1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 7 மே 2022 (14:32 IST)

ஒரே பிரசவத்தில் பிறந்த 9 குழந்தைகளின் நிலை இப்போது எப்படி?

2021 ஆம் ஆண்டு மே 4ஆம் தேதியன்று, மொராக்கோவின் காசாப்ளாங்காவில் உள்ள ஐன் போர்ஜா மருத்துவமனையில் மாலியைச் சேர்ந்த ஹலிமா சிஸ்ஸேவுக்கு ஒன்பது குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்தன. 

 
உலகளவில் உயிரோடு ஒரே பிரசவத்தில் அதிகபட்சமான குழந்தைகள் பிறந்துள்ளது இதுவே முதல்முறை. உலகில் ஒரே பிரசவத்தில் அப்போது பிறந்த ஒன்பது குழந்தைகளுக்கும் இந்த ஆண்டு மே 4-ஆம் தேதியோடு ஒரு வயது நிறைவடைகிறது. இந்நிலையில் தங்கள் முதல் பிறந்தநாளைக் கொண்டாடும் ஒன்பது குழந்தைகளும் "முழு ஆரோக்கியத்துடன்" இருப்பதாக அவர்களின் தந்தை பிபிசியிடம் தெரிவித்தார்.
 
மாலி ராணுவத்தில் அதிகாரியாக இருக்கும் அப்தெல்காதர் ஆர்பி, "அவர்கள் அனைவரும் இப்போது தவழுகிறார்கள். சிலர் எழுந்து உட்காருகிறார்கள், எதையாவது பிடித்துக் கொண்டு நடக்கக்கூட செய்கிறார்கள்," என்று கூறியுள்ளார். ஒன்பது குழந்தைகளும் இன்னமும் அவர்கள் பிறந்த மொராக்கோவில் அமைந்துள்ள மருத்துவமனையின் பராமரிப்பில் இருக்கின்றனர்.
 
26 வயதான அவர்களுடைய தாயார் ஹலிமா சிஸ்ஸேவும் நலமுடன் இருப்பதாக அவர் கூறினார். அப்தெல்காதர் ஆர்பி, பிபிசி ஆஃப்ரிக்காவிடம் பேசியபோது, "இது எளிதானது இல்லைதான். ஆனால், மிகவும் சிறப்பான விஷயம். சில நேரங்களில் சோர்வாக இருந்தாலும், அனைத்து குழந்தைகளும் சரியான ஆரோக்கியத்துடன் இருப்பதைப் பார்க்கையில், நாங்கள் நிம்மதி அடைகிறோம். எல்லாவற்றையும் மறந்துவிடுகிறோம்," என்று கூறினார்.
 
அவர் ஆறு மாதங்களுக்குப் பிறகு, 3 வயதான தனது மூத்த மகள் சௌதாவுடன் மொராக்கோவுக்குத் திரும்பினார். மாலியில் உள்ள மருத்துவர்கள் தொடக்கத்தில் சிஸ்ஸே ஏழு குழந்தைகளைச் சுமந்திருப்பதாகக் கருதினார்கள். மேலும் 2021-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் தேதியன்று, அரசாங்க உத்தரவின் கீழ், அவர் காசாப்ளங்காவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
அப்போதுதான் அவர் ஒன்பது குழந்தைகளைச் சுமந்து கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. 30 வாரங்களில் 2021 மே 4-ஆம் தேதியன்று சிஸ்ஸே குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அவருக்குப் பிறந்தது 5 பெண் குழந்தைகள் மற்றும் 4 ஆண் குழந்தைகள் எனவும் ஒவ்வொருவரும் 500 கிராம் முதல் 1 கிலோ வரை எடை கொண்டிருந்தனர் எனவும் மருத்துவமனை இயக்குநர் யூசுஃப் அலாவ் உறுதி செய்தார்.
 
"நான் என் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மீண்டும் இணைவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்," என்ற ஆர்பி, செவிலியர்கள் மற்றும் மருத்துவமனையில் இருக்கும் சிலருடன் ஒரு சிறிய பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவர்கள் ஈடுபடுவதாகவும் கூறினார்.
"முதல் வருடத்தைவிடச் சிறப்பாக எதுவுமில்லை. நாங்கள் அனுபவிக்கப் போகும் இந்த சிறந்த தருணத்தை நாங்கள் என்றும் நினைவில் கொள்வோம்."
 
ஒரே பிரசவத்தில் அதிக குழந்தைகள் பிறந்துள்ளதாக கின்னஸ் சாதனையில் இந்தக் குழந்தைகள் இடம் பிடித்துள்ளனர். 2021-ஆம் ஆண்டு மே 4-ஆம் தேதியன்று பிறப்பதற்கு முன்னதாக, சிஸ்ஸே சிறப்பு சிகிச்சைக்காக மாலி அரசாங்கத்தால் மொராக்கோவிற்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.
 
ஒரே பிரசவத்தில் பல குழந்தைகள் பிறப்பது ஆபத்தானது. கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக இருக்கும் நாடுகளில், ஒரே பிரசவத்தில் நான்கு கருவுக்கு மேல் கொண்டிருக்கும் தாய்மார்கள், அவற்றில் சில கருக்களைக் கலைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
குழந்தைகள் குறை பிரசவத்தில் முன்கூட்டியே பிறப்பது, செப்சிஸ், பெருமூளை வாதம் போன்ற உடல்நலப் பிரச்னைகளை உருவாக்கும் அபாயங்களும் உள்ளன. சிஸ்ஸேவும் குழந்தைகளும் தற்போது "மருத்துவமயமாக்கப்பட்ட ஃப்ளாட்" என்று குழந்தைகளின் தந்தை விவரித்த இடத்தில் வசித்து வருகின்றனர். இது குழந்தைகள் பிறந்த காசாப்ளாங்காவில் உள்ள ஐன் போர்ஜா மருத்துவமனையின் உரிமையாளர்களுக்குச் சொந்தமானது.
 
"இங்கு என் மனைவியோடு இருக்கும் செவிலியர்கள், குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள உதவுகிறார்கள். மருத்துவமனை அவர்களுக்கு இரவு, பகல் என எல்லா நேரங்களிலும் என்ன சாப்பிடக் கொடுக்க வேண்டும் என்ற பட்டியலைக் கொடுத்துள்ளது," என்று ஆர்பி கூறுகிறார்.
 
அவர்களின் ஆண் குழந்தைகளுக்கு முகமது, ஓமர், எல்ஹாட்ஜி, பா என்றும், பெண் குழந்தைகளுக்கு, கடிடியா, ஃபடோவ்மா, ஹவா, அடாமா, ஓமூ என்றும் பெயரிடப்பட்டுள்ளனர். ஒன்பது குழந்தைகளில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தவமான ஆளுமை உள்ளதாக அவர்களின் தந்தை ஆர்பி கூறுகிறார்.
 
"அவர்கள் அனைவருக்கும் வெவ்வேறு பண்புகள் உள்ளன. சிலர் அமைதியாக இருக்கிறார்கள். சிலர் அதிகமாகச் சத்தம் போடுகிறார்கள், அதிகமாக அழுகிறார்கள். சிலர் எல்லா நேரத்திலும் தூக்கிக் கொண்டேயிருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அவர்கள் அனைவருமே மிகவும் வித்தியாசமாக இருக்கிறார்கள். இது முற்றிலும் இயல்பானது.
 
ஒன்பது குழந்தைகள் மற்றும் அவர்களின் தாயாருக்கான பராமரிப்பு மற்றும் சிகிச்சைக்காக மாலி அரசு அனைத்தையும் செய்து கொடுத்துள்ளது. இது எளிதானதல்ல. ஆனால் மிக அழகாகவும் ஆறுதலாகவும் உள்ளது," என்று அவர் கூறினார். மேலும் ஆர்பி மாலி அரசாங்கத்தின் உதவிக்கு நன்றி தெரிவித்தார்.
 
அவர்கள் இன்னும் மாலிக்குச் செல்லவில்லை. ஆனால், அவர்கள் ஏற்கெனவே நாட்டில் மிகவும் பிரபலமாக உள்ளனர் என்று அவர்களின் தந்தை கூறினார். "அவர்களுடைய குடும்பம், நண்பர்கள், எங்கள் சொந்த கிராமம், ஏன் மொத்த நாடுமே, குழந்தைகளைத் தங்கள் கண்களால் பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளனர்," என்றவர் குழந்தை பெற்றுக்கொள்ள முயலும் தம்பதிகளுக்கு ஒரு செய்தியையும் வைத்துள்ளார்.
 
"இன்னும் குழந்தை இல்லாமல் இருக்கும் அனைவரையும் கடவுள் ஆசீர்வதிப்பார் என்று நான் நம்புகிறேன். இது அழகானது, உண்மையான பொக்கிஷம். சிஸ்ஸேவின் ஒன்பது குழந்தைகளும் கின்னஸில் இடம் பிடிப்பதற்கு முன்பாக, 2009-ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகளைப் பெற்றெடுத்து, நாடியா சுலேமான் மற்றும் அவருடைய 8 குழந்தைகள் கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்தார்கள்.