தீண்டாமைச் சுவர்: நில உரிமையாளரை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவு
மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், நிலத்தின் உரிமையாளர் சிவசுப்பிரமணியத்தையும் எதிர் மனுதாரராக சேர்க்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் துணிக்கடை உரிமையாளர் ஒருவர் தன் வீட்டைச் சுற்றிக் கட்டிவைத்திருந்த 20 அடி உயரச் சுவர் மழையின் காரணமாக இடிந்து அருகில் உள்ள வீடுகளின் மீது விழுந்தது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். அந்த வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியம் என்பவர் கைதுசெய்யப்பட்டார்.
இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு போதிய இழப்பீடு தரவேண்டும், சுவரைக் கட்ட அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், எந்த அளவுக்கு சுவரை உயரமாகக் கட்டலாம் என்பது குறித்து என்ன விதிமுறைகள் இருக்கின்றன என அரசுத் தரப்பிடம் கேள்வியெழுப்பினர். விதிமுறைகளை மீறி சுவரைக் கட்டிய நில உரிமையாளரை ஏன் எதிர்மனுதாரராகச் சேர்க்கவில்லையெனக் கேள்வியெழுப்பிய நீதிமன்றம், நில உரிமையாளரையும் விதிமுறைகளை மீறி அனுமதி அளித்த அரசு அதிகாரிகளையும் எதிர் மனுதாரராகச் சேர்த்து புதிய மனுவைத் தாக்கல்செய்யும்படி உத்தரவிட்டது. வழக்கு ஜனவரி 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.