்கள் செல்லக் கூடாது என்று அமெரிக்க விமானப் படை கூறியுள்ளது. அமெரிக்காவில் நெவேடா மாகாணத்தில் உள்ள அதிகபட்ச ரகசிய இடமான ஏரியா 51ல் அத்துமீறி நுழைவதற்கான முகநூல் நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பதிலளிக்குமாறு கோரும் விண்ணப்பம் (ஆர்.எஸ்.வி.பி.) செய்திருந்தனர். அங்கு வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதாக சிலர் நம்புகின்றனர்.

``அவர்களுடைய துப்பாக்கிக் குண்டுகளைவிட நாம் வேகமாகச் செல்வோம். வேற்று கிரகவாசிகளை நாம் பார்ப்போம்'' என்று பொருள்படும் வகையில் ஆயிரக்கணக்கானோர் அந்த முகநூல் பக்கத்தில் கருத்துகள் பதிவிட்டுள்ளனர்.
``அமெரிக்கா மற்றும் அதன் சொத்துகளைப் பாதுகாக்க தாங்கள் தயாராக இருப்பதாக,'' வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையிடம் விமானப் படை பெண் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

முகநூல் நிகழ்வு (EVENT) பக்கத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள முகநூல் பயன்பாட்டாளர் ஜாக்சன் பர்னெஸ், ``ஹலோ அமெரிக்க அரசே, இது வெறும் நகைச்சுவை தான். இந்தத் திட்டத்தை அமல்படுத்தும் எண்ணம் எனக்குக் கிடையாது'' என்று கூறியுள்ளார்.

``இன்டர்நெட்டில் தம்ஸ்அப்கள் கிடைக்கும் என்பதற்காகவும், இது விளையாட்டாக இருக்கும் என்பதற்காகவும் இப்படி செய்தேன். உண்மையிலேயே ஏரியா 51ல் மக்கள் அத்துமீறி நுழைந்தால் நான் பொறுப்பாளியல்ல'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இதில் நகைச்சுவை இருப்பதாக விமானப்படை எடுத்துக் கொள்ளவில்லை.

``ஏரியா 51 என்பது அமெரிக்க விமானப் படையின் திறந்தவெளிப் பயிற்சி முகாம். அமெரிக்க ஆயுதப் படையினருக்குப் பயிற்சி அளிக்கும் பகுதிக்கு வர யாரும் முயற்சித்தால் அதை நாங்கள் தடுத்து நிறுத்துவோம்'' என்று பெண் செய்தித் தொடர்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஏரியா 51 பற்றிய செய்திகள் என்ன?

வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இருப்பது பற்றியும், வேற்றுக்கிரக பறக்கும் சாதனங்கள் பற்றி அமெரிக்க அரசிடம் தகவல்கள் உள்ளதாகவும், மக்களிடம் தெரிவிக்காமல் அவற்றை மறைத்து வைத்திருப்பதாகவும் சிலர் கருதுகின்றனர்.

2013 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட - ஏரியா 51 முகாமில் - பிடிபட்ட வேற்றுகிரகவாசிகள் வைக்கப்பட்டுள்ளனர் - அவர்களுடைய தொழில்நுட்பமும், பறக்கும் வாகனமும் அங்கே வைக்கப்பட்டிருக்கின்றன என்று அவர்கள் நினைக்கிறார்கள். இதை அமெரிக்க அரசு மறுத்து வருகிறது.

ஏரியா 51ல் பணியாற்றிய இயற்பியலாளர் என்று தம்மை கூறிக் கொண்ட பாப் லாஸர் என்பவர் அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றில் 1989ல் பேட்டி அளித்த போது, இந்தத் தகவல்கள் பரவத் தொடங்கின.

நகைச்சுவை நடிகர் ஜோ ரோகனின் போட்காஸ்ட்டில் சமீபத்தில் அவர் பங்கேற்றார். அவரைப் பற்றி நெட்பிலிக்ஸ்-ல் ஆவணப்படம் ஒன்றும் வெளியானது. அதுதான் அவருடைய கதை குறித்து புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

அடையாளம் தெரியாத பறக்கும் வாகனத்தை எடுத்துச் செல்வதில் தாம் பணியாற்றியதாகவும், பூமியில் வேற்றுகிரகவாசிகள் இருப்பதை விவரிக்கும் அரசு ஆவணங்களை தாம் படித்ததாகவும் லாஸர் கூறியிருந்தார்.

அவர் சொன்னவற்றுக்கு உறுதியான ஆதாரங்கள் அல்லது அத்தாட்சி எதுவும் அவரிடம் இல்லை. அவர் குறிப்பிடும் இயற்பியல் பல்கலைக்கழகப் பட்டமும் இல்லை - ஆனால் ஏரியா 51 பற்றிய கதைகளை பரபரப்பாக்குவதில் அவர் நிச்சயமாக உதவியாக இருந்திருக்கிறார்.

அடையாளம் தெரியாக பறக்கும் வாகனங்களின் புதிரும், பழமையான நம்பிக்கையும் என்ற புத்தகத்தை எழுதிய தாமஸ் புல்லர்டு பின்வருமாறு கூறியுள்ளார் : ``வியட்நாம் மற்றும் வாட்டர்கேட் நிகழ்வுகளுக்கு பிறகு அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான நம்பகத்தன்மை குறைந்துவிட்ட நிலையில், ரோஸ்வெல் மற்றும் ஏரியா 51 ஆகியவை அரசின் இரட்டை வேட நிலையின் மாறுபட்ட வார்த்தைகள் என்ற அளவில் பார்க்கப்படுகின்றன'' என்று குறிப்பிட்டுள்ளார்.

1947ல் வான்வழியாக வந்த ஒரு பொருள் நியூ மெக்சிகோவில் விழுந்து நொறுங்கிய இடம் ரோஸ்வெல்.

அது வானிலை பலூன் என்று ராணுவம் கூறுகிறது. ஆனால், அது விபத்தில் சிக்கிய அடையாளம் தெரியாத (வேற்றுக் கிரக) பறக்கும் வாகனம் என்றும், அது மூடி மறைக்கப்பட்டுவிட்டது என்றும் பரவலாகப் பேசப்படுகிறது.

உண்மையிலேயே அது அணு பரிசோதனை கண்காணிப்பு பலூன் என்று 1990களில் அமெரிக்க அரசு கூறியபோதிலும், அந்த நிகழ்வு நிறைய கவனத்தை ஈர்ப்பதாக இன்னும் உள்ளது. அதுபற்றிய தகவல்கள் மூடி மறைக்கப் படுவதாகவும் கருதப்படுகிறது.

ஏரியா 51 குறித்து மக்களிடம் ஏற்பட்டுள்ள தாக்கம்

•பவுல் - இந்தத் திரைப்படத்தில் சைமன் பெக் மற்றும் நிக் ப்ராஸ்ட் நடித்திருந்தனர். அமெரிக்காவில் பார்க்க வேண்டிய, அடையாளம் தெரியாத பறக்கும் வாகனங்களை மக்கள் கவனித்துள்ளஇடங்களுக்கு, காமிக் புத்தகப் பிரியர்கள் இருவர் பயணம் செல்வது போல இந்தப் படம் உள்ளது. போகிற வழியில் பவுல் என்ற வேற்றுகிரகவாசியை அவர்கள் சந்திக்கின்றனர். அவர் ஏரியா 51ல் சிறை வைக்கப்பட்டவராக இருக்கிறார்.

•இண்டிபென்டன்ஸ் டே - இந்தத் திரைப்படத்தில் அடையாளம் தெரியாத வேற்று கிரகவாசிகளால் உலகெங்கும் நடைபெறும் தாக்குதலில் சிக்கி மக்கள் கூட்டம் ஒன்று நிவேடா பாலைவனத்தில் சிக்கிக் கொள்வதாக 1996 காலத்தைச் சேர்ந்த இந்தப் படம் அமைந்துள்ளது. பிடிபட்ட வேற்றுகிரகவாசியை ஏரியா 51க்கு அவர்கள் கொண்டு செல்கிறார்கள். 1940களில் ரோஸ்வெல் சம்பவத்துக்குப் பிறகு, அடையாலம் தெரியாத பறக்கும் வாகனத்தின் தகவல் மறைக்கப்பட்ட மோசடியில் அரசுக்குத் தொடர்பு இருப்பதை அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள்.

•எக்ஸ் - பைல்கள் - Sci-fi தொலைக்காட்சித் தொடரில் ஆறாவது பகுதியில், மத்திய புலனாய்வு அமைப்பின் சிறப்பு ஏஜென்ட்கள் பாக்ஸ் முல்டர், டானா ஸ்கல்லி ஆகியோர் ஏரியா 51-ஐ பார்வையிடுகிறார்கள் என்பது போல கதை அமைப்பு இருக்கும். விநோதமாகத் தோன்றும் பறக்கும் வாகனம் ஒன்றை அவர்கள் பார்க்கிறார்கள். அது அடையாளம் தெரியாத பறக்கும் வாகனமாக இருக்கலாம் என்று கருதப் படுகிறது.

•ஏரியா 51 - 2005 ஆம் ஆண்டில் மிட்வே கேம்ஸ் நிறுவனம் ஒரு விடியோ கேம் உருவாக்கியது. வேற்று கிரக வீரர்களை நீங்கள் சுட்டு வீழ்த்துகிறீர்கள். மாற்றம் செய்யப்பட்ட அந்த வேற்று கிரகவாசிகள் விமானப் படை தளத்தில் உருவாக்கப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பதாக அந்த விளையாட்டு இருந்தது.

ஏரியா 51 எங்கே இருக்கிறது?

லாஸ் வேகாஸில் இருந்து வடமேற்கே 80 மைல்கள் தொலைவில் நிவேடாவில் உள்ள ராணுவப் பயிற்சி முகாம் தான் ஏரியா 51 எனப்படுகிறது.

நிவேடா பரிசோதனை மற்றும் பயிற்சி வளாகம் என்று அதை அமெரிக்க அரசு குறிப்பிடுகிறது. அது பரவலான எட்வர்ட்ஸ் விமானப் படை தளத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது.

அமெரிக்காவில் உள்ள பல ராணுவ முகாம்களைப் போல, இதன் முதன்மையான பயன்பாடு பற்றிய தகவல்கள் மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

முகநூல் கமெண்ட்களில் உள்ளதைப் போல அந்த இடத்தில் அத்துமீறி நுழைவது சிரமமான காரியம் - அது மக்களுக்குத் தடை செய்யப்பட்ட பகுதி. வெளி வளாகத்தில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் துறை அனுமதி இல்லாமல், அந்தப் பகுதிக்கு மேலே உள்ள வான்வெளியில், நுழைவதும் கஷ்டமான காரியம். அதற்கு அனுமதி தரப்படுவது கிடையாது.

ஏரியா 51 எப்படி இருக்கும்?
``நாங்கள் விமானப்படை தளத்திற்குச் செல்லவில்லை. ஆனால், பாலைவனத்தில் எவ்வளவு தொலைவுக்குச் செல்ல முடியுமோ அவ்வளவு தொலைவு செல்வோம், நம் அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் என நினைத்துப் பயணித்தோம் - விலகி இருக்குமாறு அமெரிக்க ராணுவத்தின் மிரட்டும் வகையிலான எச்சரிக்கைகளை மட்டுமே நாங்கள் பார்க்க முடிந்தது'' என்று சினியட் கர்வன் தெரிவித்தார்.

அவர் முன்பு ரேடியோ 1 நியூஸ்பீட் -ல் பொழுதுபோக்குப் பிரிவு செய்தியாளராக இருந்தார். இந்தக் கட்டுரை தொடர்பான விஷயங்களைக் கையாண்டதை அடுத்து, எங்களுடைய முதன்மையான வேற்றுகிரகவாசி செய்தியாளராகிவிட்டார். 2014ல் சாலைப் பயணமாக அவர் ஏரியா 51-க்குச் சென்றார்.

``உயர் ரகசியத்தன்மை உள்ள அந்த ராணுவ முகாமை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளுமே வேற்றுகிரகம் என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தன.''

``அங்கு `பூமிவாசிகளை வரவேற்கிறோம்' என்ற அறிவிப்புப் பலகை, நெடுஞ்சாலையில் இருந்தது''

``பெட்ரோல் நிலையமும் வேற்றுகிரகத்தைப் போலவே அமைக்கப்பட்டிருந்தது. அலுவலர்களும் அதுபோலவே இருந்தனர். கவுண்டரில் இருந்த பெண்மணியும் போரடித்து இருப்பவரைப் போல இருந்தார்.''


``அங்கு சுற்றியிருந்த சில கட்டடங்களின் சுவர்களில் கார்ட்டூன் வேறுகிரகவாசிகள், அடையாளம் தெரியாத பறக்கும் வாகனங்களின் படங்கள் இருந்தன. அவற்றில் பிரபலமான லிட்டில் ஏரியன் மோட்டலும் ஒன்று.''
``புகைப்படம் எடுத்துக் கொள்ளத் தூண்டும் நிறைய அம்சங்கள் இருந்தன; ஆனால் ஏரியா 51 ன் பாதுகாப்பான வாயிலில் இருந்து நாங்கள் கண்காணிக்கப்படுகிறோமா என்று எங்களுக்கு சிறிது அச்சம் இருந்தது.''